இந்திய நாடாளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் யார் ஜெயிப்பார்கள்? மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்?– இப்படி ஒரு கேள்வியை முன்வைத்து India Today-CVoter Mood இணைந்து மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது.
நாடுமுழுவதும் 1,40,917 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில், மக்கள் மனதில் இன்னும் பாரதிய கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கே அதிக ஆதரவு இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதில் இப்போது தேர்தல் நடந்தால் பாரதிய ஜனதா கட்சி தலமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 284 தொகுதிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 191 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ள மற்ற சில விஷயங்கள்…
இந்திய மக்களிடையே மோடியின் செல்வாக்கு இன்னும் குறையாமல் இருக்கிறது. மோடியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக 72 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
பாரதிய ஜனா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கான ஆதரவு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 41 சதவீதமாக இருந்தது. அது இப்போது 43 சதவீதமாக அதிகரித்துள்ளது, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 28 சதவீத ஆதரவு இருந்தது. அது இப்போது 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ராகுல் காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரை வெறும் சத்தம் வாக்குகளாக மாறாது என்று 37 சதவீதத்தினர் கூறியிருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த இது உதவி செய்யாது என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் எடுத்த கருத்துக் கணிப்பில் மத்திய அரசு மீது அதிருப்தியாக இருப்பதாக 37 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை இப்போது 18 சதவீதமாக குறைந்துள்ளது.
மோடி அரசின் சாதனைகளாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தியது (20 சதவீதம்), காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது (14 சதவீதம்), ராமர் கோயில் கட்டுவது (12 சதவீதம்) என்று கூறியிருக்கிறார்கள்.
மோடி அரசின் மிகப் பெரிய தோல்விகளாக விலையேற்றத்தை கட்டுப்படுத்தாது (25 சதவீதம்), வேலை வாய்ப்பின்மை (17 சதவீதம்) ஆகியவற்றை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
எதிர்க் கட்சிக் கூட்டணியால் பாஜக கூட்டணியை எதிர்க்க முடியுமா என்ற கேள்விக்கு 2022 ஜனவரியில் 49 சதவீதத்தினர் முடியும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இந்த 2023 ஜனவரியில் 39 சதவீதத்தினர்தான் எதிர்கட்சி கூட்டணியினர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எதிர்கட்சிகளால் முடியாது என்று 47 சதவீதத்தினர் கூறுகிறார்கள்.