No menu items!

அஜித் அகர்கர் – காத்திருக்கும் சவால்கள்!

அஜித் அகர்கர் – காத்திருக்கும் சவால்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அஜித் அகர்கர். இந்தியாவைப் பொறுத்தவரை மிக சிக்கலான பதவிகளில் இதுவும் ஒன்று. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி ஜெயித்துக்கொண்டே இருந்தால் அதற்கான பாராட்டை ரசிகர்களிடம் இருந்து வீர்ர்கள் பெறுவார்கள். ஆனால் சில போட்டிகளில் அணி தோற்றாலும், ரசிகர்கள் திட்டும் முதல் நபர் தேர்வுக்குழு தலைவராகத்தான் இருப்பார். ‘என்னய்யா இந்த ஆளு மட்டமான டீமை தேர்ந்தெடுத்து இருக்கான்!’ என்று டீக்கடை, சலூன் முதற்கொண்டு பப்கள் வரை கடுமையான விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இப்படி சிக்கலான பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அஜித் அகர்கர்.

பதவி கிடைத்த்து எப்படி?

அஜித் அகர்கரைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன் அவர் இந்த பதவிக்கு எப்படி வந்தார் என்பதைப் பார்ப்போம். அகர்கருக்கு முன் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராக இருந்தவர் சேதன் சர்மா. சில மாதங்களுக்கு முன் இந்திய கிரிக்கெட்டின் சமீபத்திய நிலை பற்றி, இவர் யதேச்சையாக பேசிக்கொண்டிருந்ததை ஒரு செய்தி தொலைக்காட்சி ரகசியமாக படம்பிடித்து வெளியிட்டது.

பூரண உடல் தகுதி இல்லாத சில வீர்ர்கள் ஊக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி போட்டிகளில் ஆடுகிறார்கள். ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் நல்ல உறவு இல்லை என்றெல்லாம் இந்த வீடியோவில் சேதன் சர்மா உளறிக் கொட்ட, அது பெரிய சர்ச்சையானது. சேதன் சர்மா பதவி விலகினார். அதன்பிறகு பல மாத காலம் தலைவர் இல்லாமல் தேர்வுக்குழு செயல்பட்டு வந்த்து. இப்போது அந்த பதவிக்குத்தான் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த அஜித் அகர்கர்:

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து கபில்தேவ், மனோஜ் பிரபாகர் போன்ற மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்கள் ஓய்வுபெற்ற பிறகு, நீண்ட காலத்துக்கு ஒரு ஆல்ரவுண்டர் இல்லாத நிலை இருந்த்து. இந்த சூழலில்தான் ‘சக்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை’ என்பதைப்போல் ஆல்ரவுண்டர் இமேஜுடன் அணியில் சேர்ந்தார் அகர்கர். பந்துவீச்சில் அசத்தினாலும் கபில்தேவைப் போல் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. 1998-ம் ஆண்டுமுதல் 2007-ம் ஆண்டுவரை அணியில் இருந்தார் அகர்கர். இந்த காலகட்டத்தில் 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அகர்கர், 58 விக்கெட்களை வீழ்த்தினார். 571 ரன்களை எடுத்தார். டெஸ்ட் போட்டிகளில் சரியாக சாதிக்காவிட்டாலும், ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். 191 போட்டிகளில் ஆடிய அவர் மொத்தம் 288 விக்கெட்களை கொய்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவர் 3-து இடத்தில் இருக்கிறார். அத்துடன் ஒருநாள் போட்டிகளில் 1,269 ரன்களையும் அவர் எடுத்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக தோனி வந்த பிறகு, அகர்கருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதனால் 2007-ம் ஆண்டுக்கு பிறகு, அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதன்பிறகு வர்ணனையாளராகவும், கடந்த 2 ஐபிஎல் தொடர்களில் டெல்லி அணியின் துணை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இந்த சூழலில்தான் இப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜித் அகர்கர் எதிர்கொள்ளும் சவால்கள்:

இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இப்போது ஒரு சவாலான சூழலை எதிர்கொள்கிறது. இந்திய அணி ஐசிசி தொடர்களில் கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஐபிஎல்லில் துணையால் பல இளம் வீர்ர்கள் அணியின் அறைக்கதவை முட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் ரோஹித் சர்மா, கோலி போன்ற வீர்ர்கள் சில போட்டிகளில் அடித்து ஆடினாலும், முக்கியமான போட்டிகளில் சொதப்பி வருகிறார்கள். குறிப்பாக ஐசிசியின் நாக் அவுட் போட்டிகளில் இவர்கள் இருவரது பேட்டிங்கும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. தடுமாறிக்கொண்டு இருக்கும் மூத்த வீர்ர்களை ஓரம்கட்டி துடிப்பான இளம் வீர்ர்களுக்கு வாய்ப்பளிக்கும் துணிச்சலான செயலை அவர் செய்யவேண்டி உள்ளது.

2007-ல் நடந்த ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையில் இந்தியா தோற்றபோது, தேர்வுக்குழு தலைவராக இருந்த திலிப் வெங்சர்க்கர் மூத்த வீர்ர்களை துணிச்சலாக ஓரம்கட்டினார். கங்குலி, திராவிட், சச்சின், கும்ப்ளே போன்ற மூத்த வீர்ர்கள் இல்லாத டி20 அணியை தோனி தலைமையில் தேர்ந்தெடுத்தார். அதற்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சீனியர்களை ஓரங்கட்டி இளம் வீர்ர்களிடம் அணியை ஒப்படைத்தார். இதே பாணியில் அகர்கர் செயல்பட வேண்டும் என்பது ரசிகர்களின் கனவு.

முதல் கட்டமாக டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் ஓய்வளித்து ஹர்டிக் பாண்டியா தலைமையில் முற்றிலும் புதிய இளம் அணியை அவர் தேர்ந்தெடுக்க வேண்டும். சீனியர் வீர்ர்களின் மனம் கோணாமல் அவர் அதை எப்படிச் செய்வார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

சமீப காலமாக ஐபிஎல் போட்டிகளை மட்டுமே முக்கிய போட்டியாக நினைத்து, அதில் சிறப்பாக ஆடுபவர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் கொடுக்கப்படுகிறது. ரஞ்சிப் போட்டிகளில் சிறப்பாக ஆடும் சர்பிராஸ் கான் போன்ற வீர்ர்களுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைப்பதில்லை. இந்த நிலையை அகர்கர் மாற்றவேண்டும்.

முன்பெல்லாம் நாட்டின் மூலை முடுக்குகளில் நடக்கும் போட்டிக்கெல்லாம் தேர்வுக்குழுவினர் செல்வார்கள். இளம் வீர்ர்களுடன் பேசுவார்கள். அவர்களை பார்த்தால் இளம் வீர்ர்களும் உற்சாகமடைந்து முழு திறமையைக் காட்டி ஆடுவார்கள். ஆனால் இப்போது தேர்வுக்குழ்வினர் ஒரு அறைக்குள் இருந்து சில போட்டிகளை மட்டும் பார்த்து அணியை தேர்வு செய்கிறார்கள் என்ற குறை இளம் வீர்ர்களுக்கு உள்ளது. இந்த குறையைப் போக்க, தேர்வுக் குழுவினரை பழையபடி போட்டி ந்டக்கும் ஊர்களுக்கெல்லாம் அனுப்ப வேண்டும்.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக இன்னும் சில மாதங்களில் உலக்க் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இந்த தொடருக்குள் வலுவான அணியை தேர்ந்தெடுத்து உருவாக்க வேண்டும்.

ஒரு வீர்ர் சரியாக செயல்படவில்லை என்றால், அது அவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் ஒரு தேர்வாளர் சரியாக செயல்படவில்லை என்றால் அது மொத்த அணியையே பாதிக்கும். இதைப் புரிந்துகொண்டு அகர்கர் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புவோம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...