No menu items!

இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு இதை செய்யுமா?

இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு இதை செய்யுமா?

“இசைக் கலைஞர் மொசாட்டுக்கு அவர் பிறந்த நாடான ஆஸ்திரியா உருவாக்கியுள்ளது போல் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு ஒரு அருங்காட்சியத்தை ஏற்பாடு செய்து இந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தி வைக்க வேண்டும்” என்று மலேசிய எழுத்தாளரும், தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவருமான சுபாஷினி தெரிவித்துள்ளார்.

“இசைஞானி இளையராஜா, தான் ஒரு சிம்பொனி இசையை உருவாக்கி முடித்திருப்பதாகவும் 35 நாட்களுக்குள் அதனை முடித்துள்ளதாகவும் சிம்பொனி இசைக்கான அடிப்படையான நான்கு வகை அசைவுகளையும் உள்ளடக்கிய வகையில் இது அமைந்திருப்பதாகவும் மகிழ்ச்சியாக அறிவித்ததுக்கு முதல்நாள்…

நான் ஹங்கேரி நாட்டின் தலைநகர் பூடாபெஷ்ட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு ஓப்பரா கட்டிடத்திற்குச் சென்று பார்த்தேன். அப்போது இசைஞானியின் நினைவுகள் மனதில் வந்து சென்றன. இசைஞானியை சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது ஸ்டூடியோவில் சந்தித்து பேசியதும் ஞாபகம் வந்தது. இசைஞானி இளையராஜா அவ்வப்போது பூடாபெஷ்ட் வந்து இங்குள்ள இசை ஸ்டுடியோக்களில் தனது இசைக்கான பணிகளை மேற்கொள்வதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன்.

பயணம் முடித்து திரும்பி வரும் வழியில் ஆஸ்திரியாவிற்கும் ஜெர்மனிக்கும் எல்லையில் இருக்கும் அழகிய சுற்றுலா தளமான சால்ஸ்பெர்க் நகர் சென்றேன். இசைமேதை மொசாட் பிறந்த நகரம் இது. ஆறு வயதில் வயலின் இசைக் கச்சேரியை நிகழ்த்தியவர் மொசாட். பின்னர் வியன்னாவிலுமாக இந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை 35 வருடம் வரை நீடித்தது.

ஓப்பரா வகை இசைக்குத் தனிப் புகழ் சேர்த்தவர், மொசாட். அதைக் கொண்டாடும் விதமாக ஆஸ்திரியா அரசு இந்த மாபெரும் கலைஞனுக்கு சாலாஸ்பெர்க் நகர் முழுவதும் பல சிறப்புகளை ஏற்படுத்தி இந்த நகரையே ‘மொசாட் நகர்’ எனச் சிறப்பித்திருக்கிறது. அவர் பிறந்த இல்லம் இன்று அழகிய ஓர் அருங்காட்சியகமாக உள்ளது. அவர் பயன்படுத்திய இசைக் கருவிகள், அவரது நோட்டுகள், அவரது பொருட்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் இடமாகவும் பொதுமக்கள் வந்து சென்று பார்த்து செல்லும் இடமாகவும் அருமையான அருங்காட்சியகமாக இருக்கிறது.

மொசாட் வந்து அமர்ந்து காப்பி அருந்திய ரெஸ்டாரன்ட் இன்று சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்ட ஒரு உணவகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலா பயணிகள் வந்து சென்று வாங்கி செல்வதற்கு அவரது புகைப்படம் பொறித்த பல பொருட்கள் வியாபாரம் செய்யப்படுகின்றன. சால்ஸ்பெர்க் நகர் என்றாலே மொசாட் தான் எனும் அளவிற்கு இந்த நாடும் நகரமும் ஒரு இசைக் கலைஞனுக்குப் புகழ் சேர்த்திருக்கிறது.

இந்தப் பயணம் முடித்து வந்த மறுநாள்தான் இசைஞானி இளையராஜாவின் ஒரு சிறிய பேட்டியில் அந்த அறிவிப்பு வெளியானது.  ஆச்சரியமும் பெருமையும் மகிழ்ச்சியும் அளித்த செய்தி.

இசை உலகில் இது ஒரு சாதனை. எல்லோரும் போற்றி வாழ்த்துக்கள் கூறி மகிழ வேண்டிய ஒரு சாதனை.

இந்திய நிலத்தில் ஒரு மாபெரும் இசைக்கலைஞன் இசைஞானி இளையராஜா. ஆஸ்திரியா அரசு மொசாட்டுக்கு செய்துள்ளதுபோல் இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு ஒரு அருங்காட்சியத்தை ஏற்பாடு செய்து இந்த மாபெரும் கலைஞனின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படுத்தி வைக்க வேண்டியது அவசியம்.

ஆனால், இப்போது சில பத்திரிகைகளில் வெளி வருகின்ற செய்திகளை பார்க்கும்போது அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. ஒரு பத்திரிகை செய்தி சொல்கிறது… ‘வைரமுத்துவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார் இளையராஜா.’ டிவி சேனல்களும் இப்படித்தான் அறிவிக்கின்றனர். என்ன முட்டாள்தனமான ஒரு செய்தி தலைப்பு இது.

இசைஞானி இளையராஜா படைத்திருப்பது சிம்பொனி. இது ஒரு கலை படைப்பு. இசைஞானி இளையராஜாவின் சிம்பனி இசைப் பிரியர்களுக்கு மட்டுமல்ல உலக இசைக்கும் ஒரு பரிசு.

ஒரு கலை படைப்பிற்கும் வம்பு தும்பு சண்டைக்கும் வேறுபாடு தெரியாத பத்திரிகையாளர்களை நினைத்து வருந்தத்தான் தோன்றுகிறது.

வம்பு சண்டைகள், குற்றம் குறை சொல்லுதல் போன்ற சிந்தனைகளில் இப்பொழுது தமிழ்ச் சூழல் மிக ஆழமாக சென்றுவிட்டது என்பது தெரிகிறது. உண்மையான கலைப் படைப்புகளை அறிந்து அவற்றை பாராட்டி மகிழும் அழகிய மனம் தொலைந்தவர்களாக தமிழ் சூழலில் மக்கள் இருக்கின்றார்கள்.

பிறரது குடும்ப வாழ்க்கையும் சாதி சிந்தனைகளும் வம்பு சண்டைகளும் அவற்றை எப்படி ஊதி பெரிதாக்குவது என்பதும்தான் ஊடகங்களின் செயல்பாடாக இருக்கும் என்றால் நிச்சயமாக இன்று மேற்குலகம்  அடைந்திருக்கும் வளர்ச்சியை என்றைக்கும் நம்மால் அடையவே முடியாது” என்று தெரிவித்துள்ளார் சுபாஷினி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...