No menu items!

ICU-விலிருந்து என்னை காப்பாற்றியது எழுத்து – வசந்தபாலன்

ICU-விலிருந்து என்னை காப்பாற்றியது எழுத்து – வசந்தபாலன்

வாழ் தமிழா யூடியூப் சேனலில் (Wow Tamizhaa – YouTube) வரும் Book Talk தொடரில் திரைப்பட இயக்குநர் வசந்தபாலனை சந்தித்தோம்.

உங்கள் வாசிப்பு பழக்கம் எப்படி உருவாகி வளர்ந்தது?

1970களில் சிறுநகரங்களில் டீ கடைகளில் நியூஸ் பேப்பர் படிக்கும் பழக்கம் எல்லோரிடமும் இருந்தது. இதற்காகவே டீ கடைகளில் காலையில் சீக்கிரமாகவே கூடுவார்கள். ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொருவரும் படித்துக் கொண்டிருப்பார்கள். கீழே உட்கார்ந்து அடிப்பக்கத்தை இன்னொருவர் படித்துக் கொண்டிருப்பார். இப்படி வாசிப்பு தீவிரமாக இருந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான்.

இன்னொரு பக்கம், எங்கள் அப்பா அரசு ஊழியராக இருந்ததால், அவர் படிப்பதற்காக ‘குமுதம்’, ‘ஆனந்த விகடன்’ ‘கல்கி’, ‘கல்கண்டு’ உட்பட எல்லா பத்திரிகைகளும் வீட்டுக்கு வரும். எங்கள் தாத்தாவும் தீவிர வாசகர். அதிகாலையில் 4.30 மணிக்கு எழுந்துவிடுவார். எழுந்ததும் ஒரு டிகிரி காப்பி குடித்துவிட்டு ‘ஹிண்டு’, ’தினமணி’, ‘கல்கி’ எல்லாவற்றையும் முழுமையாக படித்துவிட்டுதான் 6.30க்கு நடக்க செல்வார். இவை எல்லாவற்றையும் பார்த்துதான் நான் வளர்ந்தேன். எனவே, வாசிப்பு என்பது இயல்பாகவே சிறு வயதில் என் விருப்பமானதாக தொற்றிக்கொண்டு விட்டது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் எனது அம்மா வழி தாத்தா ஊர். பள்ளி இறுதித் தேர்வு விடுமுறைகள் முழுவதும் அங்கேதான் இருப்பேன். அங்கே என் சித்திகள் ‘பொன்னியின் செல்வன்’ போன்ற தொடர்களை பைண்ட் செய்து வீட்டில் வைத்திருப்பார்கள். அப்போதே பெரிய நாவல்களை படிக்கத் தொடங்கினேன். கதைகளின் மீதான ஆர்வம் அப்படி உருவானது. ரா.கி. ரங்கராஜன் கதைகளை அப்போது விரும்பி வாசிப்பேன். ‘விக்ரம்’ திரைப்படத்தின் கதையை ‘குமுதம்’ இதழில் தொடராக சுஜாதா எழுதிய போதே படித்துவிட்டேன்.

உங்களை சினிமாவை நோக்கி செலுத்தியதில் இந்த சிறுவயது வாசிப்பு பழக்கத்துக்கு ஒரு பங்கிருக்குமா?

நான் எழுதத் தொடங்கியதுதான் என்னை சினிமாவை நோக்கி தள்ளியது. அப்போதே சிறுகதைகள், கட்டுரைகள் எழுதத் தொடங்கி, போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றேன். 65 கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட ஒரு போட்டியில் எனது சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்தது. அது எனக்கு ஒரு பெரிய ஊக்கத்தை கொடுத்தது. தினம் ஒரு சிறுகதை எழுதிவிட வேண்டும் என்னும் அளவுக்கு தீவிரமாக இருந்தேன். இன்னொரு பக்கம், எனது அப்பா ஒரு அரசு ஊழியர் என்றாலும் அரசு வேலைக்கு போகப்போவதில்லை என்று அப்போதே முடிவெடுத்துவிட்டேன். பாலகுமாரன் போன்ற படைப்பாளிகள் மீதான காதல், தேசாந்திரியான ஒரு வாழ்க்கை மீதான ஈர்ப்பும் சேர்ந்து, கல்வி பட்டம் மீது எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. வீட்டுக்காக கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சினிமா கனவுடன் சென்னை வந்துவிட்டேன்.

அதன்பிறகு நீங்கள் சிறுகதைகள் எழுதவில்லை. ஏன் எழுதுவதை விட்டுவிட்டீர்கள்?

சென்னைக்கு வந்தபிறகு உதவி இயக்குநராக சினிமாவைக் கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த தொடங்கினேன். எனவே, எழுத நேரமில்லாமல் ஆகிவிட்டது. அதேநேரம் வாசிப்பதை விடவில்லை. அது எனக்கு ஆக்சிஜன் மாதிரி. எனவே, அதை என்னால் விடமுடியாது. படப்பிடிப்பு நடக்கும் நாட்களிலும் கொஞ்சமாவது படித்துவிடுவேன். போகும்போதே பத்து புத்தகங்களை எடுத்து போட்டுக்கொள்வேன். படப்பிடிப்பு முடிந்து மிக களைத்துபோய் வந்தாலும், இரண்டு பக்கங்களாவது அல்லது இரண்டு கவிதைகளாவது வாசித்துவிட்டுதான் தூங்க செல்வேன். அதுபோல் எப்போதும் என் கண் முன்பு படுகிற மாதிரி புத்தகங்களை வைத்துக்கொள்வேன். இப்போதுகூட மனுஷ்யபுத்திரனின் ‘மிஸ் யூ’ கவிதைத் தொகுப்பை வாங்கி என் தலையணைக்கு அருகே வைத்திருக்கிறேன். அவ்வப்போது எடுத்து ஒன்றிரண்டு கவிதைகள் வாசிப்பேன். அது என்னை படைப்பூக்கத்துடன் வைத்துக்கொள்ள உதவி செய்கிறது.

துன்பத்தில், துயரத்தில் இருந்து வாசிப்பும் எழுத்தும் ஏதோ ஒருவிதத்தில் விடுவிக்கிறது என்று ஆழமாக நான் நம்புகிறேன். எழுதும்போது நான் என்னை மறக்கிறேன். கொரோனா பாதிப்பில் நான் ஐசியூவில் இருந்தேன். ஒரு கையில் ட்ரிப்ஸ் மாட்டியிருந்தார்கள். எனவே, ஒரு கையால்தான் டைப் செய்ய முடியும்.  ஆனாலும், நான் தொடர்ந்து ஒரு கையால் எழுதிக்கொண்டே இருந்தேன். எழுத எழுத இந்த துயரத்தில் இருந்து மீண்டுவிடுவேன் என்று ஆழமாக நம்பினேன். என்னால் செலவழிக்க முடியாத ஒரு மருத்துவமனையில் நான் சேர்க்கப்பட்டுவிட்டேன்.  அதேகாலகட்டத்தில் என் மனைவியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனது அம்மாவும் அப்பாவும்கூட அந்த நேரம் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார்கள். குழந்தைகள் வெளியூருக்கு அனுப்பப்பட்டிருந்தார்கள். இந்த தகவல்கள் எதுவுமே எனக்கு தெரியாது. நான் தீவிரமாக எழுதிக்கொண்டே இருந்தேன்.

இன்று செல்போனுக்குள் யூ டியூப்புக்குள் மூழ்கிக் கிடக்கிறவர்கள், தொடர்ந்து அதனையே பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அது முடிந்ததும் ஒரு வெறுமையை உணர்கிறார்கள். அது மாய உலகமாக இருக்கிறது. இதனால், யாதார்த்தத்துக்கு வந்தபின்னர் நம் முன்னாடி ஒன்றுமே இல்லை என்ற ஏக்கம் ஏற்படுகிறது.  ஆனால், வாசிப்பு இதற்கு நேர்மாறானது. வாசித்துவிட்டு ஒரு புத்தகத்தை மூடி வைத்த உடனே நீங்கள் அந்த உலகத்துக்குள் செல்வீர்கள். யதார்த்தம் உங்களுக்கு மறந்துபோய்விடும். எவ்வளவு நேரமானாலும் வாசித்து முடிக்கும் போது ஒரு கதவு திறக்கும். அது புதிய உலகத்துக்கு உங்களை கைப்பிடித்து அழைத்து செல்லும். படித்த பாத்திரங்களோடு வாழத் தொடங்குவோம். இதைத்தான் ‘பொன்னியின் செல்வன்’ படித்தவர்கள் வந்தியத் தேவனுடன் குதிரையில் சென்றேன் என்று சொல்கிறார்கள். ‘வேள்பாரி’யுடன் நான் காடுகளில் பயணம் செய்திருக்கிறேன்.

ஆனால், வாசிக்காத ஒரு மாபெரும் தலைமுறையை இன்று நாம் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தினமும் எவ்வளவோ உதவி இயக்குநர்களை பார்க்கிறேன். ‘வாசிக்கணும் சார்’ என்று சொல்கிறார்கள். தமிழ் வாசிப்பதே அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. இன்னும் சிலர், ‘கேட்கிறேன் சார்’ என்கிறார்கள். அதாவது வாசிப்பதைவிட பவா செல்லத்துரை சொல்கிற சிறுகதைகளை கேட்பது அவர்களுக்கு சுலபமாக இருக்கிறது.

ஆனால், இப்படி ஒரு கதையை வாசிக்காமல் கேட்பதால் அவர்கள் ஏதாவது இழக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?

செல்போனை ஆஃப் செய்யும்போது வெறுமை சூழ்கிறது. ஆனால், புத்தகத்தை மூடும்போது இன்னொரு உலகம் திறக்கிறது. இதுதான் வித்தியாசம். செல்போனுக்குள் மூழ்கிக் கிடக்கிற இன்றைய தலைமுறை ஓரு தோல்வியைக்கூட தாங்கிக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். ஆசிரியை அடிச்சதை தாங்க முடியாமல், மதிப்பெண் குறைந்துவிட்டதால், கல்லூரியில் கேட்ட பாடப்பிரிவு கிடைக்காததால் எல்லாம் தற்கொலை செய்துகொள்கிறார்கள். எப்படிப்பட்ட பலவீனமான தலைமுறையை உருவாக்கியுள்ளோம் என்று பெரும் வேதனையைத் தருகிறது. நம்மிடம் மிகச் சிறந்த இலக்கியங்கள் இருந்தும் பண்பாட்டு ரீதியாக அவர்களை தயார்படுத்த தவறிவிட்டோம் என்று தோன்றுகிறது.

ஒரு திரைப்பட இயக்குநராக புத்தக வாசிப்பு எப்படி உங்களுக்கு என்னவிதமான ஊக்கத்தை தருக்கிறது?

என் ஊர் வெயில் உகந்த பட்டினம்; நான் வெயிலில் தான் வளர்ந்திருக்கிறேன். ஆனாலும், ‘வெயில் அழைக்கிறது’, ‘வெயில் ஒரு பருந்தைப் போல அந்த கிராமத்தை சுற்றி வருகிறது’ , ‘வெயில் ஒரு பூனையைப் போல மெதுவாக அந்த வீட்டுக்குள் நுழைகிறது’ என்று படித்தபோது வெயில் என்கிற படிமம் எனக்கு மிகவும் புதியதாக இருந்தது. ‘வெயிலை கொண்டு வாருங்கள்’ என்று ஒரு சிறுகதை தொகுப்புக்கே எஸ். ராமகிருஷ்ணன் தலைப்பு வைத்துள்ளார். இதுபோல் ‘நெடுங்குருதி’ என்ற அவரது நாவல் முழுவதும்கூட வெயில் என்ற படிமம் வருகிறது. இதில் இருந்து பெற்ற பாதிப்பால்தான் எனது படத்துக்கு ‘வெயில்’ என்று நான் தலைப்பு வைக்கிறேன்; ‘வெயிலோடு விளையாடுவோம்’ என்று ஒரு பாடல் வைக்கிறேன். ‘வெயில்’ படத்தின் திரைக்கதையை எழுதும்போது ‘வெயில் அவனது வீட்டுக்குள் போகிறது, அவனை பார்க்கிறது’, ‘வெயில் அவன் உடலில் எறும்பைப் போல ஊர்கிறது’ என்று நான் எழுதினேன். அதையெல்லாம் காட்சியாக எடுக்கவும் செய்தேன்.

‘மணித்துளியைப் போல வெயில் அவன் உடலில் ஊர்ந்து மாலையை நோக்கி சென்றது’ என்று எழுதியிருந்தேன். படத்தில் இதனை காட்சிப்படுத்தியிருந்தேன். அவன் அப்பா அவனை நிர்வாணமாக படுக்க போட்டிருக்கிறார். கடிகார முள்ளைப்போல அவன் கிடக்கிறான். நேரம் செல்ல செல்ல கடிகார முள்ளைப் போல அவன் திரும்புகிறான். இது வாசிப்பில் இருந்து கிடைத்த ஊக்கத்தில் உருவாக்கிய காட்சிப் படிமம்தான். இதுபோல் வாசிப்பு ஏதோவொரு விதத்தில் என் படங்களின் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது. சில நேரங்களில் ஒரு அரசியல் கருத்தாகவும் பங்கெடுக்கும்.

தொடர்ந்து பேசுவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...