டாக்டர் ஜெய. ராஜமூர்த்தி… கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகம் கொண்டவர். மருத்துவம், இலக்கியம் தொடர்பாக பல நூல்களை எழுதியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது, இவர் முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினின் ஒரே தம்பி. ஆனால், இந்த தன் அரசியல் பின்புலத்தை எங்கும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அரசுப் பணி, ஆன்மிக சொற்பொழிவுகள் என இருக்கும் ஆச்சர்யக்காரர். டாக்டர் ஜெய. ராஜமூர்த்தி, ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பிரேத்யேக பேட்டியில் அக்கா துர்கா ஸ்டாலின், மச்சான் மு.க. ஸ்டாலின், மருமகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பம் குறித்து மனம் திறந்து பேசினார்.
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
துர்கா ஸ்டாலின் உட்பட உங்களுக்கு மூன்று சகோதரிகள், நீங்கள் ஒரே சகோதரர். சகோதரிகள் மூவரில் உங்கள் மேல் அதிக பாசம் கொண்டவர் யார்?
மூத்த அக்கா துர்காதேவி. கல்யாணத்துக்கு பின்னர் கலைஞர் அக்காவுக்கு சாந்தா என்று பெயர் மாற்றினார். துர்கா தேவி மிக ஆக்ரோஷமான தெய்வம். ஆக்ரோஷம் வேண்டாம் சாந்தமாக இருக்கட்டும் என சாந்தா என கலைஞர் அழைத்தார். இதுபோல்தான் தயாள குணம் கொண்டவராக இருக்கணும் என்று அத்தை பெயரை தயாளு அம்மாள் என மாற்றினார்.
என் இரண்டாவது அக்கா சாருமதி. நான் ஆறாவது படிக்கும்போதே மூத்த அக்கா துர்காவுக்கு திருமணம் நடந்து வீட்டைவிட்டு போய்விட்டார். எனவே, இரண்டாவது அக்கா சாருமதியுடன்தான் அதிக நாட்கள் இருந்திருக்கிறேன். இதனால், மூத்த அக்காவைவிட இவர்களுக்கு என் மீது பாசம் அதிகம். சாருமதி அக்கா சமீபத்தில் காலமாகிவிட்டார்.
எனக்குப் பிறகு தங்கை, ஜெயந்தி. இவள் நான் வளர்த்த குழந்தை.
முதல்வர் மு.க. ஸ்டாலின் உங்கள் குடும்பத்தின் மூத்த மாப்பிள்ளை, உங்களுக்கு மூத்த மச்சான். நீங்கள் ஆறாவது படிக்கும்போதே உங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டார். இதனால், ஒரு வழிகாட்டியாக நிச்சயம் அவரது பாதிப்புகள் நிறைய இருக்கும். அவற்றை சொல்ல முடியுமா?
எனக்கும் மச்சானுக்கும் வயது வித்தியாசம் மிக அதிகம். கிட்டதட்ட பன்னிரெண்டு வயது. இதனால் அக்கா வீட்டுக்காரர் என்பதைவிட, அப்பாவுடன் பழகுவது போல் ஒரு மரியாதையுடதான் பழகுவேன். நான் அவரிடம் பார்த்து பிரமித்தது அவரது கடின உழைப்புதான். இன்னொன்று தனக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருந்த பொறுமை. கலைஞர் போல் அவருக்கு எழுத வராது, பேச வராது; ஆனால், கலைஞர் போல் உழைத்தார். எத்தனையோ சோதனைகளை சந்தித்துள்ளார், அத்தனையையும் தாங்கிக்கொண்டு அடுத்தடுத்த நிலைகளுக்கு தீர்க்கமாக உயர்ந்தார். வியூகம் வகுத்தார். காலம் கனிந்தது, 2021இல் முதலமைச்சரானார்.
தேர்தலுக்கு முன்பு, “மு.க. ஸ்டாலினுக்கு ஜாதகத்தில் கட்டம் சரியில்லை. அவர் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பில்லை” என்று பிரச்சாரம் செய்தார்கள். சமுக வலைதளங்களில் அதை வைரலாக்கினார்கள். ஹெச். ராஜாவும், “நானும் ஸ்டாலினுக்கு ஜாதகத்தை ஜோசியர்கிட்ட கொடுத்துப் பார்த்தேன், அவருக்கு சி.எம் ஆகுற வாய்ப்பே இல்லனு சொல்லிட்டாரு” என்றார். அக்கா கல்யாணத்தின் போது நிச்சயம் நீங்கள் முதலமைச்சர் ஜாதகத்தை பார்த்திருப்பீர்கள். அப்போது என்ன சொன்னார்கள்?
அக்கா கல்யாணத்தின் போது அப்பா ஜாதகம் பார்த்துவிட்டு வந்து வீட்டில் சொன்னது இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கு. அன்று அப்பா சொன்னார்: “ராஜயோகம் உள்ள ஜாதகம்டா இது. நாட்டை ஆளும் தகுதி இந்த ஜாதகத்துக்கு இருக்கு.” ரொம்ப சந்தோஷத்துடன்தான் அக்காவை அப்பா கல்யாணம் கட்டிக் கொடுத்தார். அடுத்த சில வருடங்களில் மிசா வந்துவிட்டது. மச்சானை கைது செய்துவிட்டார்கள். ‘பெரிய குடும்பம்னு பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்தான். இப்பப் பாரு மாப்பிள்ளை ஜெயில்ல இருக்கான்’ என்று அப்போ ஊரில் சிலர் பேசினார்கள். ஆனால், அப்போதும் அப்பா மனம் தளரவில்லை. அப்பா அன்று சொன்னது இன்று நடந்துவிட்டது. மச்சான் முதலமைச்சராகிவிட்டார். இருந்து பார்க்கத்தான் அப்பாவுக்கு கொடுத்து வைக்கவில்லை.
மூத்த மாப்பிள்ளை என்பது போல் தாய் மாமன் உறவும் தமிழ் பாரம்பரியத்தில் மிக முக்கியமானது. ஒரு தாய் மாமனாக நீங்கள் தூக்கி வளர்த்த பிள்ளை உதயநிதி. அவரது இன்றைய வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
நான் எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் காலங்களில் உதயநிதி கைக் குழந்தை. எங்கள் வீட்டுக்கு அக்கா வரும்போதெல்லாம் உதயநிதியை தூக்கிக்கொண்டு திரிவேன். நான் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்க வரும்போது உதயநிதி டான் பாஸ்கோ பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தார். பலநாள் நான்தான் பள்ளியில் கொண்டுபோய் விடுவேன். சினிமா பார்க்க தியேட்டர்களுக்கு அழைத்துக்கொண்டு போவேன். அவர் திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் அளவு இன்று வளர்ந்துள்ளதைப் பார்க்கும்போது மிக பெருமையாக இருக்கிறது.
முற்றும்