No menu items!

தாங்க முடியாத உடல் வலி : நடிகை நந்திதாவுக்கு என்ன பிரச்சினை?

தாங்க முடியாத உடல் வலி : நடிகை நந்திதாவுக்கு என்ன பிரச்சினை?

பா. ரஞ்சித்தின்‘அட்டகத்தி’ படம் மூலமாக அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. தொடர்ந்து, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ என வேகமாக வலம் வந்தவர் கொஞ்ச நாட்களாக காணோம். என்ன ஆச்சு என விசாரித்தால், ‘பைப்ரோமியால்ஜியா’என்ற வினோதமான தசை அழற்சி நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் நந்திதா.

மேலும், ”இதனால் என் உடல் எடை கடுமையாக குறைத்துள்ளது. ஒரு சிறிய வேலை செய்தால் கூட தசைகளில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. கடினமான வேலைகளையும் உடற்பயிற்சியையும் செய்ய முடியவில்லை. சில நேரங்களில் உடனடியாக நகர்வதற்குக் கூட கடினமாக இருக்கிறது” எனவும் கூறியுள்ளார்.

பைப்ரோமியால்ஜியா என்றால் என்ன?

“பல்வேறு சிக்கலான நோய்களுக்கு சிகிச்சைகளை கண்டுபிடித்து மருத்துவ உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. அதேநேரம், மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியாத சில அரிய நோய்களும் உள்ளன. ஃபைப்ரோமியால்ஜியா அவற்றில் ஒன்று.

பெரும்பாலும் எலும்புக்கூடு, மூட்டுகள், தசை நாண்கள், தசைகள், தசைநார்கள், குருத்தெலும்பு போன்றவற்றை உள்ளடக்கிய தசைக்கூட்டையும் உடலின் நரம்பு மண்டலங்களையும் பாதிக்கக்கூடிய ஒரு நாள்பட்ட நோய் இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் ஃபைப்ரோமியால்ஜியா (Fibromyalgia) பாதிக்கலாம். என்றாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களை தான் அதிகம் பாதிக்கிறது. அதிலும், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு ஃபைப்ரோமியால்ஜியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஃபைப்ரோமியால்ஜியாவின் அறிகுறிகள்

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் முழுவதும் கடுமையான வலி, மன உளைச்சல் இருக்கும். குறிப்பாக இடுப்பு, தொடைகள், கீழ் முதுகு, கழுத்து, மூட்டு, தசை, தலை ஆகியவற்றில் வலியும் சோர்வும் இருக்கும். மூட்டு விறைப்பு, தன்னையே காயப்படுத்திக்கொள்வது, தற்கொலை எண்ணம் போன்றவையும்  ஃபைப்ரோமியால்ஜியாவின் முக்கியமான அறிகுறிகள்.

நினைவாற்றல் குறைபாடு, கடுமையான பதட்டம், மனச்சோர்வு, உடல் முழுவதும் இருக்கும் கடுமையான வலி காரணமாக தூங்குவதில் சிரமம் மற்றும் விரல் நுனிகள், பாதங்கள், கைகள் போன்றவற்றில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, பார்வை பிரச்சினைகள், குமட்டல்/வாந்தி, கவலை, மோசமான தூக்கம், இடுப்பு வலி, ஒற்றைத் தலைவலி போன்றவை இருக்கும்.

பெண்களுக்கு வலிமிகுந்த மாதவிடாய் அல்லது வயிற்றுப் பிடிப்புகள், சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருக்கலாம்.

எதனால் ஃபைப்ரோமியால்ஜியா வருகிறது?

காரணங்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. அதேநேரம், சுற்றுச்சூழல், மரபணு, குடும்ப வரலாறு, நாள்பட்ட மனச்சோர்வு, அதிக மன அழுத்தம் அல்லது மன உளைச்சல், ஹார்மோன் / நரம்பியல் சமநிலையின்மை, உடல் பருமன் போன்றவை இதற்கான காரணமாக இருக்கலாம் என்று இதுவரையான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஏதேனும் மன அதிர்ச்சியை அனுபவித்திருந்தாலும் ஒருவர் ஃபைப்ரோமியால்ஜியாவால் பாதிக்கப்படலாம்.

காபி, மது, புகையிலையை அதிகமாக உட்கொள்வது, வைட்டமின் பி12 குறைபாடு, இரத்த சோகை போன்றவையும் காரணமாக கூறப்படுகிறது.

தீர்வு என்ன?

“ஃபைப்ரோமியால்ஜியா ஒருவரை வாழ்நாள் முழுவதும் பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோய். மேலே குறிப்பிட்டது போல் தற்போது வரை இதற்கு முழுமையான சிகிச்சை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், மேலே சொன்ன அறிகுறி இருப்பவர்கள் உடனே மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது சிறந்தது.

ஃபைப்ரோமியால்ஜியாவுக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், வலிகளை கட்டுப்படுத்த உதவும் மருந்துகள் உள்ளன. உடல் வலியைப் போக்க பிசியோதெரபி, அக்குபஞ்சர் போன்றவற்றை பரிந்துரை செய்வோம். மேலும் மன அழுத்தம், மன அதிர்ச்சியைக் குறைப்பதற்கும் சிகிச்சையும் மருந்துகளும் உள்ளன. முறையான உடற்பயிற்சிகள், ஆரோக்கியமான உணவு, மன அழுத்தத்தை குறைப்பது போன்றவையும் இந்நோய் தாக்கத்தில் இருந்து விடுபட உதவும்” என்கிறார்கள் மருத்துவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...