No menu items!

சீனியர் கீர்த்தி ஜூனியர் கீர்த்தி – யாருக்கு மவுசு?

சீனியர் கீர்த்தி ஜூனியர் கீர்த்தி – யாருக்கு மவுசு?

தமிழ் சினிமாவில் இன்றைய நிலவரப்படி, இளம் நடிகைகளில் முன்னணி இருப்பவர் கீர்த்தி சுரேஷ். ஆனால் அவருக்கும் இப்போது வெற்றிப் படம் கொடுத்தாக வேண்டிய கட்டாயம்.

இதனால் கீர்த்தி சுரேஷூக்கு பதிலாக வேறு இளம் கதாநாயகியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் இங்குள்ள இளம் இயக்குநர்கள்.

இந்த தேடலில் முக்கிய தேர்வாக மாறியிருக்கிறார் கீர்த்தி ஷெட்டி. இதனால் இப்போது இந்த ஜூனியர் கீர்த்திக்கும், சீனியர் கீர்த்திக்கும்தான் யார் உசத்தி என்ற போட்டி கடுமையாகி இருக்கிறதாம்.

சீனியர் கீர்த்தி சுரேஷூக்கு இப்போதைய தேவை ஹிட் படங்கள். அதே பிரச்சினையில்தான் ஜூனியர் கீர்த்தி ரெட்டியும் இருக்கிறார். தெலுங்கில் நடித்த முதல் இரண்டுப் படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் அடுத்தடுத்த படங்கள் எதுவும் எடுப்படவே இல்லை.

இதனால் தமிழ் சினிமா பக்கம் வந்த கீர்த்தி ஷெட்டி, சூர்யாவுக்கு ஜோடி என்றதும் எதுவும் சொல்லாமல் பாலா இயக்கத்தில் உருவாக இருந்த ‘வணங்கான்’ படத்தில் ஒப்பந்தமானார். ஆனால் சூர்யா – பாலா பஞ்சாயத்தினால், சூர்யா எஸ்கேப் ஆக, சூர்யா இல்லையென்றதும் கீர்த்தியும் கழன்று கொண்டார்.

கொஞ்ச நாளில் லிங்குசாமி இயக்கத்தில் நடித்த ‘வாரியர்’ படம் கைக்கொடுக்குமென ஜூனியர் கீர்த்தி ஆசைப்பட்டார். அந்த ஆசை நிறைவேறவில்லை. ஆனால் இப்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஜூனியருக்கு கிடைத்திருக்கின்றன.

ஜெயம் ரவியுடன் நடிக்கும் ஃபேண்டஸி படம் ‘ஜூனி’, லவ் டுட புகழ் பிரதீப் ரங்கநாதனுடன் ‘லவ் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி’, அடுத்து இப்போது கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’ என கைவசம் மூன்று படங்கள் வைத்திருக்கிறார் ஜூனியர் கீர்த்தி.

இதுதான் சீனியர் கீர்த்தியை ஆட்டம் காண வைத்திருக்கிறதாம். இந்த போட்டியில் தமிழ் சினிமாவில் நிலவும் கதாநாயகி பஞ்சத்தைப் போக்குவதில் வெற்றி பெற போவது சீனியரா ஜூனியரா என்பது இனிதான் தெரியும்.


பெயிண்ட்டுக்கு பதிலாக சைக்கிளை எடுத்த ஷங்கர்

ஷங்கர் படம் ஷூட்டிங் நடக்கிறது என்றால், குறிப்பாக பாடல் காட்சிகள் எடுக்கப்படுகிறது என்றால், ஷூட்டிங் நடக்கும் ஊரில் இருக்கும் பெயிண்ட் வியாபாரிகளுக்கு கொண்டாட்டம்தான். அந்த ஊரில் இருக்கும் பாலம், மேம்பாலம், ரயில் வண்டிகள், பெரும் பாறைகள், மலைகள், வீடுகள், தெருக்கள் என எல்லாவற்றையும் பெயிண்ட் அடித்து வண்ணமயமாக மாற்றிவிடுவார்கள்.

இப்படி பெயிண்ட் அடித்து பிரம்மாண்டத்தை காட்டிய ஷங்கருக்கு இப்போது கடும் போட்டியாக பாகுபலி புகழ் ராஜமெளலி இருக்கிறார். இவர் காட்டிய பிரம்மாண்டம் அடுத்தகட்ட ஆச்சர்யமாகிவிட்டது. இதனால் ஷங்கர் தனது அடுத்தகட்ட கற்பனையைக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

ஷங்கர் இயக்கத்தில் படம் வெளிவந்து ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் அவருடைய பெரிய ஹிட் படங்களில் ஒன்றான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளி வர இருக்கிறது. இதன் கதையமைப்பு லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரானது என்பதால், ஷங்கரின் வழக்கமான முத்திரை இருக்கும்.

ஆனால் ஷங்கர் இயக்கும் முதல் நேரடி தெலுங்குப் படமும் இப்போது திரையிடலுக்கு தயாராகி வருகிறது. ’இந்தியன் 2’ கைவிடப்பட்ட நிலை என்று வந்த போது, தெலுங்குப் படம் இயக்க டோலிவுட்டுக்கு சென்றார் ஷங்கர். சிரஞ்சீவியின் மகன் ராம் சரணை வைத்து இயக்கும் தனது முதல் தெலுங்குப் படத்திற்கு ’கேம் சேஞ்சர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்.

இந்த படத்தின் கதையிலும் அரசியல் பின்னணிதானாம். ராம் சரணுக்கு, அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரங்கள். இதில் அப்பா கதாபாத்திரம் வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் சைக்கிள் முக்கிய குறியீடாக இடம்பெறுகிறதாம்.

அதாவது அப்பா ராம் சரண், சட்டசபைக்கு சைக்கிள் வருவாராம். பின்னர் அதே சட்டசபைக்கு அவர் முதலமைச்சராக அடியெடுத்து வைக்கும் வகையில் காட்சிகள் இடம்பெறுகிறதாம்.

ஷங்கர் பெயிண்ட்டுக்கு பதிலாக சைக்கிளை கையிலெடுக்க காரணம், தெலுங்கு தேச நிறுவனர், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவை நினைவுப்படுத்து காட்சிகளுக்காகதானாம். என்.டி, ராமாராவ் கட்சியான தெலுங்கு தேசத்தின் சின்னம் சைக்கிள். அதனால் இந்த காட்சிகள் உணர்வு ரீதியாக பிரம்மாண்டமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கதையின் படி அப்பா ராம் சரணுக்கு அஞ்சலி ஜோடி. மகன் ராம் சரண் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. ஊழலை எதிர்த்து போராடும் இவருக்கு கியாரா அத்வானி ஜோடி.


’விடுதலை 2’-ல் சூரி டம்மியாக்கப்படுகிறாரா?

பரோட்டா சூரி என்ற ஒரு நகைச்சுவை நடிகரை, இன்று சினிமா ரசிகர்கள் பாராட்டும் கதையின் நாயகராக மாற்றிய படம் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’.

ஐந்தாறு கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட படம் கதை மற்றும் கதாபாத்திரங்களின் போக்கு காரணமாக, பெரிய பட்ஜெட் படமாகி போனது. திட்டமிட்ட பட்ஜெட்டை விட ஏழெட்டு மடங்கு அதிக பட்ஜெட்டில் தயாரானது. இதனால் விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இப்போது இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படப்பிடிப்பு 99 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இந்த ‘விடுதலை -2’ல் சூரிக்கு முக்கியத்துவம் இருக்காதாம். காட்சிகளை இணைக்கும் நான்கைந்து காட்சிகள் மட்டுமே சூரிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்குமாம்.

மற்றபடி, விஜய் சேதுபதி நடித்த வாத்தியார் கதாபாத்திரம் எப்படி வாத்தியராக மாறினார், அவருடைய போராட்டம் என்ன, எப்படி போராளிக்கு தலைவன் ஆனார் என்று திரைக்கதை வேகமெடுக்குமாம். இதனால் வாத்தியார் கதாபாத்திரம் சம்பந்த பட்ட காட்சிகள்தான் அதிகம் இடம்பெற இருக்கின்றன. மேலும் இதில் வாத்தியார் கதாபாத்திரத்துடன் மக்களும் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்று வலியை சொல்லும் காட்சிகள் அதிகம் இருக்கிறது என்கிறார்கள். அதாவது விடுதலை முதல் பாகத்தைவிட விடுதலை 2-ல் சோதனைகளும், வேதனைகளும், வலியும், அவல குரல்களும் அதிகம் இருக்கிறதாம்.

மேலும் வாத்தியார் கதாபாத்திரத்திற்கு குடைச்சல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் இணைந்திருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே. சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளே அதிக இருப்பதால், சூரி டம்மியாகதான் இருப்பார் என்றும் ஒரு பேச்சு அப்பட குழுவினர் மத்தியில் அடிப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...