No menu items!

ஜனாதிபதியாகிறாரா தமிழிசை? – மிஸ் ரகசியா

ஜனாதிபதியாகிறாரா தமிழிசை? – மிஸ் ரகசியா

“கியா சாப்.. கெய்சா ஹும்?. கானா காயேகா நா…” என்று அரைகுறை ஹிந்தியில் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் ரகசியா.

“திமுக அலுவலக திறப்பு விழாவுக்காக டெல்லிக்கு சென்று வந்ததை சொல்லிக் காட்ட இந்தில பேசுறியா?”

“நான் மட்டுமல்ல. அடுத்த நாடாளுமன்ற  தேர்தலின்போது டெல்லியில் மற்ற தலைவர்களிடம் அடிக்கடி இந்தியில் பேச வேண்டியிருக்கும் என்பதால் திமுக தலைவர்கள் பலரும் என்னைப்போல் தத்தக்கா.. பித்தக்கா.. என்று இந்தியில் பேசி கற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்”

“திமுக அலுவலக திறப்பு விழா எப்படி நடந்தது?”

“முதல்வர் ரொம்பவே ஹேப்பி. அலுவலக திறப்பு விழாவும், தன் டெல்லி பயணமும் வெற்றிகரமாக முடிந்திருப்பதாக மகிழ்ச்சியில் இருக்கிறார் முதல்வர். இனி அடிக்கடி டெல்லிக்கு சென்று தனது முக்கியத்துவத்தை அங்கு அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. 

ஸ்டாலின் டெல்லியில் இருந்தபோது  ரஷ்யாவின் முக்கிய அமைச்சர் ஒருவரும் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். உக்ரைன் – ரஷ்யா போர் தீவிரமாக நடைபெற்று வரும் இந்தச் சூழலிலும்  ரஷ்ய மந்திரியைவிட ஸ்டாலினுக்கு டெல்லி பத்திரிகைகள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன. இந்த விஷயத்திலும் ஸ்டாலின் ஹேப்பி.”

“கவர்னரை பத்தி டெல்லில பிரதமர், உள்துறை அமைச்சர் கிட்ட முதல்வர் கம்ப்ளைண்ட் பண்ணார்னு செய்தி வந்ததே, அப்படியா?”

“கவர்னரோட இப்போதைய நடவடிக்கைகள் மட்டுமில்ல, அடுத்து அவர் தமிழ்நாட்டுக்காக திட்டமிடுற விஷயங்கள்தாம் திமுகவை பதற்றமடைய வைத்திருக்கிறது. சமீபத்தில சென்னைல  ராம நவமி விழாவுல கலந்துக்கிட்ட கவர்னர் ராமராஜ்யம் பத்தி பேசுனாரு. அடுத்து ரம்ஜான் நோன்பு திறப்பு விழாவுலயும் கவர்னர் கலந்துக்கப் போறாராம். கவர்னர் ஏன் இதையெல்லாம் செய்யனும்னு திமுகவினருக்கு எரிச்சலா இருக்கு. அதன் வெளிப்பாடுதான் நாடாளுமன்றத்துல திமுக கவர்னருக்கு எதிரா முழக்கம் எழுப்பினது. மசோதாக்களை அனுப்பாம வச்சிருக்காரு என்ற குற்றச்சாட்டைத் தாண்டி அவர் அரசியல் செய்யறார்ன்றதுதான் திமுகவின் கோபத்துக்கு காரணம்”

“விழாவுல கலந்துக்கிறதுலாம் அரசியலா?”

“தேசிய பாதுகாப்பு ஆலோசகரா இருக்கிற அஜித் தோவலுடன் ஆளுநர் ரவி நெருக்கமா இருக்கிறார். இந்த நெருக்கமும் நல்லதில்லை என்று திமுக கருதுகிறது”

“ தமிழ்நாட்டு மேல பாஜக தீவிர ஆர்வத்துல இருக்காங்க போல”

“ ஆமாம், நாடாளுமன்றத் தேர்தல்ல கனிசமான இடங்களைப் பிடிக்கணும், 2026 சட்டப்பேரவைத் தேர்தல்ல இரண்டாம் இடமாவது பிடிக்கணும்ங்கிறது அவங்க நோக்கமா இருக்கிறது. அதற்கான வேலைகளை ஆரம்பிச்சிட்டாங்க. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பாதுகாப்பு கொடுத்திருக்காங்க. அவர் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுடன் தினசரி தொடர்பில் இருக்கிறார். ஆளும் கட்சியை பலவீனமாக்குவதற்கு முன்பு எதிர்க் கட்சிகளை பலவீனமாக்க வேண்டும் என்று பாஜக காய்களை நகர்த்துகிறது. அதற்காக சமீபத்தில் வட மாவட்டத்திலுள்ள ஆன்மீக அம்மாவை பாஜக மேலிடம் சந்தித்திருக்கிறது”

“ ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?”

“ அதான் ஆன்மீக அரசியல்” சிரித்த ரகசியா தகவல்களை தொடர்ந்தார்.

“ ஆன்மீக அம்மா மூலம் வட பகுதியில் பலமாக இருக்கும் கட்சியை பலவீனமாக்கும் முயற்சியை எடுத்திருக்கிறார்கள். மாம்பழ சீசன் தொடங்கும் போது முயற்சிகளின் தாக்கம் தெரியும் என்கிறார்கள். அந்தக் கட்சியிலிருந்து பலர் வெளியேறி புதுக் கட்சி தொடங்குவதற்கும் வாய்ப்பிருக்கிறதாம். அந்தக் கட்சியின் பெரியவர் இது குறித்து வருத்தப்பட்டிருக்கிறார். கூட்டணியெல்லாம் வைத்தோம். இப்போது இப்படி முயற்சி செய்கிறார்கள் என்று புலம்பியிருக்கிறார். பாவம். மாற்றம் வரும் முன்னேற்றம் வரும் என்று இருந்த கட்சி இப்போது கவலையில் இருக்கிறது”

“ அதிமுகவுக்கும் இதே சிக்கல் என்கிறார்களே”

“ஆமாம். ஒற்றைத் தலைமை என்ற கோஷத்தை முன் வைக்க வேண்டும், சசிகலாவை கொண்டு வர வேண்டும் என்று சில அதிமுக முன்னணியினருக்கு டெல்லி மேலிடத்திலிருந்து  உத்தரவுகள் வந்திருக்கிறதாம். சசிகலாவை முன்னிறுத்த முடியவில்லை என்றால் செங்கோட்டையனை முன்னிறுத்தவும் Plan B  போட்டு வைத்திருக்கிறார்களாம். ஜெயலலிதாவின் சமையல்கார அம்மாவின் மரணத்துக்கு வந்திருந்த ஒபிஎஸ்ஸின் மகன் சசிகலாவை சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வந்திருக்கிறது.”

டெல்லியில் வேறு என்ன விசேஷம்”

“இப்போதைக்கு ஜனாதிபதி தேர்தலைப் பற்றித்தான் டெல்லியில் பேச்சாக இருக்கிறது. துணை ஜனாதிபதியாக உள்ள தன்னைத்தான் ஜனாதிபதி தேர்தலின் நிறுத்துவார்கள்  என்று வெங்கய்யா நாயுடு நம்புகிறார். ஆனால் பாஜக தலைவர்கள் பலருக்கும் அதில் விருப்பம் இல்லையாம். ஆர்எஸ்எஸ்ஸுக்கும் அதில் ஆர்வமில்லாத நிலையில் புதிதாக ஒருவர் அப்பதவிக்கு நிறுத்தப்படுவார் என்ற பேச்சு அடிபடுகிறது.”

“ஜனாதிபதி தேர்தலில் மற்ற கட்சிகளுடைய ஆதரவு இல்லாமல்  வெற்றி பெறவைக்கக்கூடிய சக்தி பாஜகவுக்கு உள்ளதா?”

“சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலுக்குப் பிறகு பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது. பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தற்போது 17 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கின்றன.  ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 10,98,903 வாக்குகள் இருக்கின்றன. இதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டசபை முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் 6,264 மதிப்புள்ள வாக்குகள் பதிவாகாது.   தங்கள் வேட்பாளரை வெற்றிபெறவைக்க வேண்டுமானால் பாஜகவுக்கு   5,46,320 வாக்குகள் தேவைப்படுகின்றன. இதில் தற்போது பாஜகவுக்கு தனியாக  4,65,797 வாக்குகள் உள்ளன. அதன் கூட்டணி கட்சிகளுக்கு 71,329 வாக்குகள் உள்ளன. இரண்டையும் கூட்டினால் 5,37,126 வாக்குகள் வருகின்றன. இதன்படி பார்த்தால் பாஜகவுக்கு தங்கள் வேட்பாளரை வெற்றிபெற வைக்க இன்னும் 9,194 வாக்குகள் மட்டுமே தேவை. தேர்தலுக்கு முன் இந்த வாக்குகளையும் பெற்றுவிடலாம் என்று பாஜக நம்புகிறது”

“ஓட்டு கணக்குலாம் சொல்றியே..புள்ளிவிவரம் ஃபிங்கர் டிப்ஸ்ல வச்சிருக்க?”

“இதெல்லாம் சொன்னாதான்  நம்பிக்கை வரும். சும்மா கிசுகிசு மாதிரி சொன்னா நீங்க நம்ப மாட்டிங்கல”

“அதுவும் கரெக்ட்தான். சரி, ஜனாதிபதி தேர்தலுக்கு யாரெல்லாம் போட்டி போடப் போறாங்க?’

“பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சட்டீஸ்கர் மாநில ஆளுநர் அனுசூயா உகி (Anusuiya Uikey) அல்லது ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு (Draupadi Murmu) ஆகியோரை நிறுத்தலாம் என்று பாஜகவில் ஒரு பிரிவினர் தலைமைக்கு  ஆலோசனை வழங்கியுள்ளனர். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இவர்களுக்கு சாதகமாக இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்தர்ராஜனின் பெயரும் அடிபடுகிறது. அவரை ஜனாதிபதி ஆக்கினால் தமிழகத்தில் தங்கள் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளலாம் என பாஜக நம்புகிறது. ஒருவேளை மீண்டும்  ஆண்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக இருந்தால் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு அந்த வாய்ப்பை வழங்கலாம். அதன்மூலம் தாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்ற கருத்தை நிலைநிறுத்தலாம் என்று பாஜக தலைவர்கள் கணக்குப் போடுகிறார்கள்.”

“துணை ஜனாதிபதியாக வெங்கய்யா நாயுடு தொடர்வாரா?”

“இப்பதவிக்கு  ராஜ்நாத் சிங் மற்றும் அர்ஜுன் முண்டா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. ராஜ்நாத் சிங்குக்கு ராஜ்யசபா எம்பிக்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால் அவருக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்”

“வழக்கமாக ராஜ்யசபா தேர்தலைப் பற்றி ஏதாவது பேசுவாயே… இம்முறை அதுபற்றிய செய்திகள் ஏதும் உள்ளதா?”

“அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்து பவர்ஃபுல் இலகாவை பறித்துள்ள நிலையில் ராமநாதபுரத்தில் கட்சியை பலப்படுத்த அப்பகுதியைச் சேர்ந்த யாருக்காவது ராஜ்யசபா எம்பி பதவியை வழங்கலாமா என்று திமுக தலைமை யோசித்து வருகிறதாம்”

அதிமுக சங்கதிகள் ஏதும் உண்டா?”

“எதிர்க்கட்சியான தாங்கள் போராட்டம் ஏதும் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை மறைப்பதற்காக சொத்து வரி உயர்வை கூட்டியதை எதிர்த்து இன்று மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அதிமுகவினர். வெளியில் தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும், இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே உள்ளுக்குள் புகைச்சல் அடங்கவில்லையாம்.  ஓபிஎஸ்ஸின் நடவடிக்கைகளை கண்காணித்துச் சொல்லும் வேலையை முன்னாள் உளவுத்துறை அதிகாரி  ஒருவரிடம் ஒப்படைத்துள்ளாராம் எடப்பாடி பழனிசாமி”

“கட்சிக்குள்ளேயே உளவா?”

“ஆமாம். அதிமுகவைப் போலவே தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலும் உள்குத்துகள் நடக்கின்றன. அதன் தலைவருக்கும், செயலாளருக்கும் இடையே ஈகோ யுத்தம் நடக்கிறதாம்.  தலைவரின் சில பரிந்துரைகளுக்கு எதிராக செயலாளர் சில கேள்விகளை எழுப்ப இருவருக்கும் இடையே முட்டல்கள் நடப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.” என்றவாறு கிளம்பத் தொடங்கினார் ரகசியா.

“வழக்கமாக கிளம்பும் நேரத்தில் ஏதாவது சினிமா செய்தியை கையில் திணித்துவிட்டு செல்வாயே. இம்முறை ஏதும் இல்லையா?”

“முறையை மாற்றும் வழக்கம் எனக்கு கிடையாது” என்றவாறு 3 துண்டுச் சீட்டுகளை கையில் வைத்து அழுத்தினார்.

அதிலிருந்த 3 செய்திகள் இவைதான்…

சமீபத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்துள்ள பிரபல இயக்குநரால் அவரை மறக்க முடியவில்லையாம். அவரை பெயரை தனது அறை சுவர்களில் எழுதி வைத்திருக்கிறாராம், மனைவி பெயரைச் சொல்லி அழுகிறாராம்.

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படத்தை ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்யவுள்ளாராம். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது அனிருத் ஆகிய இருவரில் யாராவது ஒருவரை இசையமைப்பாளராக்கலாம் என்று தகவல்.

குவைத் நாட்டில் வசிக்கும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு வருத்தமான செய்தி. அங்கு பீஸ்ட் திரைப்படம் வெளியாக அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது போன்ற காட்சிகள் ட்ரெய்லரில் இருப்பதால் இந்த நடவடிக்கையாம். மற்ற இஸ்லாமிய நாடுகளும் இந்த முடிவை பின்பற்றுமா என்ற அச்சத்தில் படக் குழு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...