No menu items!

இடஒதுக்கீட்டை பின்பற்றாத டிஎன்பிஎஸ்சி – சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியல் ரத்து!

இடஒதுக்கீட்டை பின்பற்றாத டிஎன்பிஎஸ்சி – சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியல் ரத்து!

தமிழ்நாட்டில் சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு தேர்வானவர்களின் தற்காலிக தேர்வு பட்டியல், இட ஒதுக்கீட்டை சரியாக பின்பற்றாத காரணத்தால், உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘சமூக நீதி அரசு என மேடைக்கு மேடை முதலமைச்சர் முழங்கி வரும் நிலையில், சமூக நீதிக்கு எதிராக இந்த தேர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டது எப்படி? தவறு செய்த அதிகாரி மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா?’ என சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்களே கேள்வி எழுப்புகிறார்கள்.

என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளை நிரப்பும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் சிவில் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டது. சிவில் நீதிபதிகள் பணிக்கு 92 பின்னடைவுப் பணியிடங்கள், 153 நடப்புப் பணியிடங்கள் என மொத்தம் 245 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் அடங்கிய தற்காலிக தேர்வு பட்டியல் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஏழை மாணவர்கள் மற்றும் பழங்குடியினப் பெண் சிவில் நீதிபதியாக தேர்வானதை கொண்டாடி மகிழ்ந்தனர், சமூக நீதி ஆர்வலர்கள். இந்த தேர்வு பட்டியல்தான் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏன்?

இதனிடையே, ‘இந்த தேர்வு பட்டியலில் பின்னடைவு மற்றும் தற்போதைய புதிய பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை. அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வுப் பட்டியலைத் தயாரித்த ஆணையம், அதிக மதிப்பெண்கள் எடுத்த தேர்வர்களை பின்னடைவுப் பணியிடங்களிலும் அவர்களை விட குறைந்த மதிப்பெண் எடுத்த தேர்வர்களை பொதுப் போட்டிப் பிரிவிலும் அடுத்து வந்தவர்களை இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும் நிரப்பியுள்ளது. இது இடஒதுக்கீட்டு விதிகளுக்கு எதிரானது’ என்று கூறி, பாதிக்கப்பட்ட தேர்வாளர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கே. ராஜசேகர் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை பொதுப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் விதமாக, சிவில் நீதிபதிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டுள்ளது. எனவே, அந்த பட்டியலை ரத்து செய்கிறோம். ஏற்கெனவே உள்ள பின்னடைவு காலி பணியிடங்கள் மற்றும் புதிய பணியிடங்களுக்கு, அதிக மதிப்பெண் பெற்றவர்களை பொதுப் பிரிவில் சேர்த்தும் மற்றவர்களை உரிய இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றியும் புதிதாக திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு பட்டியலை டிஎன்பிஎஸ்சி 2 வாரங்களில் வெளியிட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. திமுக ஆதரவாளர்களே எங்கே தவறு நிகழ்கிறது? ஏன் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்குகிறது? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், நீதிபதிகள் என அனைத்து நியமனங்களிலும் இடஒதுக்கீட்டு விதிகள் தொடர்ந்து சிதைக்கப்படுவதும் அதை ஆளும் அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதும் கவலையளிக்கிறது.

2016ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டத்தின் 27ஆம் விதிப்படி, மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் போது, அதிக மதிப்பெண் எடுத்தவர்களைக் கொண்டு முதலில் பொதுப்போட்டிப் பிரிவு நிரப்பப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து பின்னடைவுப் பணி இடங்களும் மூன்றாவதாக நடப்புப் பணியிடங்களும் இட ஒதுக்கீட்டு விதிகளை முழுமையாக கடைப்பிடித்து நிரப்பப் பட வேண்டும். இதை முழுமையாக ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், 27ஆம் விதியை முழுமையாக புரிந்து கொண்டு அதனடிப்படையில் சிவில் நீதிபதி பணிகளுக்கான புதிய தேர்வுப் பட்டியலை தயாரிக்கும்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு ஆணையிட்டிருக்கிறது.

இத்தகைய சமூகநீதி சிதைப்பு என்பது தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறவில்லை. இதற்கு முன் 2019ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளுக்கு 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் போதும் இதே குளறுபடிகள் நிகழ்ந்தன. சமூகநீதி சிதைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வும் இரு நீதிபதிகள் அமர்வும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடைபிடித்த அளவுகோல் தவறு என்று தீர்ப்பளித்தன. ஆனாலும், அதை ஏற்காத ஆசிரியர் தேர்வு வாரியம் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன், 27ஆம் விதிப்படி இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என ஆணை பிறப்பித்தது.

தமிழ்நாடு அரசு (எதிர்) சோபனா வழக்கு என்றழைக்கப்படும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அப்போது வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான் சென்னை உயர் நீதிமன்றம் இப்போது தீர்ப்பை வழங்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்ச்சி பட்டியலை ஐகோர்ட் ரத்து செய்தது ஏன்? கொண்டாட வேண்டிய தீர்ப்பு இட ஒதுக்கீட்டை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கும் போது அதைக் கூட புரிந்து கொள்ள முடியாமலும் நடைமுறைப் படுத்த முடியாமலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் செயல்படுகின்றன என்றால், சமூகநீதிக்கு அதை விட மோசமான ஆபத்து இருக்க முடியாது.

ஆசிரியர்கள் நியமனத்திலும் நீதிபதிகள் நியமனத்திலும் நிகழ்ந்த இந்த குளறுபடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர்கள், பட்டியலினம், பழங்குடியினர் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் தான். சிவில் நீதிபதிகள் நியமனத்தில் இப்பிரிவுகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோருக்கு பணி மறுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் தலையிட்டதால் தான் அவர்களுக்கு புதிய பட்டியலில் வேலை கிடைக்கப் போகிறது. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

சமூகநீதியின் தொட்டில் என்று தமிழ்நாடு போற்றப்படுகிறது. அத்தகைய பெருமை கொண்ட தமிழ்நாட்டில், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என ஒவ்வொரு அமைப்பாலும் அடுத்தடுத்து சமூக நீதி சிதைக்கப்படுவது தலைகுனிய வேண்டிய ஒன்றாகும். இதே நிலை தொடர்ந்தால், ஒவ்வொரு தேர்விலும் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் உயர் நீதிமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் தேடிச் சென்று தீர்வு பெறுவது சாத்தியமற்றது. இத்தகைய அவலநிலை ஏற்பட்டதற்கு காரணம் சமூகநீதியில் அரசுக்கு அக்கறை இல்லாதது தான். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சமூகநீதியை சிதைத்ததுடன், உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்து குட்டு வாங்கிய அதிகாரி மீது அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால், மற்ற அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும்; இத்தகைய தவறுகள் நடக்காமல் இருந்திருக்கும்.

இனிவரும் காலங்களிலாவது இத்தகைய தவறுகள் நடக்காமல் தமிழக அரசு தடுக்க வேண்டும். அதற்காக, சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலில் சமூகநீதி சிதைக்கப்பட்டதற்கு காரணமான அதிகாரி யார்? என்பதை கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 27ஆம் விதிப்படி இட ஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து அனைத்து தேர்வாணையங்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். அனைத்துத் தேர்வாணையங்களிலும் இட ஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணிக்க சமூகநீதியில் அக்கறை கொண்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனங்களிலும் சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...