No menu items!

இந்தியாவை உலுக்கிய நரபலி – என்ன நடந்தது?

இந்தியாவை உலுக்கிய நரபலி – என்ன நடந்தது?

இந்தியாவே அதிர்ந்திருக்கிறது. கேரளாவில் இரண்டு பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். செல்வம் பெருக வேண்டும், வாழ்க்கை உயர வேண்டும் என்ற காரணங்களுக்காக நரபலி கொடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.

கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் எலந்தூர் கிராமத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்திருக்கிறது. நரபலியில் ஈடுபட்டதாக பகவால் சிங், அவரது மனைவி லைலா, மாந்தீரிகர் ரஷீத் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பகவால் சிங்கும் அவரது மனைவியும் உள்ளூரில் பாரம்பர்ய வைத்தியம் பார்ப்பவர்கள். உள்ளூர் மக்களிடம் நெருங்கிப் பழகியவர்கள். பகவால் சிங் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர். அவரது முகநூல் பக்கத்துக்கு சென்று பார்த்தால் ஏராளமான ஹைக்கூ கவிதைகள் எழுதியிருக்கிறார். அவரது மனைவி லைலாவும் உள்ளூர் மக்களால் விரும்பப்பட்டவராகவே இருந்திருக்கிறார். இவர்கள் எதற்காக பெண்களை கொடூரமாக கொன்று நரபலி கொடுத்தார்கள்?

பகவால் சிங்கிற்கு ஸ்ரீதேவி என்ற பெண் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகிறார். பகவாலின் பதிவுகளுக்கு லைக்கில் ஆரம்பித்த நட்பு ‘சாட்’டுக்கு மாறுகிறது. ஃபேஸ்புக் மூலம் பேசிக்கொள்கிறார்கள். பகவால் தன் வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்களை கூறுகிறார். அதை பரிவுடன் கேட்கிறார் ஸ்ரீதேவி. அவற்றுக்கு தீர்வாக முகமது சஃபி என்ற ரஷீத் என்ற மாந்திரீகரிடம் பேசுமாறு கூறுகிறார். எந்தப் பிரச்சினையையும் தீர்த்துவிடுவார் என்று அவருக்கு சிபாரிசு செய்கிறார். பகவால் சிங் நம்புகிறார். ஸ்ரீதேவி தந்த எண்ணுக்கு தொலைபேசியில் பேசுகிறார். மாந்திரீகர் நேரில் சந்திக்குமாறு கூறுகிறார். சந்திப்பு நடக்கிறது. தொடர்கிறது.

ஒரு கட்டத்தில் பகவால் குடும்பத்தினர் மீது சாபங்கள் இருப்பதாக நம்ப வைக்கிறான் அந்த திருட்டு மாந்தீரிகன். அதற்கு தீர்வு நரபலி கொடுப்பதுதான் என்று பயங்கரமான வழியையும் காட்டுகிறான். அத்தனையையும் நம்புகிறது பகவால், லைலா ஜோடி.

நரபலி கொடுக்க பெண்களை தானே கொண்டு வருவதாக கூறிச் செல்லும் சஃபி சில நாட்கள் கழித்து ஒரு பெண்ணை அழைத்து வருகிறான். அந்தப் பெண் ரோஸ்லின். கடைவீதியில் லாட்டரி டிக்கெட் விற்பவர். தனியாக வசிப்பவர். அவரிடம் 10 லட்சம் ரூபாய் தருவதாகவும் பலான படத்தில் சில காட்சிகள் நடிக்க வேண்டும் என்றும் கூறி அழைத்ததாக காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

இரவு நேரத்தில் பகவால் சிங் வீட்டுக்கு ரோஸ்லினை அழைத்து வந்த சஃபி, அவரை கட்டிலில் படுக்க வைத்து கை, கால்களை கட்டிலுடன் கட்டுகிறான். சில பூஜைகள் செய்கிறான். பகவாலின் மனைவி லைலாவை அழைத்து ரோஸ்லினின் கழுத்தை வெட்டுமாறு கூறுகிறான். அவரும் வெட்டுகிறார். கழுத்து வெட்டப்படுகிறது. நெஞ்சு பிளக்கப்படுகிறது. பிறப்புறுப்பு சிதைக்கப்படுகிறது. சிதறிய ரத்தம் வீடு முழுவதும் தெளிக்கப்படுகிறது. உடலின் சில பாகங்களை சாப்பிடச் சொல்லுகிறான் சஃபி. பூஜையின் உக்கிரத்தில் உச்சத்திலிருந்த பகவலும் அவரது மனைவியும் மனித உடலின் சில பாகங்களை சாப்பிடுகிறார்கள். உடலின் மற்ற பாகங்கள் வீட்டின் தோட்டத்தில் பல இடங்களில் புதைக்கப்படுகிறது. பூஜை முடிகிறது. இந்த நரபலி ஜூன் மாதம் நடக்கிறது.

தாயைக் காணவில்லை என்று புகார் கொடுக்கிறார் ரோஸ்லினின் மகள். போலீஸ் தேடத் துவங்குகிறது.

ஜூன் மாதம் நரபலி கொடுத்தும் வாழ்க்கையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. சஃபியிடம் புலம்புகிறார்கள். குடும்ப சாபம் ஓரளவுதான் போயிருக்கிறது. இன்னும் சில சாபங்கள் இருக்கின்றன. அவற்றை தீர்க்க மற்றோரு நரபலி கொடுக்க வேண்டும் என்கிறான் சஃபி. மீண்டும் ஒரு பெண்ணை அழைத்து வருகிறான் சஃபி. இந்தப் பெண்ணின் பெயர் பத்மா. இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர். தருமபுரிக்காரர். பிழைப்புக்காக கேரளா சென்றிருக்கிறார். உடல்நிலை சரியில்லாததால் கணவர் தருமபுரி சென்றுவிட இவர் அங்கேயே வேலை செய்துக் கொண்டிருந்தார்.

ரோஸ்லினுக்கு நடந்த அதே விஷயங்கள் பத்மாவுக்கும் நடக்கிறது. நள்ளிரவு பூஜை. அறுப்பு, ரத்தம், புதைப்பு. இந்த சம்பவம் நடந்தது செப்டம்பர் 26.

பத்மாவை காணவில்லை என்ற புகார் கொடுக்கப்படுகிறது. மீண்டும் போலீஸ் விசாரணை. இரண்டு பெண்களின் செல்ஃபோன் தொடர்புகளும் பகவால் பகுதி வரை வந்ததை கண்டறிகிறார்கள். சிசிடிவி ஆராயப்படுகிறது. இரவில் யாரோ பகவல் வீட்டுக்கு வரும் காட்சிகள் கிடைக்கின்றன. விசாரணை தீவிரமாக்கப்படுகிறது. நரபலி கண்டுபிடிக்கப்படுகிறது.

இந்த நரபலிக்கெல்லாம் ஆரம்ப புள்ளியாக இருந்த ஸ்ரீதேவி என்ற ஃபேஸ்புக் பக்கம் போலி என்று தெரிகிறது. அந்த ஸ்ரீதேவியும் சஃபிதான். பெண் பெயரில் ஆசை வலையை விரித்திருக்கிறான்.

இந்தியாவில் அதிகம் படித்தவர்கள் வாழும் கேரளாவில் இப்படியொரு கொடுமையான சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கணவன் – மனைவி இருவருமே உள்ளூரில் மதிக்கப்பட்ட மனிதர்களாக இருந்திருக்கிறார்கள். எல்லோரிடமும் அன்பாய் பழகியிருக்கிறார்கள். கவிதை எழுதும் மனதுடையவர்களாய் இருந்திருக்கிறார்கள். ஆயினும் இரண்டு கொலைகளை செய்து மனித மாமிசம் சாப்பிட்டிருக்கிறார்கள்.

காரணம் மாந்தீரிகம் என்ற மாயை. போலி எது உண்மை எது என்று தெரியாத அறியாமை. செல்வம் பெருக வேண்டும் என்ற பேராசை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...