No menu items!

இந்தியாவில் ஒடிடி-யின் அசுர வளர்ச்சி!!

இந்தியாவில் ஒடிடி-யின் அசுர வளர்ச்சி!!

பல நூற்றாண்டுகளாக நம்மை மகிழ்வித்த தெருக்கூத்து, மேடை நாடகம் போன்ற பாரம்பரிய கலைகளை இந்நூற்றாண்டின் இளம் கலை வடிவமாக பிறப்பெடுத்த சினிமா பின்னுக்குத் தள்ளியது.

வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்தையும் இசையோடு கொண்டாடிய நமக்கு இசையையும், இன்ஃபர்மேஷனையும் கொடுத்த ரேடியோவை, எஃப். எம்,கள் ஆக்ரமித்தன.

காலையில் காஃபியோடு பொழுதை கழிப்பதில் முக்கியத்துவம் பெற்றிருந்த செய்தி தாள்களின் இடத்தை, இணைய தளங்கள் அசுர வேகத்தில் கைப்பற்றின.

கவர்ச்சிகரமான நவீன கலையாக மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற சினிமாவை, சேட்டிலைட் சேனல்கள் கபளீகரம் செய்தன.

தூங்கும் நேரம் போக, மீதியிருந்த ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு வீட்டிலும் டிவிகளை ஓடச் செய்த கேபிள் டிவியை, டிடிஹெச் ஓவர் டேக் செய்தது.

இப்போது சினிமா, டிவி, வெப்சைட், எஃப்.எம், கேபிள் டிவி, டிடிஹெச் என பொழுதுபோக்கு, தகவல் பரிமாற்றம், செய்திகளுக்கான அனைத்து வடிவ ஊடகங்களையும் அலற வைத்திருக்கிறது ஒடிடி.

’ஒவர் த டாப்’ என்றழைக்கப்படும் ஒடிடி-யின் சேவைகளுக்கு, இதுவரையில் பயன்படுத்தி வந்த கேபிள் டிவியின் சமாச்சாரங்களோ அல்லது டெலிகம்யூனிகேஷன் நெட்வொர்க்குகளோ தேவையில்லை. இனி ஒவ்வொரு வீட்டிலும், ஃபயர்ஸ்டிக் மாதிரி ஒடிடி-க்கான பென் ட்ரைவ் சைஸிலான கருவியும், இன்டர்நெட் கனெக்ஷனும் இருந்தால் போதும். இனி ஒட்டுமொத்த உலகமும் உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும்.

இப்படியொரு தொழில்நுட்ப படையெடுப்பினால், இந்திய பொழுதுபோக்கு மார்க்கெட்டில் பல பெரிய தலைகள் உருண்டுகொண்டு இருக்கின்றன. புதிய தலைகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

இன்றைய நிலவரப்படி, கான்டென்ட் கன்ஸ்யூமிங் மார்க்கெட் எனப்படும் அசல் காணொலி நிகழ்ச்சிகளின், படைப்புகளின் பார்வையாளர்களை அதிகம் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய ஒடிடி சந்தைகளில் ஒன்றாக இந்தியா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த சில வருடங்களாக இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் துறையில் உருவாகி இருக்கும் புரட்சி ஒடிடி-தளங்களுக்கு வசமாக தோள் கொடுத்து வருகின்றன. இதனால் உலகிலேயே இளைய தலைமுறையினரை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் ஓடிடி சந்தையாக இந்தியா முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இளைய தலைமுறையையும், ஸ்மார்ட்ஃபோனையும் பிரித்து பார்க்க முடியாத சூழல் நிலவுவதால், ஒடிடி மிகப்பிரம்மாண்டமான வளர்ச்சியை நாளுக்கு நாள் பெற்று வருகிறது. மேலும் இந்தியாவில் இன்னும் மீதமிருக்கும் மிகப்பெரிய சந்தையை ஒடிடி இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. அதேநேரம் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் ஒடிடி சந்தை ஏறக்குறைய முழுமையான வீச்சை எட்டி வருகின்றன. இதனால்தான் அங்கு நெட்ஃப்ளிக்ஸ், யூட்யூப் இவை இரண்டும் தங்களது வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கின்றன.

கடந்த ஒன்னரை ஆண்டுகளாக, சினிமா மற்றும் டெலிவிஷன் துறை அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதாக இத்துறைகளை கூர்ந்து கவனித்து வருபவர்கள் கூறுகிறார்கள்.

மறுபக்கம் திரைப்பட படைப்பாளிகள் ஸ்ட்ரீமிங் மற்றும் தியேட்டர் என்ற இரு வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். சில வகையைச் சேர்ந்த படங்களும், எடுத்து கொள்ளும் கதைக்களமும் ஒடிடி-யில் மட்டுமே வெளியாக சாத்தியம் என்ற நிலை உருவாகி இருக்கிறது. அதனால் அதற்கே நட்சத்திரங்களை தேர்ந்தெடுப்பது, பட்ஜெட்டை முடிவு செய்வது என எல்லா விஷயங்களிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கோவிட் பரவலின் தாக்கத்திற்கு பிறகும் கூட திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. கமர்ஷியல் ஹீரோக்களின் படங்கள் என்று வரும் போது மட்டும், திரையரங்குகளுக்கு மக்கள் ஆர்வமாக வருகிறார்கள். கமர்ஷியல் ஹீரோக்கள் படங்கள் வெளியாகும் சூழலில், அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகள் வலுக்கட்டாயமாக கைப்பற்றப்படுகின்றன. இதனால் சிறிய பட்ஜெட்டிலான படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது இப்போது சாத்தியமில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.

மறுபக்கம் முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனேயே கமர்ஷியல் ஹீரோக்களின் படங்களின் முடிவு, அதிரடி ஆன்லைன் விமர்சனங்களால் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இதனால் பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றாலும் கூட பாக்ஸ் ஆபீஸில் பதுங்கி விடுகின்றன.

இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு ஒரு க்யாரண்டியான தீர்வாகி இருக்கிறது ஒடிடி. ஒரே நேரத்தில் ஒரு படத்தை பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடுவதால், சிறிய பட்ஜெட்டிலான திரைப்படமாக இருந்தாலும் கூட, நல்ல கதையம்சத்துடன் வரும் போது, அது பல மொழி எல்லைகளைத் தாண்டி வரவேற்பைப் பெறுகின்றன.

ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் ஒரு பிராந்திய மொழி படத்திற்கு கிடைக்கும் இந்த வரவேற்புதான் ஒடிடி-யை உயர்த்தி பிடிக்க செய்திருக்கிறது. படத்தயாரிப்பில் ஈடுப்பட்டு வரும் கார்பொரேட் நிறுவனங்களிடம் படமெடுப்பதற்கான பட்ஜெட் கைவசம் இருப்பதாலும், புதுமையான, தரமான அசல் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றன. சிறிய பட்ஜெட் படத்தயாரிப்பாளர்கள் திரையரங்குகளை மறந்துவிட்டு, ஒடிடி-தளங்களை மனதில் கொண்டே இன்று தங்களது திரைப்படங்களை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதில் பாரம்பரியமிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் கூட விதிவிலக்கு இல்லையென்றாகிவிட்டது. நீண்ட வருடங்களுக்கு பிறகு படத்தயாரிப்பில் இறங்கியிருக்கும் ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ், தனது ‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்தை ஒடிடி-யில் வெளியிடுமளவுக்கு இன்று ஒடிடி-யின் பலம் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.

அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார் டிஸ்னி ப்ளஸ், ஸீ5, சோனி லைவ் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய படங்களை தங்களது ஒடிடி தளத்திலேயே ரேட்டிங்கை கொடுத்து மக்கள் முன் வைக்கின்றன. பெரும்பாலான திரைப்பட ஸ்டூடியோக்களும், டெலிவிஷன் சேனல்களும், தற்போதுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்லா கட்ட நினைக்கின்றன. அதற்கு சரியான தளமாகி இருக்கிறது ஒடிடி.

இந்தியாவில் சந்தா செலுத்தி ஒடிடி சேவைகளைப் பெறுபவர்களின் எண்ணிக்கை, 20219-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021-ம் ஆண்டில் 65-70% வளர்ச்சியை அடைந்திருக்கிறது என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. இந்த அசுர வளர்ச்சி தொடர்ந்து நிலைக்குமா என்பது தெரியாது என்றாலும், தற்போது 110 மில்லியன் இந்தியர்கள், சந்தா செலுத்தி அசல் படைப்புகளைப் பார்த்து வருகிறார்கள். இது வெறும் 15% மட்டுமே. மீதமுள்ள 85%-ஐ குறி வைத்து ஒடிடி தளங்கள் களத்தில் முழுவீச்சில் இறங்கியிருக்கின்றன.

கவுண்டர் பாயிண்ட் ஆய்வு, இந்தியச் சந்தையில் இருக்கும் 89% ஆடியன்ஸ் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் என்கிறது. இந்திய ஒடிடி சந்தையில் ஹாட் ஸ்டார் முன்னணியில் இருக்கிறது. இதையடுத்து நெட்ஃப்ளிக்ஸ், அமேஸான் ப்ரைம், சோனி லைவ் போன்ற ஒடிடி தளங்கள் வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த ஒடிடி வாடிக்கையாளர்களில் 55% பேர் 5 மெட்ரோ பாலிட்டன் நகரங்களைச் சேர்ந்தவர்கள். இது ஒடிடி இன்னும் சென்றடையாத சந்தை மிகப்பெரியது என்று உணர்த்தியிருக்கிறது. இந்த சந்தையைக் குறித்து வைத்து ஒடிடி தளங்கள் களத்தில் இறங்கி இருக்கின்றன. இதனால் 2021-ம் ஆண்டில் மட்டும் பிராந்திய மொழிகள் வெப் சிரீஸ் உட்பட மொத்தமாக 200 வெப் சிரீஸ்கள் வெளியாகி இருக்கின்றன.

இதன் பலனாக, ஒடிடி தளங்கள் 4.8 மடங்கு அதிக வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால், 2022-ம் நிதியாண்டில் சுமார் 4000 கோடிக்கும் அதிக வருவாயை ஒடிடி தளங்கள் பெறும் என்று தெரிகிறது. கேபிஎம்ஜி-யின் ஆய்வு படி, இந்தியாவில் இன்று ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 761 மில்லியன். இவர்களை வளைத்துப் போடும் பட்சத்தில், 2022-ம் ஆண்டின் இறுதியில் 62 மில்லியன் வாடிக்கையாளர்களை ஒடிடி தளங்கள் பெற வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

2019-ம் ஆண்டில் ஒடிடி வீடியோ தளங்கள் சுமார் 12 பில்லியன் ரூபாய் மதிப்பிலான சந்தாவை ஈட்டியிருக்கின்றன. இது 2024-ம் ஆண்டில் 74 பில்லியன் ரூபாய் ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022-ம் ஆண்டில் டிஜிட்டல் மார்க்கெட்டில் இரண்டாவது பெரிய துறையாக மீடியா & எண்டர்டெயின்மெண்ட் உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகில் ஓடிடி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. ஆனால் 2023-ம் ஆண்டில் தென்கொரியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, எட்டாவது இடத்தை இந்தியா பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2023-ல் இந்திய ஒடிடி தளத்தில் வருவாய் சுமார் 13,800 கோடியாக அதிகரிக்கும்.

ஒரு இந்திய ஒடிடி வாடிக்கையாளர் சராசரியாக நாளொன்றுக்கு 70 நிமிடங்களை ஒடிடி-யில் வீடியோ பார்க்க செலவிடுகிறார். அதேபோல் நாளொன்றுக்கு 2.5 ஒடிடி தளங்களையாவது பார்த்து ரசிக்கிறார். இந்தியாவில் இருக்கும் 30% மக்கள் ஒடிடி வீடியோ தளங்களில்தான் திரைப்படங்களைப் பார்த்து ரசிக்க விரும்புகிறார்கள். ஒடிடி தளத்தின் வாடிக்கையாளர்களில் 87% பேர் தங்களது மொபைல் ஃபோனில்தான் ஒடிடி படைப்புகளைப் பார்க்கிறார்கள், அதில் 27% தங்களது அலுவலகப் பணி நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பார்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இப்படி பல கூட்டல் கழித்தல்களை போட்டு பார்க்கையில், 2023-ம் ஆண்டில் இந்திய ஒடிடி வீடியோ மார்கெட் 5 பில்லியனை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் மற்றும் குறைந்த கட்டணத்திலான மொபைல் டேடா இவை இரண்டும் இந்திய ஒடிடி மார்க்கெட்டின் அசுர வளர்ச்சிக்கு தோள் கொடுத்திருக்கிறது.

மொபைல் டேடா சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அன்லிமிடெட் டேடாவை கொடுக்கும் வரையில் ஒடிடி தளங்களின் வளர்ச்சி இன்னும் துரிதகதியில் இருப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...