No menu items!

பிரியங்கா காந்தி தமிழ்நாட்டில் போட்டி? – மிஸ் ரகசியா

பிரியங்கா காந்தி தமிழ்நாட்டில் போட்டி? – மிஸ் ரகசியா

“அடுத்த டார்கெட் ஏ.வ.வேலுவாம்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“ஆமாம், அதுக்கடுத்து கே.என்.நேரு இப்படி ஒரு வரிசை இருக்காமே” என்றோம்.

“ஆமாம் அமலாக்கத் துறை ஒரு பெரிய லிஸ்ட் வச்சிருக்கு. நாடாளுமன்றத் தேர்தல் வரதுக்குள்ள எல்லோர் வீட்டையும் சுத்திப் பாத்துரணும்னு முடிவுப் பண்ணியிருக்காங்க?”

“ஜெகத்ரட்சகன் மேட்டர்ல என்னாச்சு? சோதனை ரொம்ப நாள் போச்சுப் போல”

“ஆமா. ஆனா அவர் கொஞ்சம் கூட பயப்படலனு சொல்றாங்க. சோதனைகள் முடிஞ்ச பிறகு முதல்வரை சந்திச்ச ஜெகத்ரட்சகன், ‘என் சம்பத்தப்பட்ட இடங்கள்ல நடந்த வருமான வரி சோதனை விஷயத்தை என் வக்கீல்களும், ஆடிட்டர்களும் பார்த்துப்பாங்க. ஏற்கனவே ஆறு வருஷங்களுக்கு முன்ன நடத்தின சோதனையிலேயே அவங்களால ஒண்ணும் செய்ய முடியல. இப்ப மட்டும் அவங்க என்ன செஞ்சுடுவாங்க. என்கிட்ட விசாரணை செஞ்ச அதிகாரிகள் திரும்பத் திரும்ப கேட்ட ஒரே கேள்வி நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக எவ்வளவு தொகை செலவு செய்யப் போகுதுங்கிறதுதான். அதனால தொடர்ந்து கட்சிக்காரங்க வீட்ல ரெய்ட் நடக்க வாய்ப்பிருக்கு’ன்னு எச்சரிக்கை செய்தாராம்”

“முதல்வர் ரியாக்‌ஷன் என்ன?”

“சிரித்தாராம். ஆனாலும் கட்சிக்காரங்களை கவனமா இருக்கச் சொல்லுங்கனு சொன்னார்னு அறிவாலயத்துல சொல்றாங்க”

”எ.வ.வேலு வீட்டுல ரெய்ட் பண்ணப் போறாங்கனு நீயே சொல்ற. அப்ப அவருக்கு அது தெரியாதா? உஷாராய்டுவார்ல”

“அவர் மட்டுமில்லை…திமுககாரங்க எல்லோருமே உஷாராதான் இருக்காங்க. தேர்தல் எப்ப வரும்னு இருக்கு அவங்களுக்கு. தேர்தல் வந்திருச்சுனா சோதனைகளும் நின்னுடும்னு நம்புறாங்க”

“முதல்வர் இப்பல்லாம் உதயநிதியை அடிக்கடி பாராட்டிப் பேசறாரே?”

“ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பெற்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில், ‘அமைச்சரும் ஸ்டார்… அவர் துறையும் ஸ்டார்’னு பாராட்டி பேசினதைத்தானே சொல்றீங்க. நாடாளுமன்ற தேர்தல்ல வாக்குகளை திரட்டறதுல ஒரு பெரும் பொறுப்பை உதயநிதிகிட்ட கொடுக்கப்போறார் முதல்வர். அதுக்கு முன்ன அவரை உற்சாகப்படுத்ததான் இந்த பாராட்டுகள். உதயநிதியை மட்டுமில்லை… இன்னும் ஒரு அமைச்சரையும் முதல்வர் பாராட்டிட்டு வர்றார்.”

“யார் அந்த அதிர்ஷ்டசாலி அமைச்சர்?”

“சட்ட அமைச்சர் ரகுபதிதான். காவிரி விவகாரத்தில் எடப்பாடிக்கு சட்டசபையில் அவர் பதில் அளித்த விதம் முதல்வருக்கு ரொம்ப பிடிச்சுப் போயிருக்கு. அதுக்காக அவரை பாராட்டி இருக்காரு. இதேபோல் ‘முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உங்கள் விளக்கம் ஆதாரபூர்வமாக இருந்தது’ன்னும் பாராட்டியிருக்கிறார். ஆளுநருக்கு தமிழக அரசு எழுதும் கடிதங்களை தயார் செய்யறது பெரும்பாலும் ரகுபதிதானம். சட்ட நுணுக்கங்களை குறிப்பிட்டு ரகுபதியின் கடிதம் இருப்பதால் ஆளுநர் பதில் அளிக்க திணறிப் போறார்னு ஐஏஎஸ் அதிகாரிங்க சொல்றாங்க. இதுவும் முதல்வருக்கு ரொம்ப பிடிச்சு போயிருக்கு.”

”தங்கை கனிமொழியையும் ரொம்ப பிடிச்சிருக்குப் போல மகளிர் அணி மாநாடு நடத்துறதுக்கு அனுமதி கொடுத்திருக்கார். சோனியா, பிரியங்காலாம் வர்றாங்களே”

“ஆமாம். டெல்லி அரசியல்ல தன்னை ஒதுக்கறாங்கன்ற வருத்தம் கனிமொழிக்கு இருந்தது. டி.ஆர்.பாலுதான் எதிர்க்கட்சிகள் கூட்டணி கூட்டத்துக்குலாம் போகிறார். நம்மை சேர்த்துக்க மாட்டேங்குறான்றது கனிமொழிக்கு வருத்தம். அது மட்டுமில்லாம டிசம்பர் மாசம் சேலத்துல இளைஞர் அணி மாநாடு பிரமாண்டமா நடக்கப் போகுது. அதுக்கு முன்னால மகளிர் அணி மாநாட்டை பெருசா பண்ணிட்டா கனிமொழிக்கு வருத்தம் குறையும்னு திமுக தலைவர் நினைக்கிறார் போல. மகளிர் அணி மாநாட்டுக்கு உற்சாகமாய் சம்மதம் கொடுத்திருக்கிறார்”

“கனிமொழிக்கும் சந்தோஷமாய் இருக்குமே”

“ஆமாம். ரொம்பவே சந்தோஷம். அதுவும் சோனியா காந்தி, பிரியங்கா காந்தியை வரவச்சதில அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். சமீபமா சோனியா காந்தி எந்த விழாவிலயும் கலந்துக்காம இருக்காங்க. டெல்லியைவிட்டு வெளில போகல. ஆனா கனிமொழி அழைப்பை அவங்களால தட்ட முடியல. நாடாளுமன்றத் தேர்தலில் திமுகதான் உறுதியா கூட நிக்கும்னு சோனியா நினைக்கிறாங்க”

“சொக்கத் தங்கம் சோனியானு கலைஞரே பாரட்டியிருக்கிறாரே. அவர் பொண்ணு கூப்ட்டு வராம இருப்பாங்களா?”

“இன்னொரு விஷயமும் காங்கிரஸ் வட்டாரங்கள்ல பேசிக்கிறாங்க. ராகுல் காந்தி தென் மாநிலங்கள்ல போட்டி போடலனா பிரியங்கா காந்தியை தென் மாநிலங்கள்ல போட்டி போட வைக்கலாம்னு காங்கிரஸ் மேலிடம் நினைக்குதான். பிரியங்காவோட பாட்டி இந்திரா காந்தி ஒரு முறை கர்நாடகாவுல சிக்மகளூர்ல போட்டி போட்டாங்க. அம்மா சோனியா காந்தி கர்நாடக பெல்லாரில போட்டி போட்டு ஜெயிச்சிருக்காங்க. அதனால் பிரியங்காவும் கர்நாடகத்துல போட்டி போடலாம். இல்லாட்டி தமிழ்நாட்டுல போட்டி போடலாம். சோனியாவோட பிரியங்காவும் தமிழ்நாட்டுக்கு வர்றதுக்கு இதுவும் காரணமா இருக்கலாம்னு பேச்சு இருக்கு”

“தமிழ்நாட்டுல பிரியங்கா போட்டியிட்டா எங்க போட்டியிடுவாங்க”

“கன்னியாகுமரி இல்லாட்டி திருச்சினு பேச்சு இருக்கு”

”வெரி இண்ட்ரஸ்டிங். சரி,பாஜக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கே. விசேஷம் உண்டா?”

“பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் கூட்டம் நடந்துச்சு. அண்ணாமலை, கேசவ விநாயகம், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன்னு ஏழெட்டு முக்கிய தலைவர்கள் மட்டும்தான் கலந்துக்கிட்டாங்க. “பீகாரில் நமது அரசியல் எதிரி நிதீஷ் குமார். உத்திரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி. டெல்லியில் கெஜ்ரிவால். தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ். அதேபோல் தமிழ்நாட்டில் நமக்கு எதிரி திமுக. ஒட்டுமொத்த இந்தியாவில் நமக்கு எதிரி காங்கிரஸ் கட்சி. இதுதான் நமது நிலைப்பாடு. இதைத் தாண்டி தேவையில்லாமல் மற்றவற்றை பற்றி பேசி, யோசித்து நேரத்தை வீணடிக்காதீர்கள். தேர்தல் வேலையை மட்டும் பாருங்கள். மற்ற விஷயங்களை தலைமை பார்த்துக் கொள்ளும்”ன்னு சொல்லியிருக்கார் சந்தோஷ்.”

“அதாவது அதிமுக பத்தி எதுவும் பேச வேண்டாம்னு சொல்லியிருக்கிறார் அதானே”

”அதே அதே…இதுல தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி சொல்லும்போது அண்ணாமலையை நேரா பார்த்து கொஞ்சம் கண்டிப்புடன் சொன்னாராம்”

“ நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழ்நாட்டுல 9 சீட்களை டார்கெட்டா வச்சிருக்காங்கனு செய்தி வந்துச்சே?”

“ஆமாம். அந்த 9 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமிச்சிருக்காங்க. பூத் கமிட்டி நியமனம், அந்தத் தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்சனைகள் என்ன? திமுக, அதிமுக செல்வாக்கு என்ன? என்பது போன்ற விவரங்களை தயார்படுத்திக்கிட்டு இருக்காங்க”

“ ஐந்து மாநிலத் தேர்தல் பத்தி ஏதாவது நியூஸ் வச்சிருக்கியா?”

“தேர்தல் நடக்கப்போற 5 மாநிலங்கள்ல மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானால ஆட்சிய பிடிச்சுடலாம்னு காங்கிரஸ் நம்புது. ராஜஸ்தான்ல கெலாட் – ச்ச்சின் பைலட் மோதலால ஜெயிக்கறது கஷ்டம்னு அந்த கட்சியே முடிவுக்கு வந்திருக்கு. இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமா வந்தா, அதை வச்சு இந்தியா கூட்டணியில தங்களோட குரலை உயர்த்த காங்கிரஸ் முடிவு செஞ்சிருக்காம்.”

”காஷ்மீர்ல லடாக்ல நடந்த உள்ளாட்சித் தேர்தல்ல பாஜக தோத்துருக்கே. 26 சீட்ல 24 சீட்டை காங்கிரஸ் கூட்டணி ஜெயிச்சிருக்கே. வடக்குல காங்கிரஸ் பக்கம் காத்து வீசுதா?”

“எவ்வளவு காத்து வீசுனாலும் காங்கிரஸ்காரங்க சுறுசுறுப்பா பிடிக்கணும்ல. ஏசி காத்துல உக்காந்திருந்தா எப்படி பிடிக்க முடியும்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...