No menu items!

இந்தியா Vs பாகிஸ்தான் – இந்தியாவின் சாதனை தொடருமா? – உலகக் கோப்பை 2023

இந்தியா Vs பாகிஸ்தான் – இந்தியாவின் சாதனை தொடருமா? – உலகக் கோப்பை 2023

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்துக்கு இன்னும் சுமார் ஒரு மாத காலம் இருக்கிறது. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை அக்டோபர் 14-ம் தேதிதான் இறுதிப் போட்டி.

உலகக் கோப்பையை வெல்கிறோமோ இல்லையோ, அக்டோபர் 14-ம் தேதி நடக்கும் லீக் ஆட்டத்தில் எப்படியாவது பாகிஸ்தானை இந்தியா வென்றுவிட வேண்டும் என்பதுதான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. மறுபக்கத்தில் பாகிஸ்தான் ரசிகர்களின் மனநிலையும் அதேதான். உலகக் கோப்பையில் அரை இறுதிச் சுற்றுக்குள் பாகிஸ்தான் நுழையாவிட்டால்கூட பரவாயில்லை. இந்தியாவை இந்திய மண்ணில் வென்றாலே போதும் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்படி போர்க்களத்துக்கு அடுத்ததாக இந்தியா – பாகிஸ்தான் மோதல் தீவிரமாக இருப்பது கிரிக்கெட் களத்தில்தான்.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரைப் பொறுத்தவரை இந்தியாவும் பாகிஸ்தானும் தலா 2 ஆட்டங்களில் வெற்றிபெற்ற நிலையில், 3-வது வெற்றியை எதிர்நோக்கி அக்டோபர் 14-ம் தேதி களத்தில் சந்திக்கிறார்கள்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்த தொடரில் முதல் 2 ஆட்டங்களில் வென்றாலும், அந்த அணி வென்ற 2 போட்டிகளுமே மிகச் சாதாரண அணிகளுக்கு எதிரான போட்டிகள். முதல் போட்டியில் நெதர்லாந்தை வென்ற பாகிஸ்தான் அணி, அடுத்த ஆட்டத்தில் இலங்கையை வென்றுள்ளது. இந்த சூழலில் நாளை முதல் முறையாக வலிமையான இந்திய அணியைச் சந்திக்கிறது.

முதல் 2 போட்டிகளில் வென்றாலும் பாகிஸ்தான் அணிக்கு 2 கவலைகள் உள்ளன. முதல் கவலை அணியின் கேப்டனும், உலகின் நம்பர் 1 வீரருமான பாபர் ஆசம் அவுட் ஆஃப் பார்மில் இருப்பது. வலிமை குறைந்த நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராகவே அவரால் பெரிய அளவில் ரன்களைக் குவிக்க முடியவில்லை. அதனால் பேட்டிங்கில் அவரையே பெருமளவில் நம்பியிருக்கும் பாகிஸ்தான் அணி, கொஞ்சம் கவலையில் இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலாவது அவர் பழைய ஃபார்முக்கு திரும்புவாரா என்று டென்ஷனுடன் காத்திருக்கிறது.

இரண்டாவது கவலை பந்துவீச்சு. பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலம் அதன் வேகப்பந்து வீச்சு. ஆனால் இந்த தொடரில் அது பெரிதாக எடுபடவில்லை. நெதர்லாந்து பேட்ஸ்மேன்களே அவர்களின் பந்துவீச்சைப் பார்த்து பயப்படவில்லை. அடுத்த ஆட்டத்தில் இலங்கை அணியின் பேட்ஸ்மேன்களும் அவர்களை சாதாரணமாக டீல் செய்தனர். சாதாரண அணி பேட்ஸ்மேன்களையே எளிதில் அவுட் ஆக்க முடியாத நிலையில் இந்தியா போன்ற பேட்டிங் வரிசையில் சிறந்த அணிகளை எப்படி சமாளிப்பது என்று குழம்பிப் போய் கிடக்கிறது பாகிஸ்தானின் டீம் மேனேஜ்மெண்ட்.

அதேநேரத்தில் பாகிஸ்தான் அணிக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களும் உள்ளன. முக்கியமானது அவர்களின் விக்கெட் கீப்பரான முகமது ரிஸ்வானின் பேட்டிங். முதல் 2 போட்டிகளில் மிகச்சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான், இந்த உலகக் கோப்பையின் டாப் 5 பேட்ஸ்மேன்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான அப்துல்லா ஷபிக்கும், கடந்த போட்டியில் சதம் அடித்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில், அவர்களுடன் இணைந்து பாபர் ஆசமும் கலக்கினால் வெற்றி நிச்சயம் என்று நம்புகிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் பேட்டிங்கில் ரோஹித் – விராட் கோலி ஜோடியையே பெரிதும் நம்பியிருக்கிறது. ஓய்வுபெறும் வயதை நெருங்குவதால், பாகிஸ்தானுக்கு எதிராக ஐசிசி தொடர் ஒன்றில் அவர்கள் ஆடும் கடைசி போட்டியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது. அதனால் இப்போட்டியில் வெல்ல அவர்கள் தீவிரமாக இருப்பார்கள். குறிப்பாக கடந்த போட்டியில் பல சாதனைகளைப் படைத்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, அவை தந்த நம்பிக்கையால், இந்த போட்டியில் மேலும் சீறிப் பாயலாம். ரோஹித் – விராட் கூட்டணிக்கு தோள் கொடுக்க கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹர்த்திக் பாண்டியா போன்ற வீர்ர்களும் இருக்கிறார்கள். டெங்குவால் கடந்த 2 போட்டிகளில் ஆடாத சுப்மான் கில்லும் இந்த போட்டியில் ஆடினால் அந்த பலம் அதிகரிக்கலாம்.

பேட்டிங்கில் எல்லாம் சரியாக இருந்தாலும், பந்துவீச்சு கொஞ்சம் பலவீனமாக இருப்பது இந்தியாவை பாதிக்கிறது. பும்ரா, ஜடேஜாவைத் தவிர மற்றவர்கள் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முகமது சிராஜ், குல்தீப் யாதவ் போன்றவர்கள் பலம்பெற்றால்தான் நம்மால் பாகிஸ்தானை சமாளிக்க முடியும்.

இதுவரை உலகக் கோப்பை தொடர்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் 7 முறை சந்தித்துள்ளன. இதில் ஒரு முறைகூட பாகிஸ்தானால் இந்தியாவை வெல்ல முடியவில்லை. இந்த சாதனை தொடருமா அல்லது பாகிஸ்தான் புதிய சரித்திரம் படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...