No menu items!

மோடி Vs எதிர்க் கட்சிகள் – மிஸ் ரகசியா

மோடி Vs எதிர்க் கட்சிகள் – மிஸ் ரகசியா

“ஜூன் மாசம் இப்படி மழை பெய்யுது” என்று அலுத்துக் கொண்டே உள்ளே வந்தாள் ரகசியா.

“ஒருவேளை பிரதமர் மோடி மீடியாவை சந்திச்சதினால இருக்குமோ” என்று சிரித்துக் கொண்டே கேட்டோம்.

“அமெரிக்கா பிரஸ் மீட்டை சொல்றிங்களா? அதுலயும் ஒரு சர்ச்சை இருக்கு. பிரஸ் மீட்டுக்கு கூட டெலிபிராம்ப்டர் பயன்படுத்தினார்னு ஒரு விமர்சனம் வந்துருக்கு”

“பிரஸ் மீட்டுக்கு எப்படி ப்ராம்ப்டர் பயன்படுத்த முடியும்?”

“பிரஸ் மீட்டுக்கு முன்னால அமெரிக்க அதிபரும் நம்ம பிரதமரும் இணைந்து பேசினாங்க. அதுக்க வைக்கப்பட்ட ப்ராம்ப்டர் அது. பெரிய தலைவர்கள் பேசும்போது வெள்ளை மாளிகைல டெலிப்ராம்ப்டர் வச்சு, அத பார்த்துதான் பேசுவாங்கனு பாஜககாரங்க சொல்றாங்க. ஆனால் அதிலயும் மோடி தப்பு பண்ணிட்டார்னு காங்கிரஸ்காரங்க கிண்டல் பண்றாங்க?”

“என்ன தப்பு பண்ணினார்?”

“இன்வெஸ்டிங்னு படிக்கிறது பதில் இன்வெஸ்டிகேட்டிங்னு படிச்சிட்டார். பெண் குழந்தைகளில் இன்வெஸ்ட் பண்ணும்போது அதாவது முதலீடு பண்ணும்போதுனு படிச்சிருக்கணும். ஆனால் பெண் குழந்தைகளில் இண்வெஸ்டிகேட் பண்ணும்போதுனு படிச்சிட்டார். அதை கிண்டலடிக்கிறாங்க. அமெரிக்காவுல போய் ப்ராம்ப்டர் பாத்து படிக்க முடியலனு சொல்றாங்க”

“காங்கிரஸ்காரங்க மோடியை கிண்டல் பண்றதும் பாஜககாரங்க ராகுலை கிண்டல் பண்றதும் புதுசு இல்லையே…சரி பீகார்ல எதிர்கட்சிகள் கூட்டம் நடத்தியிருக்காங்களே?”

“ஆமாம் பீகார் பாஜக நம்ம முதல்வருக்கு எதிரா கோபேக்ஸ்டாலின்னு ட்விட்டர்ல ட்ரெண்ட் அடிச்சும் எதிர்க் கட்சிகள் கூட்டம் நடந்திருக்கு. மமதா பானர்ஜி வந்ததுட்டாங்களேனு எதிர்கட்சிகளே ஆச்சர்யப்படுறாங்க”

“இதுல உருப்படியா எதிர்க் கட்சி கூட்டணியா ஃபார்ம் ஆகுமா? ஆம் ஆத்மி வரலையே?”

”ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் மேல கோபம். டெல்லி அரசியல்ல அவங்கள ஆதரிக்கலனு குற்றஞ்சாட்டியிருக்காங்க. ஆனா ஆம் ஆத்மி பத்தி மத்த கட்சிகள் அவ்வளவா கவலைப்படல. இனிம நடக்கிற கூட்டங்கள்ல காங்கிரஸ் இருந்தா கலந்துக்க மாட்டோம்னு ஆம் ஆத்மி சொல்லியிருக்காங்க. அடுத்த கூட்டம் ஜுலை 12னு முடிவு பண்ணியிருக்காங்க”

“அங்க முதல்வர் ஸ்டாலினுக்கு மரியாதை எப்படியிருந்தது?”

“வர்ற நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழ்நாட்டுல ஜெயிக்கிறது ரொம்ப முக்கியம்னு எதிர்க் கட்சிகள் பார்க்கிறாங்க. அதனால் திமுகவுக்கு முக்கியத்துவம் அதிகரித்திருக்கிறது. ராகுல் காந்திகிட்ட ஸ்டாலின் ஸ்பெஷல் பிரியத்துடன் பழகுறாரு. இது ராகுல் காந்திக்கும் பிடிச்சிருக்கு. தமிழ்நாட்டையும் திமுகவும் வர்ற நாடாளுமன்றத் தேர்தல்ல முக்கியமான இடத்துல இருக்கப் போகுதுனு காங்கிரஸ்காரங்ககிட்ட சொல்லியிருக்கிறாராம்”

“அடுத்த தமிழக டிஜிபி யார்ங்கிற ரேஸ் இப்ப ஆரம்பிச்சிருக்கே?”

“இப்போதைக்கு சங்கர் ஜிவால்தான் இந்த ரேஸ்ல முன்னாடி இருக்கறதா சொல்றாங்க. டிஜிபி பதவில இருந்து ஓய்வு பெறப்போற சைலேந்திரபாபுவை தமிழக அரசு பணியாளர் தேர்வு குழு தலைவரா நியமிக்க முதல்வர் திட்டமிட்டு இருக்கிறாராம்”

”உளவுத் துறை தலைமையும் மாற்றப்படும்கிற பேச்சு இருக்கிறதே?”

“ஆமாம். சங்கர் ஜிவால் டிஜிபி. உளவுத் துறை டிஜிபியா இருக்கிற டேவிட்சன் ஆசிர்வாதம் சென்னை கமிஷனர், டெல்லிலருந்து வர்ற சஞ்சய் அரோரா உளவுத் துறை தலைமைனு சொல்றாங்க. இல்லாட்டி டேவிட்சன் உளவுத் துறையிலேயே தொடர்வார் சஞ்சய் ஆரோரா சென்னை கமிஷனர் ஆவார்”

“நிறைய பேர் போட்டியிட்டாங்களே?”

“இப்பவும் போட்டி போட்டுக்கிட்டுதான் இருக்காங்க. ஆனா இந்த மூணு பேர் பத்திதான் பேச்சு இருக்கு”

“தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவோட பதவிக் காலமும் இந்த மாசத்தோட முடியப் போகுதே?”

“அவரையும் விடறதுக்கு முதல்வருக்கு மனசு இல்லை. ‘ஓய்வுக்குப் பிறகு உங்களை எனக்கு ஆலோசகராக நியமிக்கவா? இல்லை வேறு ஏதாவது பதவி தரணுமா?’ன்னு முதல்வர் ஸ்டாலின் அவர்கிட்ட கேட்டிருக்கார். அவர் அப்படி கேட்டதுக்கு நன்றி சொன்ன இறையன்பு, ‘இப்போதைக்கு எந்த பொறுப்பையும் ஏற்க விரும்பல. எழுத்துப் பணியில ஈடுபடப் போறேன்’ன்னு சொல்லியிருக்கார். இப்ப இருக்கற அரசியல் சூழல்ல ஏதாவது பதவி வாங்கி தன்னோட இமேஜை கெடுத்துக்க அவர் விரும்பலை. ஆனா முதல்வருக்கு அவரை விட மனசில்லை. ஏதாவது ஒரு பதவி கொடுத்து அவரை தன்னோட வச்சுக்க விரும்பறார்.”

“தமிழக அரசு 500 டாஸ்மாக் கடைகளைக் குறைச்சிருக்கே?”

“மதுவிலக்குத் துறை அமைச்சரா பொறுப்பேற்ற பிறகு அமைச்சர் முத்துசாமி, ‘டாஸ்மாக் வருமானம் குறைஞ்சா அரசாங்கத்துக்கு சந்தோசம்தான்’னு சொன்னார். இந்த விஷயத்துல கிட்டத்தட்ட முதல்வர் ஸ்டாலினோட நிலைப்பாட்டைத்தான் அமைச்சர் பிரதிபலிச்சிருக்கார். ‘டாஸ்மாக் வருமானம் போனால் கவலை இல்லை. டாஸ்மாக்கை வைத்து நமது ஆட்சிக்கு வரும் கெட்ட பெயரை முதலில் நீக்குங்கள். வருமானம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை’ன்னு முதல்வர் முத்துசாமிகிட்ட இருக்கார். அதைத்தான் முத்துசாமியும் இப்ப தீவிரமா செயல்படுத்தறார். ரொம்ப நாட்களா பேசப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளை உடனே மூட உத்தரவு போட்டதும் அதனாலதான். டாஸ்மாக் வருமானம் குறைஞ்சா பரவாயில்லைங்கிற முதல்வரின் நிலைப்பாடு டாஸ்மாக்கை நம்பியிருக்கும் திமுக மது ஆலை அதிபர்களை அப்செட் ஆக்கி இருக்கு. இதனால கர்நாடகால தங்களோட வியாபாரத்தை விரிவுபடுத்தறதைப் பத்தி அவங்க ஆலோசனை பண்ணிட்டு இருக்காங்க.”

“செந்தில் பாலாஜி கேஸ் என்னாச்சு? அப்படியே ஆறப்போட்டாச்சா?”

“அமலாக்கத் துறை மேல நீதிமன்றத்துல செந்தில்பாலாஜி தரப்புல பல குற்றச்சாட்டுக்களை வச்சிருக்காங்க. குறிப்பா சட்ட விரோத பண மாற்ற சட்டத்தின்படி குற்றஞ்சாட்டப்பட்டவரை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டிருக்கிறார்கள். இது அமலாக்கத்துறைக்கு சிக்கலை உண்டு பண்ணியிருக்கு. உடனே பதில் சொல்ல முடியாததுனால வழக்கை தள்ளிவைக்க அமலாக்கத் துறை சொல்லியிருக்காங்க”

“திமுகவினர்கள் மீதான சோதனைகள் தொடருமா? குறையுமா?”

“தொடரும். அனிதா ராதாகிருஷ்ணன் மேல இருக்கற சொத்து குவிப்பு வழக்கு இப்ப தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துட்டு இருக்கு. இந்த வழக்கில் தங்களையும் இணைச்சுக்கச் சொல்லி அமலாக்கத் துறை மனு தாக்கல் செஞ்சிருக்கு. இது பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் வழக்கை ஜூலை 19-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வச்சிருக்கார். அதனால அமலாக்கத் துறையோட அடுத்த குறி அவராத்தான் இருக்கும்னு பேசிக்கறாங்க.”

“முதல்வர்கிட்ட அமைச்சர் எ.வ.வேலு நல்லபெயர் வாங்கிட்டாராமே?”

“ஆமா… கலைஞர் கோட்டம், கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை, மதுரை கலைஞர் நூலகம்னு மூன்றையும் கட்டுற பொறுப்பை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுகிட்ட முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருந்தார். இதைச் சிறப்பா கட்டினதால முதல்வர் மனசுல இடம் பிடிச்சுட்டாராம். இதனால அவருக்கு முதல்வர் சிறப்பு பரிசைக்கூட கொடுத்திருக்கார். அப்ப ‘தலைவருக்கு இதை விட சிறப்பா யாரும் செய்ய மாட்டாங்க’ன்னு கண் கலங்கி இருக்கார் ஸ்டாலின். முதல்வர் மட்டுமில்லாம அவரோட குடும்பத்தினரும் எ.வ.வேலுவை பாராட்டி இருக்காங்க.”

“அதிமுக நிலவரம் எப்படியிருக்கு?”

“பாஜக பக்கம் போகாம அதிமுக அப்படியே இருக்கு. ஆனா, அமமுகவுல மாற்றம் வரும்னு பேச்சு இருக்கு. அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சித் தலைவர் பொறுப்பை ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டு கட்சியை வழிநடத்தணும்கிறதுதான் டிடிவி தினகரன் விருப்பம். அவரை நேர்ல பார்த்து இதுபத்தி பேச அவர் முடிவு எடுத்திருக்காரு. இந்த விஷயத்தை அவர் வைத்தியலிங்கத்திடமும் சொல்லிட்டார். அவர் எப்படியும் ஓபிஎஸ்கிட்ட சொல்லிடுவார்னு நம்பறாங்க.”

”ஒரு காலத்துல தினகரனுக்கு எதிராதான் தர்ம யுத்தமே பண்ணினார் ஓபிஎஸ்…ஆனா இப்ப..”

“அரசியல்ல நிரந்த நண்பர்களும் கிடையாது நிரந்தர எதிரிகளும் கிடையாதுனு அன்னைக்கே சொல்லிட்டாங்களே” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...