No menu items!

தள்ளாடும் பங்குச் சந்தை: வாங்கலாமா விற்கலாமா?

தள்ளாடும் பங்குச் சந்தை: வாங்கலாமா விற்கலாமா?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பவுண்ட் மதிப்பு வீழ்ச்சி, பங்கு விற்பனை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் ஒரு நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது. நேற்று முன் தினம், ஒரே நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னரும் தொடர்ந்து ஆறாவது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளின் மதிப்பு இறங்கு முகத்திலேயே வர்த்தகமாகி வருகிறது.

இந்த நிலையில் ஒரு முதலீட்டாளர் என்ன செய்ய வேண்டும்? பங்குகளை வாங்கலாமா விற்கலாமா? மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் சதீஷ்குமார் தரும் ஆலோசனைகள் இங்கே.

“இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களாக என் முதலீடுகளைப் பொறுத்து நான் என்ன செய்கிறேன் என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். அதிலிருந்து தான் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு பங்கு முதலீட்டாளர் கண்டுகொள்ள முடியும்.

sathishkumar
சதீஷ்குமார்

பொதுவாக முதலீட்டில் நான் பின்பற்றுவது ‘டாப்-டவுன் இன்வெஸ்ட்மெண்ட்’ அனுகுமுறை. மேக்ரோ எக்கனாமியில் தொடங்கி மைக்ரோ எக்கனாமி நிலமைகள் எல்லாம் பார்த்துவிட்டு, அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகள் எந்த துறைகள் நன்றாக இருக்கும் என்று அனலைஸ் செய்துவிட்டு, அந்த துறையில் எந்த நிறுவன பங்கில் முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்வது. அதாவது, நாட்டின் பொருளாதார நிலை – மேக்ரோ மற்றும் மைக்ரோ அடிப்படைகள் – வர்த்தக சுழற்சி – அதன்பின்னர் நிறுவனத்தை அடையாளம் காண்பது…

இதுதான் ‘டாப்-டவுன் இன்வெஸ்ட்மெண்ட்’ அனுகுமுறை. இதைத்தான் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் நிறைய மேனேஜர்கள் பின்பற்றுகிறார்கள். சில மேனேஜர்கள் நேர் எதிர் திசையில் இருந்தும் அனுகுவார்கள்.

சரி, நான் பின்பற்றும் ‘டாப்-டவுன் இன்வெஸ்ட்மெண்ட்’ அனுகுமுறை பற்றி பார்ப்போம். இந்த மாடலின் அடிப்படையில் பார்த்தால் அக்டோபரில் முதலீட்டுக்கு இந்தியாவை மிக முக்கியமான ‘ஸ்வீட் ஸ்பாட்’ எனலாம்.

எப்படி?

நமது அண்டை நாடுகளில் இலங்கை மிகப்பெரிய ஒரு வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது. அங்கே ஜிடிபி பிரச்சினையில் இருக்கிறது. மற்ற அண்டை நாடுகளில் பங்களாதேஷ், பாகிஸ்தான் இரண்டும்கூட பெரிய பிரச்சினையில் இருக்கிறார்கள். சீனாவைப் பொறுத்தவரைக்கும், அவர்களை பற்றி மற்றவர்கள் என்ன தெரிந்துகொள்ளலாம் என நினைக்கிறார்களோ அதை மட்டும்தான் அவர்கள் வெளியிடுவார்கள். அதைக் கடந்து அவர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பும் குறைவு. அந்தவகையில் வெளிவரும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் அங்கேயும் பிரச்சினைகள் இருக்கிறது. ஜிடிபி குறைந்திருக்கிறது.

இங்கிலாந்து அதிகாரபூர்வமாகவே ரெசசனை எதிர்கொண்டுள்ளது. ஐரோப்பாவும் நெருக்கடியில் உள்ளது. அமெரிக்கா கடந்த இரண்டு காலாண்டாகவே பணவீக்கத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது. ஆக, எல்லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆனால், இன்று இந்தியா ஒளிர்கிறது; எல்லா நெருக்கடிகளையும் கடந்து நிற்கிறது. அதனால்தான், இந்தியா ‘ஸ்வீட் ஸ்பாட்’ என்று சொன்னேன்.

கொரோனாவுக்கு முன்னால், குறிப்பாக 2018 – 2019இல் நமது பர்சில் எப்போதும் 1000 – 1500 ரூபாய் குறையாமல் வைத்திருப்போம். ஏனெனில், மளிகைக்கடை முதல் சலூன் வரை எல்லா இடங்களிலும் டிபிட், கிரிடிட் கார்டை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இன்று எல்லா இடங்களுக்கும் பர்சே இல்லாமல் போகலாம். மொபைல் மட்டும் இருந்தால் போதும். எல்லா இடங்களிலும் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்கிறார்கள். இதனால் நமது ஜிஎஸ்டி வருவாய், வருமான வரி வருவாய் உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு யுபிஐ பண பரிவர்த்தனைகள்தான் முக்கிய காரணம். வளர்ச்சியடைந்து வரும் நாடு என்னும் நிலையில் இருந்து வளர்ந்த நாடு என்னும் நிலையை நோக்கி நாம் நகர்கிறோம் என்பதற்கு இது முதல் படி.

சீனாவை எல்லா பொருட்களின் உற்பத்தி தலைநகரம் என்றே சொல்லலாம். சீப் லேபர், சிறந்த உள்கட்டமைப்பு காரணமாக கடந்த இருபது ஆண்டுகளாக சீனாவில் அதிக முதலீடுகள் செய்யப்பட்டது. சீனாவில் எதாவது ஒரு பிரச்சினை என்றால் ஐரோப்பா, அமெரிக்கா உட்பட பல முன்னேறிய நாடுகளில்கூட பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு குறையும் என்னும் அளவுக்கு இது உள்ளது. எனவே, இதனை சரி செய்வதற்காக சீனா +1 என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள். இதனால் தைவான், இந்தோனேசியா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

இப்போதே நிறைய உற்பத்தி தொழிற்சாலைகள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்துகொண்டே இருக்கிறது. ‘ஐபோன் 14’ இந்தியாவில் இருந்து, அதுவும் சென்னையில் இருந்து தயாராகி செல்கிறது. இதனால் அடுத்த 2-3 ஆண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

2018இல் நமது ஜிடிபி சேமிப்பு 1.4 சதவிகிதம்தான் இருந்தது; இன்று நமது ஜிடிபி சேமிப்பு சதவிகிதம் 4.1ஆக உயர்ந்திருக்கிறது. வருமானம் உயர்கிறது, சேமிப்பும் உயர்கிறது. சேமித்தால் தங்கம் வாங்குவார்கள், நிலம் வாங்குவார்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் இன்று நாம் அந்நிய முதலீட்டாளர்களை சார்ந்து மட்டும் இல்லை. எனவேதான் அந்நிய முதலீடு வெளியேறிய அளவுக்கு நமது சந்தை விழவில்லை.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை திரும்ப எடுத்துக்கொண்டு செல்வதால் இப்போது பங்குச் சந்தை கீழே விழுகிறது. ஆனால், இப்போது வெளியேறியுள்ள முதலீடு மீண்டும் திரும்ப இந்தியாவுக்குள் வரத்தான் செய்யும். இதனுடன் ரஷ்யா, சீனாவில் இருந்து வெளியேறும் அந்நிய முதலீடுகளும் இந்தியாவுக்குள் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, இந்திய பங்குச் சந்தை மீண்டும் உயர்வதற்கான, அப்படியே இரண்டு மடங்கு ஆகுவதற்கான வாய்ப்பு கூட உள்ளது.

இன்னொரு பக்கம் கடந்த சில ஆண்டுகள் புள்ளி விவரங்களை பார்த்தால் இந்தியாவில் நடுத்தர வர்க்கம், உயர் வருவாய் பிரிவினர், அதி உயர் வருவாய் பிரிவினர் சதவிகிதம் அதிகரித்து வருவதை கவனிக்க முடியும். இதனடிப்படையில் 2030இல் நடுத்தர வர்க்கம் மற்றும் உயர் வருவாய் பிரிவினர் சதவிகிதம் 70 – 80 வரைக்கும் உயரும் என கணிக்கப்படுகிறது. நடுத்தவர்க்கத்தினர் வருவாய் அதிகமானால் அவர்கள் அதிகம் முதலீடு செய்வார்கள் அல்லது அதிகம் செலவழிப்பார்கள். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்தியா வளர்கிறது என்பதில் ஐயமில்லை. எனவே, கடந்த சில நாட்கள் வீழ்ச்சியை பார்த்து எவரும் அச்சம்கொள்ள தேவையில்லை.

இனி எனது முதலீட்டை எப்படி செய்துள்ளேன் என்ற ரகசியத்தை சொல்கிறேன். நான் என் முதலீட்டை 3 பகுதிகளாக பிரித்திருக்கிறேன். அதில் முதல் பகுதியை இந்த வீழ்ச்சியில் ஏற்கெனவே முதலீடு செய்துவிட்டேன். இன்னும் 33, 33 சதவிகிதம் காத்திருக்கிறது. மேலும் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தால், அதை மீண்டும் மூன்றாக பிரித்து ஒரு பகுதியை முதலீடு செய்வேன். இரண்டு பகுதியை கையில் வைத்துக்கொண்டு காத்திருப்பேன். இது எனது அடுத்த 5 – 6 வருடங்களுக்கான திட்டம். இதையேதான் மற்றவர்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.

நிச்சயம் முதலீடு செய்வதற்கு இது சிறந்த நேரம்” என்றார் சதீஷ்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...