No menu items!

செந்தில் பாலாஜி To அன்பில் மகேஷ் – கை மாறும் டாஸ்மாக் – மிஸ்.ரகசியா

செந்தில் பாலாஜி To அன்பில் மகேஷ் – கை மாறும் டாஸ்மாக் – மிஸ்.ரகசியா

கையில் பெரிய ஸ்வீட் பாக்ஸோடு ஆபீசுக்குள் என்ட்ரியானாள் ரகசியா. போட்டிருந்த டி ஷர்ட், ஹேண்ட் பேக், பொட்டு, ஸ்வீட் பாக்ஸில் இருந்த லட்டு என எல்லாமே மஞ்சள் நிறமாக இருந்தது.

“சிஎஸ்கே வெற்றியை கொண்டாடுற போல”

“பின்ன சும்மாவா?… 5-வது தடவையா கோப்பையை ஜெயிச்சிருக்கோம். இதைக் கொண்டாடாம இருக்க முடியுமா? நைட்டெல்லாம் தூக்கமே இல்லை.”

“உனக்கு சந்தோஷத்தால தூக்கம் இல்லை. ஆனா சில அரசியல்வாதிகளுக்கு ரெய்ட் பயத்தால தூக்கம் வர மாட்டேங்கு.”

“நீங்க சொல்றது செந்தில்பாலாஜியைப் பத்தின்னா அதில அவ்வளவா உண்மை இல்லை. அவர் தைரியமாத்தான் இருக்காரு. வெளிநாட்டுக்கு பயணம் போகறதுக்கு முன்னாலயே செந்தில்பாலாஜியைக் கூப்ட்டு ரெய்ட் நடக்க வாய்ப்பு இருக்கிறதா முதல்வர் எச்சரிச்சு இருந்தாராம். தேவைப்பட்டா அமலாக்கத்துறை உங்களை விசாரிக்கவும் வாய்ப்பு இருக்குன்னு அப்ப முதல்வர் சொல்லி இருக்காரு. இதனால உஷாரான செந்தில் பாலாஜி, அப்பவே முக்கிய ஆவணங்களை பாதுகாப்பான வேற இடங்களுக்கு அனுப்பி வச்சதா சொல்றாங்க. அதனால ரெய்ட் பத்தியெல்லாம் அவர் அதிகம் கவலைப்படல. ஆனா முதல்வர் குடும்பம்தான் டென்ஷனா இருக்கு”

“அவங்களுக்கு என்ன டென்ஷன்?”

“டெல்லி மதுபான ஊழல் மாதிரி தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழல்-ங்கிற எதிர்க்கட்சிகளோட விமர்சனம் முதல்வர் குடும்பத்தை யோசிக்க வச்சிருக்கு. அதிமுக ஆட்சியில நத்தம் விஸ்வநாதனும், தங்கமணியும் டாஸ்மாக் அமைச்சர்களா இருந்தாங்க. அவங்க எந்த சர்ச்சையிலயும் சிக்காம பார்த்துக்கிட்டாங்க. ஆனா செந்தில் பாலாஜி இரண்டு வருஷத்துலயே ஏகப்பட்ட சிக்கல்ல சிக்கிட்டார். அவர் மன்னார்குடி குடும்பத்துல பயிற்சி பெற்றவர். மன்னார்குடி குடும்பத்தால ஜெயலலிதா கஷ்டப்பட்டதைப் போல செந்தில் பாலாஜியால நாமளும் கஷ்டப்படுவோமோங்கிற பயம் அவங்களுக்கு. முதல்வர் குடும்பம் மட்டுமில்லாம திமுகவோட மூத்த தலைவர்கள்கிட்டயும் செந்தில்பாலாஜியால ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்துடுமோங்கிற பயம் இருக்கு.”

“எல்லாருக்கும் பயம்னா… அவரை பதவியில இருந்து மாத்திடுவாங்களோ?”

“அதுக்கும் வாய்ப்பு இருக்கு. அப்படி நடந்தா டாஸ்மாக் துறையை கைப்பற்ற அமைச்சர்கள் மத்தியில சின்ன போட்டியே இருக்கு. மூத்த அமைச்சர்களான துரைமுருகனும் நேருவும் இந்த துறையை பாசமா பார்க்கத் தொடங்கி இருக்காங்க. ஆனா இந்த துறையைப் பொறுத்தவரைக்கும் உதயநிதியோட சாய்ஸ் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழின்னு அறிவாலயத்துல பேசிக்கறாங்க. அவர்கிட்ட இந்த பொறுப்பை ஒப்படைக்கச் சொல்லி ஸ்டாலின்கிட்ட உதயநிதி சிபாரிசு செஞ்சிருக்காராம். இன்னொரு பக்கம் வருமானவரித் துறை அதிகாரிகள் மேல நடந்த தாக்குதல் விஷயத்துல செந்தில் பாலாஜியை கைது செய்ய முடியுமான்னு பாஜக மேலிடம் யோசிச்சுட்டு இருக்காம்.”

“இவ்வளவு டென்ஷன் தன்னைச் சுத்தி இருந்துமா செந்தில்பாலாஜி கூலா இருக்காரு?”

“அதை நினைச்சுத்தான் திமுக நிர்வாகிகளும் ஆச்சரியப்படறாங்க. ரெய்டு நடந்த நாள் அவர் கோட்டையில் அதிகாரிகளோட கூட்டம் நடத்தி இருக்கார். அடுத்த நாள் கரூரில் கட்சிக்காரங்களோட பேசின செந்தில்பாலாஜி, ‘அவங்க பாட்டுக்கு ரெய்ட் நடத்தட்டும். நாம கலைஞர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவோம்’னு சொல்லி இருக்கார். கட்சிக்காரங்க இதைப்பத்திதான் ஆச்சரியமா பேசிக்கறாங்க.”

“புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா பத்தி ஏதாவது தகவல் உண்டா?”

“முதல்ல இந்த விழாவுக்கு காஞ்சி சங்கர மடம், சிருங்கேரி மடம்னு பல மடங்களோட தலைவர்களை கூப்பிடத்தான் பிரதமர் திட்டமிட்டு இருந்தாராம். ஆனா அவங்களை மட்டும் கூப்ட்டு ஜீயர்களைக் கூப்பிடலைன்னா அது சர்ச்சை ஆகிடும். அதனால பேசாம தமிழ்நாட்ல இருக்கற ஆதீனங்களோட தலைவர்களை கூப்பிடலாம். இதன் மூலமா பாஜக பிராமணர்களின் கட்சிங்கிற இமேஜை உடைச்சுடலாம்னு சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் அட்வைஸ் சொல்லி இருக்கிறார்”

”ஆடிட்டருக்கும் இன்னும் பவர் இருக்கா? இல்லைனு ஒரு பேச்சு வந்ததே?”

“ஆன்மிக விஷயங்கள்ல இவரைதான் கேக்குறாங்களாம். அரசியலுக்கு அண்ணாமலை ஆன்மிகத்துக்கு ஆடிட்டர்” சிரித்தாள் ரகசியா.

“புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவைப் பற்றிய அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட ட்விட்டர் பதிவு சர்ச்சை ஆகிடுச்சே?”

“கரெக்ட். வெளிநாட்டுலருந்து முதல்வர் கூப்ட்டு டோஸ் விட்டிருக்கிறார். அந்த பதிவை நீக்கச் சொல்லியிருக்கிறார். முதல்வர் கடுப்பாயிட்டார்னு தெரிஞ்சதும் உடனே எடுத்துட்டார். முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு போனதுல இருந்தே திமுகவுக்கு நேரம் சரியில்லை. செந்தில்பாலாஜி வீட்ல ரெய்ட், உதயநிதி சம்பந்தப்பட்ட அறக்கட்டளை சொத்துகள் முடக்கம்னு ஏகப்பட்ட சிக்கல்கள் போயிட்டு இருக்கு. இந்த நேரத்துல இப்படி ஒரு ட்விட்டர் பதிவைப் போட்டு மனோ தங்கராஜ் புது சர்ச்சையைக் கிளப்புறாரேன்னு திமுக மூத்தவங்களுக்கு கடுப்பு”

“முதல்வர் இல்லாமலேயே புதிய தலைமை நீதிபதியோட பதவியேற்பு விழாவை ஆளுநர் நடத்தி இருக்காரே?”

“ஆளுநர் இப்படி செஞ்சதுல எந்த தப்பும் இல்லைன்னு திமுகவின் மூத்த வழக்கறிஞர்கள் கட்சித் தலைமைக்கு சொல்லி இருக்காங்க. தலைமை நீதிபதி பதவி காலியா இருந்தால் பல சிக்கல்கள் ஏற்படும். அதனாலதான் இந்த பதவியேற்பு விழா நடந்ததுன்னு அவங்க சொல்லி இருக்காங்க. ஆளுநர் தரப்பும் முறையா அமைச்சர்களுக்கு அழைப்பு அனுப்பியிருக்கு. அதானால இந்த விஷயத்துல எந்த சர்ச்சையும் இல்லை. திமுக இதை பெரிதாக்க விரும்பவில்லை”

“ஆமாம்…இப்ப இருக்கிற பிரச்சினைல கவர்னர் பிரச்சினையையும் எதுக்கு சுமக்கணும்னு நினைச்சிருப்பாங்க”

“சரியா சொன்னீங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...