No menu items!

முடங்கும் தமிழ் சினிமா, பிரச்னையில் தயாரிப்பாளர்கள்..

முடங்கும் தமிழ் சினிமா, பிரச்னையில் தயாரிப்பாளர்கள்..

ஒரே ஒரு ரெய்ட் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவை முடக்கிவிட்டது. சமீபத்தில் நடந்த ஒரு திரைத் துறை தொடர்பான வருமானவரி சோதனையில் ஏகப்பட்ட ஆவணங்கள். ஏராளமான ரகசிய குறிப்புகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அனைத்தும் திரைப்படங்களுக்கு ஃபைனான்ஸ் வழங்கியது தொடர்பானவை. இப்போது வருமான வரித்துறை வேகமெடுத்து இருக்கிறதாம். ஆவணங்களில் இருந்தவர்கள் அனைவருக்கும் சிக்கல் தொடங்கியிருக்கிறது. இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள் என்ற பேச்சு கோலிவுட்டில் உலா வருகிறது.

வருமான வரித்துறையின் ரெய்ட் என்பது வழக்கமான ஒன்றுதான். தமிழ் சினிமா புள்ளிகள் பார்க்காத ரெய்டும் இல்லை. ஆனால் இந்த ரெய்ட், ஒரு நாள் தலைப்புச்செய்தியாக மட்டும் முடிந்துவிடக்கூடியது அல்ல. இதன் தாக்கம் தமிழ் சினிமாவின் தயாரிப்பு, வர்த்தகம் என பல தளங்களில் எதிரொலித்திருக்கிறது. வெகுசீக்கிரமே தமிழ் சினிமாவை முடக்கி விடும் அபாயம் இந்த ரெய்ட் விசாரணையில் இருப்பதாக திரையுலகத்தினர் கிசுகிசுக்கிறார்கள்.

என்ன நடந்தது? என்ன நடக்கிறது? ‘வாவ் தமிழா’ களத்தில் இறங்கி திரட்டியதில் பல பகீர் தகவல்கள்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை திறமைகளுக்கு பஞ்சமில்லை. படைப்புத் திறனுக்கும் எல்லையில்லை. புதுமைகளுக்கு ஒய்வில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருக்கும் ஒரே பிரச்னை, ’ஃபைனான்ஸ்’.

அந்தக் காலத்தில் தயாரிப்பு செலவுகளுக்காக யாரையும் சார்ந்திராத ஏவிஎம், மாடர்ன் தியேட்டர்ஸ், தேவர் ஃப்லிம்ஸ் போன்ற தயாரிப்பு நுட்பம், வர்த்தகம் தெரிந்த பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தன. அவர்கள் பணத்துக்காக மற்றவர்களை அதிகம் சார்ந்திராமல் தங்களையே நம்பி இருந்தார்கள்.

இன்று நிலைமை அப்படியில்லை.

ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களைத் தவிர, பெரும்பாலான தயாரிப்பாளர்கள் வட்டிக்கு கடன் வாங்கி, படம் எடுப்பவர்களே.

ஹிட் கொடுத்த இயக்குநர், பிஸினஸ் வேல்யூ உள்ள ஹீரோவின் கால்ஷீட் கிடைத்தால் போதும், மாதச் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் கம்பெனி ஊழியர் கூட தயாரிப்பாளர் ஆகிவிடமுடியும். ஊரில் சின்னதாய் ஜவுளிக்கடை வைத்திருப்பவரும் கூட தயாரிப்பாளராக மாறிவிட முடியும்.

உங்கள் கையில் ஐந்து ரூபாய் இல்லையென்றாலும் கூட, ஹீரோ-ஹீரோயிந் டைரக்டர் காம்பினேஷனுக்காக கடன் கொடுக்க சில ஆண்டுகளுக்கு முன்புவரை பல ஃபைனான்ஸியர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று அந்த ஃபைனான்ஸியர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திற்கு வந்துவிட்டது. அதிலும் குறிப்பிட்ட ஃபைனான்ஸியர் ஒருவரின் தமிழ் சினிமா மீதான அன்பு தமிழ் சினிமாவை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது.

அன்பு கொண்ட அந்த தென்னாட்டு ஃபைனான்ஸியரின் வருகை, தயாரிப்பாளர்களுக்கு ஒரு க்ரெடிட் கார்ட் வங்கியே கைக்கொடுக்க வந்தது போல் இருந்தது.

சிறிய அளவில் ஃபைனான்ஸ் கொடுக்க தொடங்கியவர், மிக விரைவிலேயே தமிழ் சினிமாவின் மிக மிக முக்கியமான ஃபைனான்சியரானார். காரணம் காலையில் ஒரு தொகை கேட்டால், மாலையில் புத்தம் புது கரன்சிகளாக அந்த தொகை வீடு தேடி வரும். எவ்வளவு கேட்டாலும், கரன்சியாக கிடைக்கும் என்பதால், தயாரிப்பாளர்களுக்கு ஆருயிர் அன்பராக மாறினார்.

இன்று தமிழ் சினிமாவில் 80%-க்கும் அதிகமான முன்னணி தயாரிப்பாளர்களுக்கு ஃபைனான்ஸ் கொடுத்திருப்பவர் இவர்தான். இந்நச் சூழலில்தான் வருமான வரித்துறை இந்த ஃபைனான்ஸியர் அலுவலகம், வீடு என வாய்ப்பு உள்ள அனைத்து இடங்களிலும் ரெய்ட் நடத்தியது. இம்முறை கிடைத்த ஆவணங்கள், வருமான வரித்துறைக்கு பெரும் துருப்புச் சீட்டுகளாக மாறியிருக்கிறது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தமிழ் சினிமாவின் முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் அதிகமாக இருந்ததால் ரெய்ட் போனவர்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான். சிக்கிய பட்டியலில் ‘வலிமை’மிக்க தயாரிப்பாளர், பச்சை மீது ப்ரியமுள்ள தயாரிப்பாளர், அஞ்சாத இயக்குநர் என தமிழ் சினிமாவின் முக்கியப் புள்ளிகளின் பெயர்கள் நீள்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

வருமானவரித் துறை சிக்கலினால் இந்த ஃபைனான்ஸியர் புதிய படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்வதை முற்றிலுமாக குறைந்துவிட்டார். தயாரிப்பில் இருக்கும் படங்களுக்கு ஃபைனான்ஸ் வரவில்லை.

அதுமட்டுமில்லாமல் பட்டியலில் சிக்கிய புள்ளிகளுக்கு வருமானவரித் துறையின் நோட்டீஸ் வந்திருக்கிறது. சிலர் பணத்தை கட்டியிருக்கிறார்கள். சிலர் என்ன செய்வதென்று நிற்கிறார்கள்.

வருமானவரித் துறைக்கு இதுவரையில் ஏறக்குறைய 110 கோடி ரூபாய் வரை வரியாக வசூலாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு பக்கம் படமெடுக்க ஃபைனான்ஸ் உதவி இல்லை. மறுபக்கம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்கும் வாய்ப்பில்லை என்பதால் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் கலங்கி நிற்பதுதான் இன்று கோடம்பாக்கத்தின் ஹாட் டாக். இதனால் வரும் நாட்களில் புதிய படங்களுக்கான பூஜைகள், அறிவிப்புகள் வெகுவாக குறையலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். இதனால் தமிழ் சினிமா இன்னும் கொஞ்ச காலத்துக்கு முடங்கலா என்றும் சொல்கிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் தயாரிப்புகள் தொடரலாம். ஆனால் மற்ற தயாரிப்பாளர்கள் இந்த சுனாமியில் இருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபமில்லை என்று கூறுகிறார்கள்.

அரேபியக் குத்து நடிகரின் படம் தடையில்லாமல் தொடரும். காரணம் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆந்திராவைச் சேர்ந்த மிகப்பெரிய தயாரிப்பாளர். அடுத்து வலிமைமிக்க நடிகரின் படமும் தொடரலாம். காரணம் அத்தயாரிப்பு நிறுவனம் ஒரு கார்ப்பரேட் நிறுவனம். இந்தப் படங்களைத் தவிர்த்து மற்றப் படங்கள் தொடங்கவோ அல்லது வெளியிடவோ பல பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் சினிமா இதுவரையில் எவ்வளவோ பிரச்னைகளைத் தாண்டி, பல படைப்பாளிகளையும், நட்சத்திரங்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் இந்திய சினிமாவிற்கு கொடுத்திருக்கிறது. தற்போது இந்த பிரச்னையையும் தாண்டி மீண்டு வரும் என்று நம்புவோமாக.

  • வாவ் தமிழா டீம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...