No menu items!

யானைகளால் சிக்கல்! – ராகுலுக்கு மீண்டும் கை கொடுக்குமா வயநாடு?

யானைகளால் சிக்கல்! – ராகுலுக்கு மீண்டும் கை கொடுக்குமா வயநாடு?

வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இதில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தொகுதி வயநாடு. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த தொகுதியில் போட்டியிடுவதே இதற்கு காரணம். இந்த தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் ஆனி ராஜா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கே.சுரேந்திரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

கொடி இல்லாமல் பிரச்சாரம்:

பொதுவாக ஒரு கட்சியின் தேர்தல் பிரச்சாரம் என்றால் அதில் முக்கிய அம்சமாக அக்கட்சியின் கொடி இருக்கும். கட்சிகளின் தொண்டர்கள், தங்கள் கட்சிக் கொடியை ஏந்திச் சென்று வாக்கு கேட்பது வழக்கம். ஆனால் இம்முறை வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யும்போது காங்கிரஸ் கட்சியின் கொடிகளை ஏந்திச் செல்லாமல் வெறும் சின்னத்தை எடுத்துச் சென்று மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும் என்று தனது தொண்டர்களை மாநில காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக். கேரளாவின் வயநாடு பகுதியில் காங்கிரஸ் கட்சியைவிட அக்கட்சியின் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு அதிக தொண்டர்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் வயநாட்டில் ராகுல் காந்தி ரோட் ஷோ ஒன்றை நடத்தினார். இந்த ரோட் ஷோவின்போது காங்கிரஸ் கட்சியின் கொடிகளைவிட முஸ்லிம் லீக் கட்சியின் கொடிகளை அதிகமாக பார்க்க முடிந்தது. பாஜகவினர் இதைக் கிண்டலடித்தனர். அத்துடன் அந்த கொடிகள் பாகிஸ்தான் கொடியுடன் ஒத்துப் போவதாகவும் விமர்சித்திருந்தனர். இந்த விமர்சனத்தை தொடர்ந்து, வயநாட்டில் தனது பிரச்சரத்தின்போது காங்கிரஸ் கட்சியின் கொடிகளையோ அல்லது கூட்டணி கட்சிகளின் கொடிகளையோ தொண்டர்கள் எடுத்துவர வேண்டாம் என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இடதுசாரி கட்சிகள் விமர்சனம்

இதையும் பாஜக விமர்சித்துள்ளது. முஸ்லிம் லீக் கட்சியின் கொடிகளை எடுத்துவர வேண்டாம் என்று கூற தைரியம் இல்லாமல், தங்கள் கொடிகளையும் சேர்த்து காங்கிரஸ் கட்சியினர் புறக்கணிப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர். அதேபோல் இடதுசாரி கூட்டணியும், பாஜகவுக்கு பயந்து சொந்த கட்சியின் கொடியை மறைத்து வைக்க வேண்டிய நிர்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.

விமர்சனங்கள் வந்தாலும், வயநாட்டில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தின்போது கொடிகளை பயன்படுத்துவதில்லை என்ற முடிவில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. கொடிக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியின் சின்னம் பொறித்த தொப்பிகளை அணிந்து காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

பிரச்சினையாக நிற்கும் யானைகள்

கடந்த தேர்தலில் 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ஆனால் இம்முறை அவரை வெற்றிபெற விடக்கூடாது என்பதில் பாஜகவும் இடதுசாரி கட்சிகளும் தீவிரமாக இருக்கின்றன. வயநாடு தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக ராகுல் காந்தியால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறி இட்துசாரி கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. குறிப்பாக அங்கு கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதனால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதை தடுத்து நிறுத்த தொகுதியின் எம்பி என்ற வகையில் ராகுல் காந்தி எதையும் செய்யவில்லை என்பது இடதுசாரி கட்சிகளின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

யானைகள் விஷயத்தில் ராகுல் காந்தி சரியான கவனம் செலுத்தவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் இடையிலும் உள்ளது.

பாஜக கையில் எடுத்த சுல்தான் பத்தேரி:

பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவரான கே.சுரேந்திரன் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார். தொகுதியில் உள்ள இந்துக்களின் வாக்குகளை குறிவைக்கும் அவர், தாங்கள் வெற்றிபெற்றால் தொகுதியில் உள்ள ஒரு பகுதியான ‘சுல்தான் பத்தேரி’யின் பெயரை ‘கணபதி வட்டம்’ என்று மாற்றுவதாக கூறி பிரச்சரத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக வயநாடு மாவட்ட காங்கிரஸ் செயலாளரான பி.எம்.சுதாகரன், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளார். தற்போது ராகுல் காந்திக்கு எதிராக அவர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

ராகுல் பிரச்சாரம் ரத்து:

தனக்கு எதிரான பிரச்சினைகளுக்கு நடுவில், தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தொகுதியின் ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தை ரத்து செய்திருப்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. உணவு ஒவ்வாமை பிரச்சினையால் ராகுல் காந்தியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் செவ்வாய் கிழமையன்று அவர் பிரச்சாரம் செய்யமாட்டார் என்றும் அத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார ஒருங்கிணைப்பாளரான ஏ.பி.சுனில்குமார் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஈடுகட்டும் விதமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியும் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பிரச்சாரம் ராகுல் காந்திக்கு நிச்சயம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளனர். நேரு குடும்பத்தின் மீது கேரள மக்களுக்கு உள்ள அன்பும் அதற்கு துணையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...