ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் தல தோனிக்கே தண்ணி காட்டியவர் சாய் சுதர்சன். இறுதிப் போட்டியில் 47 பந்துகளில் 96 ரன்களை சாய் சுதர்சன் குவிக்க, 200 ரன்களைக் கடந்தது குஜராத் டைட்டன்ஸ். இதனால் ஒரு கட்டத்தில் சிஎஸ்கேவின் ஐபிஎல் கனவு தகர்ந்துவிடுமோ என்றுகூட ரசிகர்கள் பயந்தார்கள். ஆனால் மழைக்கு பிறகு சிஎஸ்கே வீரர்கள் காட்டிய திறமையால் கோப்பை கைவசமானது.
பரபரப்பான இந்த இறுதிப் போட்டிக்கு பிறகு யார் இந்த சாய் சுதர்சன் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தண்ணி காட்டிய இவர், சென்னையைச் சேர்ந்தவர். 21 வயது ஆகிறது.
சாய் சுதர்சனின் அப்பா பரத்வாஜ் ஒரு தடகள வீரர். 1993-ம் ஆண்டில் நடந்த தேற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றவர். அம்மா உஷா அழகு, சிறுவயதில் வாலிபால் விளையாட்டு வீராங்கனையாக இருந்தவர். வாலிபால் விளையாட்டில் தமிழக அணிக்காக ஆடியுள்ளார். பிற்காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் எல்.பாலாஜி, அபினவ் முகுந்த், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல் உள்ளிட்ட வீரர்களுக்கு கண்டிஷனிங் கோச்சாக இருந்து, அவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவியுள்ளார்.
பெற்றோர் இருவரின் உடலில் ஓடுவது விளையாட்டு ரத்தம் என்பதால் சாய் சுதர்சனுக்கும் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. சிறுவயது முதலே கிரிக்கெட்டில் தீவிரமாக பயிற்சி பெற்று வந்தார் சாய் சுதர்சன். கொரோனா காலத்தில் சென்னையில் பயிற்சிபெற சில கட்டுப்பாடுகள் இருந்தபோது, தினமும் 30 கிலோமீட்டர் தூரம் பயணித்து புறநகர் பகுதிகளுக்கு சென்று பயிற்சி பெற்றார். இந்த இடைவிடாத பயிற்சிதான் இன்று அவருக்கு வெற்றியை கொடுத்திருக்கிறது.
சாய் சுதர்சன் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில்தான். இந்த தொடரில் 2021-ல் லைகா கோவை கிங்ஸ் அணிக்காக ஆடிய சாய் சுதர்சன் 8 இன்னிங்ஸ்களில் 358 ரன்களைக் குவித்தார். இதில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் 87 ரன்களைக் குவித்தது பெரிய அளவில் பேசப்பட்டது. இத்தனைக்கும் அந்த ஆட்டத்தில் சேலம் அணியில் நடராஜன்ம் பெரியசாமி உள்ளிட்ட மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்துள்ளனர். தமிழகத்துக்காக 20 ஓவர் கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக ஆடியுள்ளார்.
லைகா கோவை கிங்ஸ் அணிக்காக சுதர்சன் ஆடிய விதம்தான் அவரை ஐபிஎல் பக்கம் கரை ஒதுக்கியது. 2022-ல் நடந்த ஐபிஎல் தொடரின்போது விஜய் சங்கர் காயத்தால் பாதிக்கப்பட, அவருக்குப் பதில் 20 லட்சம் ரூபாய் என்ற அடிப்படை விலைக்கு சாய் சுதர்சனை வாங்கிப் போட்டது குஜராத் டைட்டன்ஸ். கடந்த ஆண்டில் 5 போட்டிகளில் மட்டும் ஆடிய சாய் சுதர்சன், 145 ரன்களை மட்டுமே எடுத்தார். அணியில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஆனால் அதற்கும் சேர்த்து இந்த ஆண்டில் சாத்திருக்கிறார். 8 இன்னிங்ஸ்களில் 362 ரன்களைக் குவித்துள்ளார். இதன்மூலம் குஜராத் கிங்ஸ் அணியில் நிரந்தர இடம் பிடித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 96 ரன்களைக் குவித்ததைப் பற்றி கூறும் சாய் சுதர்சன், “போட்டிக்கு முன்னதாக என்னிடம் பேசிய பயிற்சியாளர்கள், ஒரு பந்தைக்கூட டாட் பந்தாக விடக்கூடாது. அனைத்து பந்துகளிலும் ரன்களைக் குவிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள். என்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆடுமாறு கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் ஆலோசனைப்படி ஆடினேன். முதலில் நிதானமாக ஆடினாலும், பிட்ச் பழக்கப்பட்ட பிறகு அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தேன்” என்கிறார்.