No menu items!

பரவும் குரங்கு அம்மை | ஆபத்தா? அச்சமில்லையா?

பரவும் குரங்கு அம்மை | ஆபத்தா? அச்சமில்லையா?

கொரோனா அச்சுறுத்தலே இன்னும் முழுமையாக முடியவில்லை; அதற்குள் 12 நாடுகளில் பரவி உலகளவில் மக்களை மிரட்டி வருகிறது குரங்கு அம்மை என்ற புதிய நோய். உலக அளவில் 92 பேருக்கு இந்த நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 28 பேர் இந்த நோயின் அறிகுறிகளை கொண்டுள்ளனர் என்கிறது உலக சுகாதார அமைப்பு. இதனையடுத்து, இந்தியாவிலும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நோய் தொற்று முதன்முதலில் 1958ஆம் ஆண்டே ஆப்ரிக்க நாடுகளில் குரங்குகளிடம் கண்டறியப்பட்டது. குரங்குகளிடம் மட்டும் காணப்பட்டது தற்போது மனிதர்களுக்கும் பரவ தொடங்கியுள்ளதுதான் உலகளவில் கவலையை உருவாக்கியுள்ளது.

ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த நோய் பரவி வந்த நிலையில் தற்போது ஆப்பிரிக்காவை தாண்டி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உடலில் தடுப்புகள், கொப்புளங்கள், தொடர் காய்ச்சல் உள்ளிட்டவை இந்நோயின் அறிகுறியாக உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சின்னம்மை போலவே உடலில் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்புளங்கள் மாறுகிறது. பின்னர் 2-4 வாரங்களில் உதிர்ந்து விடுகிறது, உயிருக்கு ஆபத்தில்லை என கூறப்படுகிறது.

இந்தியாவில் இந்த நோய் பரவ வாய்ப்புள்ளதா? சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் அவர்களிடம் பேசினோம்.

“இந்த நோய் முதலில் குரங்குகளிடம் மட்டுமே பரவியது. ஆனால், தற்போது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் நெருக்கம் அதிகரித்துள்ளதால் மனிதர்களுக்கும் பரவி வருகிறது.

இந்த நோய் இன்னும் இந்தியாவில் கண்டறியப்படவில்லை. என்றாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் அரசு தரப்பில், குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களை, இந்த நோய்க்கான பரிசோதனைக்கு உட்படுத்தி அனுமதித்தல் அவசியம்.

இந்த நோயால் பாதிக்கப்படுவதால் பெரிய குறைபாடுகள் ஏற்படுவதில்லை. உடலில் கொப்பளங்கள் தோன்றும். பிறகு அவை காய்ந்து உதிர்ந்து விடுகிறது. கொரோனா போலவே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொடுதல் மூலமாகவும் பரவும் தன்மையை இந்த நோய் கொண்டுள்ளது.

இந்த நோய் பரவலை தவிர்க்க அறிகுறி இருப்பவர்களிடம் நெருக்கமான தொடர்புகளை தவிர்த்தல் அவசியம்.

மேலும் சுகாதாரமான பழக்கங்கள், ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் என அனைத்தையும் கடைபிடிப்பது நல்லது.

இந்த நோய்க்கு இதுவரை தனிப்பட்ட தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், தற்போது சிக்கன் பாக்ஸ் என்கிற சின்னம்மை நோய் மருந்துகள் உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், இந்த நோய் குறித்த கூடுதல் ஆராய்ச்சிகளில் இதற்கான தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படும்” என்றார்.

கவனமாய் இருப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...