மன அமைதிக்காக பலரும் பலவிதமான செயல்களில் ஈடுபடுவார்கள். உறங்குவது, டீ போடுவது, டிராவல் செய்வது, தியானம், யோகா, வாசிப்பு, மியூஸிக் கேட்பது, இசைக் கருவிகளை வாசிப்பது என இந்த முறைகளை பின்பற்றி மன அமைதியை நாடுவார்கள்.
இங்கிலாந்தில் உள்ள 2,000 மக்களிடம் ஈபே நிறுவனம் மன அமைதி குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பு சில வினோத செய்திகளை சொல்லியிருக்கிறது.
வீட்டு வேலைகள் செய்வது மன அமைதியை ஏற்படுத்துகிறது என்று 49 சதவித மக்கள் சொல்லியிருக்கிறார்கள். முக்கியமாக டீ போடுவது.
பலருக்கு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது மன அமைதியை தருகிறது என்று கூறியிருக்கிறார்கள்.
நம்மில பலருக்கு துணி துவைப்பது, துவைத்த துணியை காயப் போடுவது எல்லாம் அலுப்புத் தரும் வேலைகள். ஆனால் இங்கிலாந்து மக்களுக்கு மன அமைதி தரும் வேலைகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 28 சதவித மக்கள் துணி காயப்போடுவது மன அமைதிக்கு ஒரு வழியாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
13 சதவித மக்கள் துணி துவைத்துக் கொண்டிருக்கும் வாஷிங் மிஷினை பார்ப்பது கூட மன அமைதியை தருகிறது என்று சொல்லியிருப்பது ஆச்சரியத்தை தருகிறது.
31 சதவித மக்கள் வீட்டுச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, தோட்ட வேலை செய்வது போன்ற பணிகளை செய்யும் போது மன அமைதி வருகிறது என்று கூறியிருக்கிறார்கள். 26 சதவித மக்கள் புல்வெளி வெட்டுவது மன அமைதியை தருகிறது என்கின்றனர்.
இன்னும் சில மக்கள், துணிகளுக்கு இஸ்திரி போடுவது, காய்கறிகளை நறுக்குவது, உருளைக்கிழங்கை மசிப்பது போன்ற செயல்களை செய்யும்போது மன அமைதி கொடுக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
”இந்த கணக்கெடுப்பு கூறுவது சுவாரஸ்யமானதாக இருக்கிறது. அன்றாடம் செய்யும் செயல்களிலே மக்கள் அமைதியை தேடிப் கொள்வது நல்ல விஷயம். பெரிதாக சிந்திக்காமல் செய்யும் செயல்களே மக்களுக்கு மன அமைதியை தருகிறது என்பது புரிகிறது” என்று சொல்கிறார் பிரிட்டிஷ் உளவியலாளர் டாக்டர் லிசா டோர்ன்.