No menu items!

வீரப்பன் வேட்டையில் நடந்தது என்ன? – வால்டர் தேவாரம் ஐபிஎஸ் நேரடி அனுபவம்

வீரப்பன் வேட்டையில் நடந்தது என்ன? – வால்டர் தேவாரம் ஐபிஎஸ் நேரடி அனுபவம்

நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘the hunt for Veerappan’ தொடரால் சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த செய்திகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில், வீரப்பன் தேடுதல் வேட்டையில் நடந்தது என்ன என்பது குறித்து, தமிழ்நாடு முன்னாள் காவல்துறை தலைவர் தேவாரம் ஐபிஎஸ், ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்த தகவல்கள் இதோ…

“வீரப்பன் சொந்த ஊர் மேட்டூர். மேட்டூரில் அணை கட்டும்போது 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. அணையின் வடக்குப் பக்க கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் கர்நாடகா பக்கம் சென்றுவிட்டார்கள். தெற்குப் பகுதியில் இருந்தவர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்டார்கள்.

அந்த கிராமங்களில் இருந்தவர்களுக்கு போதுமான இழப்பீடுகள் கொடுக்கப்படவில்லை. மேட்டூர் அணையால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளோ, நிலங்களை இழந்தவர்களுக்கு பதில் நிலங்களோ கொடுக்கப்படவில்லை. எனவே, அந்த மக்களிடம் அதிருப்தி இருந்தது. அவர்கள் மத்தியில் வீரப்பன் ஒரு தலைவன் மாதிரி உருவாகினான். காட்டுக்குள் சென்று சந்தன மரங்களை வெட்டி வந்து விற்பது, யானையைக் கொன்று அதன் தந்தங்களை விற்பது போன்றவற்றை செய்து வந்தான். இதனால் அவனைச் சுற்றி ஒரு கூட்டம் உருவானது.

வீரப்பன் தமிழன் தான் என்றாலும் பெரும்பாலும் கர்நாடகா காட்டுக்குள்தான் இருந்தான். அங்கே கொள்ளையடித்துவிட்டு கர்நாடகா போலீஸிடம் இருந்து தப்பிக்க தமிழ்நாட்டுக்குள் வந்துவிடுவான். தமிழ்நாடு போலீஸிடம் இருந்து தப்பிக்க கர்நாடகா எல்லைக்குள் சென்றுவிடுவான்.

அப்போது தமிழ்நாட்டு எல்லைக்குள் வீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் கோபால கிருஷ்ணன் என்ற எஸ்.பி. ஒருநாள் கோபால கிருஷ்ணனுக்கு சவால் விட்டு வீரப்பன் ஒரு போர்ட் வைத்தான். அதில், ‘கோபால கிருஷ்ணா உனக்கு தைரியம் இருந்தால் நீ கர்நாடகா எல்லைக்கு வா’ என்று எழுதியிருந்தான். சரியாக திட்டமிட்டிருந்தால் அன்றே வீரப்பனை பிடித்திருக்கலாம். ஆனால், கோபால கிருஷ்ணன் உணர்ச்சிவசப்பட்டு, சில போலீஸ்களுடன், வீரப்பன் சொன்ன இடத்துக்கே கிளம்பிவிட்டார். இதனால், வீரப்பன் வைத்திருந்த கன்னி வெடியில் சிக்கி, 22 போலீஸ்காரர்கள் இறந்துவிட்டார்கள். கோபால கிருஷ்ணனுக்கும் பலத்த கயம். அப்போது போலீஸ்காரர்கள் வண்டிகளில் இருந்த ஆயுதங்களை கைப்பற்ற வீரப்பன் முயற்சித்தான். அசோக் குமார் என்ற இன்ஸ்பெக்டர் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்ததால் அந்த முயற்சி தடுக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும் கர்நாடகா முதலமைச்சரும் சந்தித்து பேசினார்கள். தொடர்ந்து ஜெயலலிதா எனக்கு ஒரு குறிப்பு அனுப்பினார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மூன்று மாநில காவல்துறையையும் இணைத்து ஒரு சிறப்பு அதிரடி படை அமைக்கப்போகிறோம். நீங்கள் அதில் இருக்க முடியுமா என்று கேட்டிருந்தார். நான் அப்போது ஏடிஜிபியாக இருந்தேன். என் தலைமையில் அந்த சிறப்பு அதிரடிப் படை அமைந்தது.

கர்நாடகாவும் தமிழ்நாடும் சேர்ந்து 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அளவுடைய காட்டில் வீரப்பன் இருந்தான். இத்தனை பெரிய காட்டில் எங்கே வேண்டுமானாலும் அவன் இருப்பான். எப்படி கண்டுபிடிப்பது? ஆனால், இந்த தேடுதல் வேட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் வீரப்பனை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தோம். தினம் ஃபையரிங் இருக்கும். 200 பேர் வீரப்பனுடன் இருந்தார்கள். அவர்களை ஒரு வருடத்தில் 20ஆக குறைத்தோம். வீரப்பன் ஆங்காங்கே கேம்ப் அமைத்திருந்தான். அதையெல்லாம் அழித்தோம்.

வீரப்பன் தம்பி அர்ஜுனன், மனைவி முத்துலட்சுமி உட்பட வீரப்பனுக்கு நெருக்கமானவர்களை எங்கள் கஸ்டடியில் கொண்டு வந்தோம். 5 பேர் மட்டும் கொண்டதாக வீரப்பன் குழு சுருங்கிவிட்டது. இவ்வளவு சிறிய கும்பல் ஆனதும் அவ்வளவு பெரிய காட்டில் தேடிக் கண்டுபிடிப்பது கஷ்டமாகிவிட்டது. ஹெலிகாப்டரில் தேடினால்கூட கீழே மரத்தடியில் இருக்கும் ஆள் தெரியாது, அவ்வளவு திக் ஃபாரஸ்ட். ஆனாலும் வேட்டை தொடர்ந்தது. ஐந்து பேர் நான்கு பேர் ஆனது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில், கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திவிட்டான். ராஜ்குமாருக்கு எதாவது ஆனால் கர்நாடகாவில் இருக்கும் தமிழர்கள் நிலை மிகவும் சிக்கலாகிவிடும் நிலை. எனவே, சிறப்பு அதிரடிப் படை காட்டைவிட்டு வெளியே வந்தது.

மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது நான் ஓய்வு பெற்றிருந்தேன். எனவே, என் ஆலோசனையின் படி, விஜயகுமார் தலைமையில் மீண்டும் வீரப்பன் தேடுதல் வேட்டையை தொடங்க திட்டமிட்டார். விஜயகுமார் மிக தைரியமான ஆள். அப்போது டில்லியில் இருந்தார். அங்கிருந்து இதற்காக அழைத்து வந்தார்கள். ஆனால், அவராலும் அந்த ஆபரேசனை முடிக்க முடியவில்லை. சென்னை கமிஷனராக வந்துவிட்டார். மீண்டும் சிறப்பு படைக்கு வந்தபோது விஜயகுமார் வியூகங்களை மாற்றினார்.

வீரப்பனை காட்டுக்குள் போய் தேடி கண்டுபிடிப்பது கஷ்டம் என்பதால் அவனை வெளியே வரவைப்பதற்கான முயற்சிகளை செய்தார். வீரப்பனுக்கு கண் பார்வை பிரச்சினை இருந்தது. ஹாஸ்பிடல் போய் அதை சரி செய்துவிட்டு, ராமேஸ்வரம் சென்று, அங்கிருந்து இலங்கை சென்றுவிட்டால் விடுதலைப்புலிகள் பிரபாகரன் சேர்த்துக்கொள்வார் என்று வீரப்பனுக்கு நம்பிக்கை கொடுக்கப்பட்டது. இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு கான்ஸ்டபில்கள் வீரப்பனை நெருங்கி இலங்கைத் தமிழர்கள் மாதிரியே நடித்து இதனை செய்தார்கள்.

காட்டைவிட்டு வெளியே வந்த வீரப்பன் வண்டியை ஓட்டி வந்ததும் ஒரு போலீஸ்காரர்தான். ஒரு பாயிண்டுக்கு வந்ததும் அவர் வண்டியை விட்டுவிட்டு ஓடிவிட வேண்டும். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சிக்னல் கொடுத்ததும் மறைந்திருக்கும் போலீஸ்காரர்கள் சுட வேண்டும் என்பது திட்டம்.

திட்டப்படி எல்லாம் கச்சிதமாக முடிந்தது.

அன்று இரவே விஜயகுமார் எனக்கு போன் செய்து அந்த செய்தியை தெரிவித்தார். நான் ஜெயலலிதாவுக்கு போன் செய்து சொன்னேன். மேலும், நாளை இந்த செய்தியை அறிவிக்கும்போது சிறப்பு அதிரடிப் படையில் கடைசி வரை இருந்த போலீஸ்காரர்கள் 190 பேருக்கும் ஒரு புரமோஷனும் ஒரு லட்சம் ரூபாயும் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

அடுத்த நாள் ஜெயலலிதா அறிவிக்கும் போது ஒரு புரமோஷன், 3 லட்சம் ரூபாய், ஒரு வீட்டு மனை என்று அறிவித்தார்.

அதோடு வீரப்பன் கதை முடிந்தது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...