அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அதிகம் சர்ச்சைக்குள்ளான பெயர்களில் ஒன்று டாக்டர் ஜெய. ராஜமூர்த்தி. முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலினின் தம்பியான இவர் கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகம் கொண்டவர். மருத்துவம் மற்றும் இலக்கியம் தொடர்பாக பல நூல்களை எழுதியிருக்கிறார். ஆனால், இவை எல்லாவற்றையும் விட இஎஸ்ஐ மருத்துவமனை இயக்குநர் என்ற இவர் வகிக்கும் பதவிதான் ஒரே நாளில் இவரை பிரபலமாக்கிவிட்டது. டாக்டர் ஜெய ராஜமூர்த்தி மூலம்தான் இஎஸ்ஐ மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாக மருத்துவச் சான்றிதழ் அளித்தார்கள் என்ற குற்றச்சாட்டு திடீரென்று கிளம்பியது. இதற்கெல்லாம் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பிரேத்யேக பேட்டியில் பதிலளித்தார் டாக்டர் ஜெய. ராஜமூர்த்தி. அந்த பதில் இங்கே…
“இது 100 சதவிகிதம் திரிக்கப்பட்ட முற்றிலும் பொய்யான ஒன்று. இந்த சம்பவத்துக்கும் எனக்கும் ஒரு சதவீதம் கூட சம்பந்தம் இல்லை.
மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரின் கைதுக்கு பிறகு நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமத்தூரார் பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இதயத்தில் அடைப்புகள் இருப்பதாக ஓமந்துரார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. மருத்துவர் குழுவும் அவருக்கு அறுவை சிகிச்சைச் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில் அமைக்கப்பட்ட மருத்துவ குழுவில் இடம் பெற்றிருந்த, சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருந்துவக் கல்லூரி டாக்டர்களும் அதை உறுதி செய்தனர். சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவமனை தந்த அறிக்கையும், இஎஸ்ஐ குழு தந்த அறிக்கையும் ஒத்துப் போய் உள்ளது. எனவே, நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த சென்னை கே.கே. நகர் இ.எஸ்.ஐ மருந்துவக் கல்லூரி என் பொறுப்பின் கீழ் வராது, என் கட்டுப்பாட்டில் திருச்சி, வேலூர், சிவகாசி, மதுரை இஎஸ்ஐ மருத்துவமனைகள்தான் வரும். என் பொறுப்பில் இருப்பவை மருத்துவமனைகள். சென்னை கே.கே. நகரில் இருப்பது மருத்துவக் கல்லூரி. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அங்கு பணியாற்றும் டீன், ஒரு வட இந்தியர். அவரது முழு கட்டுப்பாட்டில் தான் அந்த மருத்துவக் கல்லுாரி இயங்கி வருகிறது. அவருக்கு எப்படி நான் உத்தரவிட்டிருக்க முடியும். உத்தரவிட்டிருந்தாலும் மத்திய அரசுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கும் அவர்தான் கேட்டிருப்பாரா?
சென்னை கே.கே. நகர் இ.எஸ்.ஐ மருந்துவக் கல்லூரியில் இருந்துதான் இதய சிகிச்சை நிபுணர்கள் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்திருக்கிறார்கள். அவர்கள் எத்தனை பேர் சென்றனர்? யார் யார் சென்றனர் என்பது கூட எனக்கு தெரியாது. மேலும் என் பொறுப்பில் இருக்கும் மருத்துவமனைகளில் இதய சிகிச்சை நிபுணர்களூ கிடையாது.
இது பற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல் சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகளை கிளப்பி விட்டுள்ளார்கள். ‘அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாக டாக்டர் ராஜமூர்த்தி சொன்னதாகவும், அது என் தலைமையில் சென்ற மருத்துவக்குழு’ என்று ஒரு கட்டுக்கதையை பரப்பி வருகின்றனர். ‘இஎஸ்ஐ மருத்துவமனையின் இயக்குனர் வேறு யாருமல்ல, முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் தம்பியான டாக்டர் ராஜமூர்த்தி என்பவர்தான். அவர் தான் இப்படி ரிப்போர்ட் கொடுக்கச் சொல்லி இருக்கிறார்’ என்று அக்கா படத்தையும் போட்டு அடித்து விடுகிறார்கள்.
எவனோ ஒருவன் என்னை பற்றி, துர்காவின் அண்ணன் என்கிறான். நான் அவருக்கு தம்பி. எனக்கு 58 வயசு. அவருக்கு (துர்கா) 62 வயதாகிறது. இது கூட தெரியாமல் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்.
அடிப்படை அறிவே இல்லாமல் என் மீது பொறுப்பில்லாமல் வீண் வதந்தியைப் பரப்பிக் கொண்டிருகிறார்கள். மீண்டும் சொல்கிறேன், அது முழுக்க முழுக்க தவறான செய்தி. இந்த அவதூறு செய்தியை யாரும் நம்ப வேண்டாம்” என்றார் டாக்டர் ஜெய. ராஜமூர்த்தி.