No menu items!

தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வெளுக்கப் போகும் வெயில் – சமாளிப்பது எப்படி?

தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வெளுக்கப் போகும் வெயில் – சமாளிப்பது எப்படி?

தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. இதனால், ஏற்பட வாய்ப்புள்ள உடல்நல பாதிப்புகள் என்னென்ன? அடுத்த இரண்டு மாதங்கள் வெளுக்கப்போகும் வெயிலை சமாளிப்பது எப்படி? ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் டாக்டர் அருணாசலம் தரும் டிப்ஸ் இங்கே…

“கோடைக்காலத்தில் பெரும்பான்மையான நோய்கள் சூரியக் கதிரின் வெப்ப பாதிப்பினால் ஏற்படுகின்றது. சன் ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் கடுமையான வெய்யில் காரணத்தால் சிலருக்கு ஏற்படுவதுண்டு. மேலும் உடற்சோர்வு, அதிக வியர்வையால் ஏற்படும் வியர்க்குரு என்று கோடை காலத்தில் நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இவை வராமல் தடுக்க, கடும் கோடைக்காலத்தை சமாளிக்க முதலில் நம் உடலின் தட்பவெட்ப நிலை அதிக மாறுதலுக்கு உள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது, உடலில் எப்போதும் போதுமான நீர்ச்சத்து இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், விதவிதமான நோய்களுக்கு நேரான பாதையை நாமே வழிவகுத்துக் கொடுத்துவிடுவோம்.

நம்  மூளையில் உள்ள பிட்யூட்டரி க்ளாண்ட் அருகில் அமைந்துள்ள thirst என்ற ஒரு இடத்திலிருந்துதான், தண்ணீர்க் குடிக்க வேண்டும் என்ற தாகத்துக்கான கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. மனித உடலுக்குத் தேவையான தண்ணீரை இயல்பாகவே தாகம் எடுப்பதன் மூலம் உடல் கேட்கிறது. அப்போது உடலின் அந்த கோரிக்கையை ஏற்று உடனே நாம் செயல்படுத்த வேண்டும். தாகம் எடுக்கும்போதும் தண்ணீர் அருந்தாமல் இருப்பது தவறு.

நிறைய தண்ணீர் குடிப்பது, பொதுவாக உடல் நலத்துக்கு நல்லதுதான். ஆனால், அந்தத் தண்ணீர் சுத்தமான தண்ணீராக இருக்க வேண்டும். குடிநீரை நன்றாக வடிகட்டி காய்ச்சிய பிறகே குடிக்க வேண்டும். இதைப் பற்றிய விழிப்புணர்வு விளம்பரங்களின் மூலம் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், அவசர யுகத்தில் இதையெல்லாம் கடைபிடிக்காமல் இருப்பவர்கள் அநேகம். ஆனால், கண் கெட்ட பிறகே சூரிய நமஸ்காரம் என்பதுபோல், அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதன் விளைவாக டைஃபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல நோய்கள் உடனடியாகத் தாக்கும் என்பதை மறந்துவிடுகிறார்கள். தண்ணீரை காய்ச்சி குடிப்பதால் சாதாரண வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை, எலி ஜூரம் (லெப்டோ ஸ்பைரோசிஸ்), டைபாய்டு போன்ற நோய்களைத் தவிர்க்கலாம்.

பொதுவாக, உடலின் தண்ணீர் தேவை சுமார் ஒன்றரை லிட்டரிலிருந்து இரண்டு லிட்டர் வரை. ஆனால், அவரவர் வேலை மற்றும் அவர்களின் உடலின் வியர்வைக்கேற்ப இது மாறுபடும். உடல் உழைப்பு அதிகமானவர்கள் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையும் பட்சத்தில் மாலையில் களைப்பு, உடல்வலி, நீர்க்கடுப்பு, காலையில் மலச்சிக்கல், நாள்பட சிறுநீர்ப் பாதை கல், மூலம், வயதானோர்க்கு வெக்கையினால் ஏற்படும் மயக்கம் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். உதடுகள் காய்ந்துபோவது, நாக்கு வறட்சி அடைவது, அடிக்கடி தாகம் எடுப்பது, எப்போதும் தூக்கம் வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். வியர்வை நீருடன் உப்பும் சேர்ந்து வெளியேறிவிடுவதால் உடலுக்கு உப்புச் சத்தை மீண்டும் தராமல் இருப்பதாலும் உடற்கேடுகள் விளையும்.

தண்ணீர் அல்லது குளிர்பானங்களை மிகவும் குளிர்ச்சியாக (ஐஸ் கோல்ட்) குடிப்பதால் தொண்டை வலி, மூக்கடைப்பு, காது வலி, இருமல், சளி போன்ற நோய்கள் ஏற்படும். இதைத்தவிர, அறையை குளிரூட்டும் ஏ.ஸி. கருவிகள் வீட்டுக்கு வீடு வந்த பிறகு அதிகமான குளிர் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிட்ட நிலையில், நாளடைவில் சில பாதிப்புக்கள் ஏற்படும்.

குடிக்கும் தண்ணீரைப் பொறுத்தவரை தற்போது கேன் வாட்டர் பரவலாக பயன்பாட்டில் உள்ள நிலையில், அதன் தரத்தைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துவதே நலம். கேனில் ஐஎஸ்ஐ (ISI) முத்திரைக் குத்தப்பட்டு இருந்தால் மட்டுமே சுத்தமாக இருக்க வாய்ப்புள்ளது.

உணவு கெட்டுப்போகாமல் இருக்க குளிர்சாதனப் பெட்டியைப் பதப்படுத்துகிறோம். ஆனால், அவற்றை வெளியில் எடுத்து அறையின் தட்பவெட்பத்துக்கு வந்த பிறகு அந்த உணவை சூடு பண்ணிச் சாப்பிடுவதன் (55 டிகிரி) மூலம் உணவை நஞ்சாக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

வெளியே கடைகளில் பழச்சாறு அருந்தும்போது, கடைகளில் ஜூஸ் தயாரிப்பவர் கைகளில் உறை அணிந்திருக்கிறாரா என பார்ப்பது நலம்.  அங்கு பயன்படுத்தும் பாத்திரத்தின் சுத்தம், பழங்களின் தரம், அது தயாரிக்கப்படும் மிக்ஸியின் சுத்தம் என எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். தவிர ஜில்லென்று குளிர்ச்சியாக இருக்கப் போடப்படும் ஐஸ் கட்டிகள் தரமானவையா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். ஜூஸ்தானே குடிச்சேன் என்று பின்னர் வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கு வந்ததும் யோசிப்பது பயனில்லை.

வெயிலில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புகையில், கை கால்களை சுத்தமாக கழுவுவதன் மூலமும் சில நோய்களைத் தவிர்க்க முடியும். உணவு சாப்பிடும் முன்னர் நிச்சயம் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.

நம் சருமத்தின்  அடியில் ‘எக்ரைன்’ எனும் வியர்வைச் சுரப்பி இருக்கிறது. இந்த சுரப்பிகள்  தூண்டப்படும்போது உடலில் இருந்து வியர்வை வெளியேறும். உடலில் சூரிய ஒளி படும் இடங்களான முகம் கைகளில் வியர்க்கும்போது எவ்வித வாடையும் வராது. ஆனால், அப்போக்ரைன் எனும் சுரப்பி அக்குள் மற்றும் மறைமுக இடங்களில் சுரந்து, அவ்விடங்களில் வியர்க்கும்போது துர்நாற்றத்தை ஏற்படும். நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு  அவை அமிலமாகிறது. உணவுப் பொருள்கள், உதாரணமாக பூண்டு, வெங்காயம், அசைவ உணவுகள் மற்றும் மசாலா வகை உணவுகள் சாப்பிட்டால் அந்த வாடை வியர்வையுடன் கலந்துவிடும்.

வெளியிலிருந்து பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகள் உள் நுழைவதைத் தடுக்க சில நுண்ணுயிர்கள் நம் உடலில் இயற்கையாகவே இருக்கும். இந்தப் பாதுகாப்பையும் மீறி சில கிருமிகள்  வியர்வையுடன் சேர்ந்து, தோலின் மேல்புறத்தில் பூஞ்சைக் காளானை (ஃபங்கஸ்) உருவாக்கும்.

உதாரணத்துக்கு தயிர் அல்லது ஊறுகாயை ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியே நான்கைந்து நாள்கள் வைத்துவிடுகையில், அதன்மேல் மஞ்சளாகப் படர்ந்திருக்கும் கிருமிதான் ஃபங்கஸ். இந்த ஃபங்கஸ், பாக்டீரியா, தோல் வியர்வை மற்றும் அழுக்கு, புரதம் போன்றவை எல்லாம் சேர்ந்து சருமத்தில் விரும்பத்தகாத துர்நாற்றத்தை உருவாக்கிவிடும். இது பரம்பரையாக சிலருக்கு வருகிறது என்று சொல்லப்பட்டாலும் அப்படி இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வரலாம். வந்துவிட்டால் அதைக் குணப்படுத்த முடியாது, கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.

வியர்க்கும்போது ஏற்படும் அரிப்புக்கு, சொரிவதால் தோலில் சின்னச் சின்ன காயங்கள் ஏற்பட்டு கிருமிகளால் தோலில் கட்டிகள் உருவாகும். வியர்வை சருமத்தை நன்றாகக் கழுவி, ஈரத் துணியில் துடைத்தால் வியர்க்குரு வராது. வியர்வையை சுத்தமாக கழுவவில்லை எனில், உடல் இடுக்குகளில் மடிப்புகளில் காளான் நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்க, கோடை காலத்தில் தினமும் காலை மாலை இருவேளை குளிப்பது அவசியம். சுத்தமாக துவைக்கப்பட்ட ஆடைகளையே அணிய வேண்டும். வெய்யில் காலத்தில் காட்டன் உடைகள் அணிவது நல்லது. இவை, அதிகப்படியான வியர்வையை உறிஞ்சிவிடும்.அதிக வியர்வைப் பிரச்னை உடையவர்கள் வசதி மற்றும் வாய்ப்பு இருந்தால் ஒரு நாளில் இரண்டு தடவை உடை மாற்றிக் கொள்ளலாம்.

வெயிலில் செல்லும்போது தொப்பி, குடை எடுத்துச்செல்வது பாதுகாப்பானது” என்கிறார் டாக்டர் அருணாசலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...