No menu items!

ஆனந்த் அம்பானிக்கு என்ன பிரச்சினை?

ஆனந்த் அம்பானிக்கு என்ன பிரச்சினை?

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி. அவரது ஒருநாள் வருமானம் 160 கோடி ரூபாய் என்று புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன. மொத்த சொத்து மதிப்பு 3 லட்சம் கோடி.

இத்தனைப் பெரிய பணக்காரருக்கு கவலையே இருக்காது…பணத்தால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்றுதான் நாம் நினைப்போம்.

ஆனால் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. அவர்களால் அதை தீர்க்க முடியவில்லை.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்செண்ட் நிச்சயதார்த்த விழாவை பார்த்தோம். அதில் ஆனந்த உடல் பெருத்து….நடக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்த காட்சிகளையும் பார்த்தோம்.

அவரது குண்டான உடல் சமூக ஊடகங்களில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானது. பணம் இருப்பதால் இத்தனை அழகான பெண்ணை திருமணம் செய்ய முடிகிறது என்றெல்லாம் வெறுப்பு கருத்துக்கள் வெளிவந்தன.

இதே போன்ற வெறுப்பு கருத்துக்கள் சமீபத்தில் டிவி நடிகை மகாலட்சுமி உடல் பருமனான தயாரிப்பாளர் ரவீந்தரைத் திருமணம் செய்துக் கொண்டபோதும் வந்தது.

இங்கே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். ஆனந்த் திருமணம் செய்யும் ராதிகா மெர்ச்செண்ட்டும் மிகப் பெரிய கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். அது மட்டுமில்லாமல் ஆனந்தும் ராதிகாவும் பல வருடங்கள் நட்பில் இருந்தவர்கள். பணத்துக்காக என்று கிண்டலடிப்பது சரியல்ல.

உடல் பருமன் பிரச்சினையை ஜாலியாக கிண்டலடித்துவிட்டுப் போய்விடலாம். ஆனால் அந்தப் பிரச்சினைக்குப் பின் வேதனைகள் சோகங்கள் இருக்கின்றன என்பதை கேலி செய்பவர்கள் உணர வேண்டும்.

அம்பானி உலகின் மிகப் பெரிய பணக்காரர்தான். ஆனால் அந்தப் பணத்தால் தங்கள் வாரிசுக்கு வந்துள்ள பிரச்சினையை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்பது சோகம்.

ஆனந்த் அம்பானிக்கு சிறு வயதிலேயே கடுமையான ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். மூச்சுவிடவே சிரமம். அதை சரி செய்வதற்கு ஏகப்பட்ட மருந்துகள் எடுத்திருக்கிறார். முக்கியமாய் ஸ்டீராய்ட்ஸ் மருந்துகளை அதிக அளவில் எடுத்திருக்கிறார். இந்த ஸ்டீராய்ட்ஸ் மருந்துகள் அவர் உடல் எடையை அதிகரித்திருக்கிறது.

தன் மகன் ஆனந்தின் உடல் பருமனைப் பற்றி நீட்டா அம்பானி சில வருடங்களுக்கு முன் பேட்டியளித்திருந்தார். அதில், ’ஆனந்துக்கு உடல் பருமன் பிரச்சினையும் ஆஸ்துமாவும் இருந்தது. ஆஸ்துமாவுக்காக ஸ்டீராய்ட்ஸ் சாப்பிட்டது ஆனந்தின் உடல் பருமனை அதிகரித்து விட்டது’ என்று கூறியிருக்கிறார்.

ஆனந்தின் உடல் பருமனை குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
அமெரிக்காவுக்குச் சென்று அங்கு உலகின் மிகச் சிறந்த பருமன் குறைப்பு மருத்துவமனையில் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

2016ல் ஆனந்த் 108 கிலோ எடையைக் குறைத்தார். உடல் மெலிந்த அவரது புகைப்படங்கள் அப்போது பலரது கவனத்தைக் கவர்ந்தன.

இந்த எடை குறைப்புக்காக அவர் செய்த காரியங்கள் கடுமையானவை.

தினமும் 21 கிலோமீட்டர் நடைபயிற்சி. ப்ரோட்டீன் அதிகமான உணவுகள். சர்க்கரை கிடையவே கிடையாது. கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் இருக்கும் அரிசி போன்ற உணவுகள் அறவே கிடையாது. கொழுப்பு சக்தி உள்ள உணவுகளும் கிடையாது.

காய்கறிகள், கீரைகள், சிறு தானியங்கள் இவையே ஆனந்தின் உணவாக இருந்திருக்கிறது. இளைஞர்கள் விரும்பி உண்ணும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் அனைத்துக்கும் நோ.

இப்படி ஒன்றரை வருடம் மிகக் கடுமையாக பயிற்சி எடுத்ததில் 108 கிலோ குறைத்தார். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இந்த எடை குறைப்பு இயற்கை முறையில் நடந்திருக்கிறது. எந்தவித அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் இந்த எடை குறைப்பு இரண்டு வருடங்கள்தாம் நீடித்தது. 2020ல் மீண்டும் ஆனந்தின் எடை மிக அதிகமாக கூடிவிட்டது. அதன்பிறகு அவரால் குறைக்க முடியவில்லை.

இப்போது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியிலும் சமீபத்தில் இந்த தம்பதி திருப்பதி கோயிலுக்கு வந்திருந்த போது எடுக்கப்பட்ட வீடியோக்களிலும் ஆனந்தின் உடல் பருமன் பலராலும் கவனிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது உடல் பருமனைக் குறைக்க ஆனந்த் மீண்டும் தீவிர பயிற்சி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற செய்திகள் வருகின்றன.

பார்ப்போம் இந்த முறை ஆனந்த் அம்பானி என்ன செய்கிறார் என்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...