No menu items!

கலைஞரின் திருப்புமுனை வசனங்கள்

கலைஞரின் திருப்புமுனை வசனங்கள்

இமையம்

நூறாண்டு கடந்த தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக கோலோச்சியவர் கலைஞர் மு. கருணாநிதி. 69 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் கதையாகவும் வசனமாகவும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் வலம் வந்தவர்.

கலைஞர், தனது 20 வயதில், 1947இல் ‘ராஜகுமாரி‘ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுத வருவதற்கு முன்பு தமிழில் மாயாஜாலக் கதைகள், மந்திர தந்திரக் கதைகள், விட்டலாச்சாரியர் படங்கள் என்றுதான் படங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அதைவிட்டால் ‘கணவனே கண்கண்ட தெய்வம்‘ போன்ற பெண்ணடிமைத்தனத்தை பேசுகிற படங்களாக நிறைந்திருந்தன. பெரும்பாலான படங்களில் ‘பிள்ளைவாள்‘, ‘அய்யர்வாள்‘, செட்டியார்வாள்‘ என்று சாதி பெயரை குறிப்பிடும் வசனங்களே பேசப்பட்டன. இந்த மாயாஜாலங்களை, மந்திர தந்திரங்களை, பெண்ணடிமைத்தன கற்பிதங்களை காலி செய்யும் விதமாகவும் அறிவை, அறிவியலை, சுயசிந்தனையை வளர்ப்பது மாதிரியாகவும் புயலென தமிழ் சமூகத்திற்குள் வந்தன கலைஞரின் கதைகளும் வசனங்களும்.

கற்பனை உலகை உருவாக்காமல், நிஜ உலகத்தை, யதார்த்த உலகின் அன்றாட வாழ்வியலை, பிரச்சினைகளை, சிக்கல்களை எளிய மனிதர்களின் மொழியில் எழுதி தமிழ் சினிமாவின் முகத்தை மட்டுமல்ல, போக்கையே மாற்றினார், கலைஞர். அவரது கதை, வசனத்தில் வெளிவந்த படங்கள் கருத்தியல் ரீதியாக மட்டுமல்ல, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன.

ஒரு கதையை ஏன் எழுதுகிறோம், எப்படி எழுதுகிறோம் என்பதைவிட முக்கியமானது யார் சார்பாக நின்று, யாருடைய மொழியில் எழுதுகிறோம் என்பது. சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுடைய, வஞ்சிக்கப்பட்டவர்களுடைய சார்பாக நின்று எழுதுவதுதான் சமூக அக்கறையுடைய எழுத்தாளனின் வேலை. சமூகத்தில் கீழ்நிலையில் இருப்பவர்களுடைய வாழ்வுக்காகவும் அவர்களுடைய குரலாகவும் எழுதியதால்தான் கலைஞரின் கதை, வசனங்கள் மகத்தானதொரு இடத்தில், காலத்தால் அழியாதத்தொரு இடத்தில் இருக்கிறது.

‘நாம்’ (1953) படத்தில் கலைஞர் எழுதிய, “ஆச்சரியக்குறிதான் ஜமீன்தார் அவர்களே. கொஞ்சம் வளைந்தால் கேள்விக்குறியாகிவிடும். ஞாபகம் இருக்கட்டும், அரிவாளுக்கும் கேள்விக் குறிக்கும் அதிக வித்தியாசமில்லை” என்று கடுமையாக எச்சரிக்கும் தொனியில் வரும் வசனம் அன்றைய ஜமீன்தார்களுக்கு, நிலச்சுவான்தார்களுக்கு விடுக்கப்பட்ட சவால். இந்த வசனம் இன்றைய சூழலுக்கும் பொருந்தி, பன்னாட்டுக் கம்பனிகளுக்கும் பெரியபெரிய கம்பனி முதலாளிகளுக்கும் சவாலாகவும் அமையக்கூடியது. அரிவாள் என்பது வெறும் அரிவாள் அல்ல. அது ஒரு சின்னம். உழைப்பவர்களுடைய ஆயுதம். அடையாளம்.

கலைஞர், புலவர்கள் பேசுகிற மொழியில், கவிதைத் தன்மையில் மட்டும்தான் எழுதுவார் என்றில்லை; மிகவும் எளிய மக்களின் மொழியிலும் எழுதுவார். உயர் வழக்கில் எழுதினாலும், எளிய பாமர மக்களின் மொழியில் எழுதினாலும், பொடி வைத்து எழுதுவதை, ஒரே சொல்லில் பல அர்த்தங்கள் வருமாறு எழுதுவதை, அவரது எல்லா திரைக்கதை, வசனத்திலும் பார்க்கலாம்.

‘ஒரே ரத்தம்’ (1987) படத்தில், “நான் ஒத்த ரூபா நோட்டுப்போல ஒன்ன பொட்டிக்குள்ள வச்சியிருந்தன். நீ இப்படி சில்றையா ஆயிட்டியே” என்று எழுதியிருப்பார் கலைஞர். நாம் ஒரு மனிதரை உயர்வாக கருதியிருப்போம். ஆனால், அந்த மனிதர் மிகவும் அற்பமான குணங்களை கொண்டிருப்பார் என்பதைத்தான் இந்த வசனத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். மறைமுகமாக அன்றைய, இன்றைய அரசியலையும் அரசியல்வாதிகளையும் பேசுகிறது இந்த வசனம்.

‘மணமகன்‘ (1951) படத்தில் ஒருவர், “சந்திரன் ஏழாம் இடத்தில் இருக்கிறான்“ என்று சொல்ல, மற்றொருவர், “என்னங்க சந்திரன் பக்கத்தில இருக்காரு. நீங்க ஏழாம் எடத்தில இருக்காருன்னு சொல்றிங்க?“ என்று கேட்பார். முதலில் இது ஒரு நகைச்சுவை வசனம். படத்தில் இந்த வசனத்தை கேட்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. ஜோசியத்தை, ஜாதகத்தை, ஜோசியம் பார்ப்பவர்களை நேரடியாக கிண்டல் செய்கிறார். அதோடு நம்முடைய அறியாமையும் கேள்வி கேட்கிறார். இந்த வன்மைதான் கலைஞருடைய எல்லா திரைப்பட வசனங்களிலுமே காணக்கூடிய சிறப்பு. சாதுர்யமான மொழிப் பிரயோகம், கருத்துப் பிரச்சாரம் மட்டும் இருக்காது. கேலியும் கிண்டலும் சேர்ந்தே இருக்கும். இரட்டை அர்த்த வசனங்களை எழுதுவதில் மட்டுமல்ல, எதிராளியும் படித்து ரசிக்கும்படியான, சிந்திக்கும்படியான வசனங்களை எழுதுவதிலும் வல்லவர். அதேநேரம், கலைஞருடைய இரட்டை அர்த்த வசனங்களில் மலினப்படுத்தி பேசுகிற, கீழ்மைப் படுத்தி பேசுகிற தன்மை இருக்காது.

கலைஞர் வசனத்தில், சொற்களின் சேர்க்கையில், கட்டமைப்பில் எதுகை மோனையோடு ஒசை லயமும் இருக்கும். இந்தத் தன்மைதான் கலைஞருடைய வசனங்களை இன்றைக்கும் மனப்பாடம் செய்ய வைக்கிறது.

‘மந்திரி குமாரி’ (1950) படத்தில் வரும், “சுதந்திரமாக திரியும் சூரியன் காற்றுப்பட்டு கரையும் மேகத்திடம் மன்னிப்புக் கேட்பதா?“ வசனம் மகத்தான கவிதைக்கான குணத்தையும் கொண்டிருக்கிறது. சூரியன் எப்படிப்பட்டது? காற்றுப் பட்டாலே கரைந்து, அடையாளம் இல்லாமல் போகும் மேகம் எப்படிப்பட்டது? சூரியனுக்கும் மேகத்துக்குமான இந்த ஒப்பீடு அரியது.

“இது நல்லோர் வாழ்ந்திடும் திருநாடா? இல்லை பொல்லா விலங்குகள் வாழும் இருள்காடா?” என்று ஒரு சினிமா பாடலில் கேட்டிருப்பார், இந்தக் கேள்விக்கு யாரால் பதில் தர முடியும்?

கலைஞர் வசனத்தில் தத்துவப் பார்வையும் இருக்கும்; அன்றாட வாழ்வியலின் அல்லலும் இருக்கும். ‘மந்திரி குமாரி’ படத்தில், “உங்களுடைய நிழலை, உங்களுடன் வராதே என்று சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது“ என்ற வசனம் எவ்வளவு உயரிய உண்மையை, சத்தியத்தை சொல்கிறது. ஒரு ஞாநியின் நிலையிலிருந்து, சித்தர்களின் நிலையிலிருந்து வாழ்க்கையை விலகி நின்று பார்த்த ஒரு மனிதரால்தான் இந்த வசனத்தை எழுதமுடியும்.

‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ (1960) படத்தில், “துப்பாக்கி முனை – உடலைத்தான் துளைக்கும். உள்ளத்தை தொட முடியாது“ என்று ஒரு வசனம், இதே படத்தில், “உனக்குப் பால்தானே வேண்டும்? அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என முப்பாலும் உள்ளது. நன்றாகக்குடி“ என்று இன்னொரு வசனம். வணிகத்தை மட்டுமே நோக்கமாககொண்ட சினிமாவில் இதுபோன்ற வசனத்தை இன்று யாரால் எழுத முடியும்? இது வெறும் சினிமா வசனம் மட்டும் அல்ல, வழிகாட்டுதல். தமிழர்கள் பெறவேண்டிய அறிவு திருக்குறளில் இருக்கிறது என்று சொல்கிறார், கலைஞர்.

திருக்குறளை மட்டுமல்ல, தமிழில் உள்ள அத்தனை இலக்கியங்களையும் தன்னுடைய வசனத்தின் வழியாகவே அறிமுகம் செய்துவிடுவார். ‘மனோகரா’ (1957) படத்தில், “புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக்காற்றே, புறமுதுகுக்காட்டி ஓடும் கலிங்கத்துப்பரணியை மறைக்க வந்த காரிருளே, கால்பிடரியில் இடிபட ஓடும்” என்று வரும் வசனம் நல்ல எடுத்துக்காட்டு.

கலைஞர் வசனம், ஒரு பொருள் மட்டுமே தராது, பல அர்த்தங்களை தரக்கூடியதாக இருக்கும். அதே மாதிரி ஒரே மட்டத்தில் தேங்கி நிற்காது, ஒரு நிலையிலிருந்து அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று அற்புதமான கருத்தியல் தாண்டுதல்களை நிகழ்த்தும். ‘கண்ணம்மா’ (2005) படத்தில், “நாட்டில் தமிழ்மொழி, ஆட்சிமொழியானதும், உனக்குத் தமிழிலேயே கடிதம் எழுதுகிறேன்“ என்ற வசனம் என்ன சொல்கிறது? தமிழ்மொழி ஆட்சி மொழியாக இல்லை; அதற்கு காரணம் யார் என்ற கேள்வியோடு, நிச்சயம் தமிழ் மொழி ஆட்சிமொழியாகும் என்ற உத்தரவாதத்தையும் தருகிறார்.

கலைஞர் எழுதிய கதை, திரைக்கதை, வசனத்தின் மூலம் அவருக்கு நண்பர்களைவிட எதிரிகளே அதிகமாக ஏற்பட்டிருப்பார்கள். அந்தளவு தயவு, தாட்சண்யமில்லாமல் சமூகத்தை சீரழிப்பவர்களை தன் வசனங்களால் கடுமையாக தாக்கியிருக்கிறார். “ஆயிரம் பழிச் சொற்கள் எதிரிகளிடமிருந்து வரினும் ஏற்ற எனது கடமையை செய்ய அஞ்சேன்” என்று அறிவித்துவிட்டுத்தான் கதை, வசனம் எழுதியிருக்கிறார், கலைஞர். புயற்காற்றுக்கே அஞ்சாதவரா புழுதிக்காற்றுக்கு அஞ்சப்போகிறார்?

‘ஆடு பாம்பே‘ (1979) படத்தில், “எத்தர்களின் மாய்மாலத்தில் இறைவன் இல்லை என்ற உண்மையை உலகம் உணர செய்திட வேண்டும்“ என்ற வசனம் எதை சொல்கிறது? கலைஞர் நோக்கம் சினிமாவுக்கு கதை, வசனம் எழுதுவது அல்ல, சமூகத்திற்கு பாடம் சொல்வது. சமூகத்தைப் படிக்கச் செய்வது, அறிவைப் பரப்புவது. இந்த மகத்தான நோக்கம்தான் அவருடைய எழுத்திற்கு வலிமையை, சாகா வரத்தை தந்திருக்கிறது.

பெரியாருடைய கொள்கையை, அம்பேத்காருடைய கொள்கையை, மார்க்சியத் தத்துவத்தை அன்று மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான் கலைஞருடைய கதைகளின், வசனங்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. ‘ராஜா ராணி’ (1956) படத்தில் பத்து நிமிடம் வரை ஒரு வசனம் வரும். இந்த வசனத்தில் கருத்துச் செறிவும் மொழிச் செறிவும் முழுமையாக கைக்கூடி வந்திருக்கும். கேட்கும்போது நம்மையே மறந்துவிடுவோம்.

பிற பாதைகளை காட்டிலும் சமூகத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த பாதை அரசியல் பாதை என்பதை தீர்மானித்து செயல்பட்டவர், கலைஞர். “நான் தேர்ந்தெடுத்த பாதை. அரசியல் பாதை. வாழ்க்கையின் எல்லாப் பாதைகளிலும் குளிர் சோலையும் இருக்கும், சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டவுடன் பதுங்கி ஓடுபவன் நானல்ல” என்று சொன்னார். இதே போன்றதொரு வசனம்தான் ‘பராசக்தி’ (1952) படத்தில் வரும், “நான் தென்றலைத் தீண்டியதில்லை, தீயை தாண்டியிருக்கிறேன்“ என்ற வசனம்.

கலைஞருடைய எழுத்தில் தனிமனித வாழ்க்கை எப்போதுமே முதன்மை பெறாது, சமூக வாழ்க்கைத்தான் முதன்மை பெறும். தன்னைவிட தான் வாழும் சமூகம் முக்கியமென்று கருதுகிற ஒரு மனிதனால்தான் இப்படி எழுத்திற்காகவே தன்னை ஒப்படைக்க முடியும். ‘நீதிக்குத் தண்டனை (1987) படத்தில், “அவுங்க சூரியன மாதிரி உலகத்து இருட்ட வெரட்டப் பொறந்தவங்க“ என்று ஒரு வசனம். சமூகத்தின் சிந்தனையில், அறிவில், வாழ்வில் சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில், கடவுள், மதம், சாதி என்ற பெயரில் இருட்டை நிரப்பியவர்கள் யார்? இருட்டை நிரப்பியவர்களே, இருட்டை போக்க வந்ததாக கூறுவது எத்தகைய முரண் என்பதைத்தான் இந்த வசனம் சொல்கிறது. உலகில் சூரியனைத் தவிர இருட்டைப் போக்குவதற்கான வேறு சக்தி, ஆற்றல் உண்டா? இதுதான் கலைஞருடைய கேள்வி. காலத்தின் கேள்வி.

ஒரு இனத்திற்கு மொழியும் அந்த இனம் வாழ்கிற இடமும்தானே அடையாளம். இதைத்தான் ‘பூம்புகார்’ (1964) படத்தில் வரும், “இந்த காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையில் மோதுகின்ற அலைகள் எழுப்புகின்ற சோககீதம் நம்மை எங்கேயோ ஒரு உலகத்துக்கு இழுத்துச்செல்கின்றது. வற்றாத இன்பம் கொழிக்கின்ற வரலாற்று உலகம். தேன் மாரி பொழிகின்ற தீந்தமிழ்“ என்ற வசனம் சொல்கிறது, தமிழ்மொழியின் அருமையையும் தமிழரின் வரலாற்றுப் பெருமையையும் சொல்கிறது.

கலைஞர் எழுதியதை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது, இரண்டு விசயங்களைத்தான் தொடர்ந்து அவர் வலியுறுத்தியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது. அது தமிழர் நலன், தமிழர் வாழ்வு. தமிழ்மொழியின் செழுமை, அதனுடைய வளமை.

வணிக சினிமாவுக்கு எழுதினாலும் தன்னுடைய கருத்துக்களை பரப்புவதற்கான ஊடகமாகத்தான் கலைஞர் சினிமாவை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அரசியல், தத்துவம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமூகத்தை சீரழிக்கும் தீய சக்தி, இலக்கியம், வரலாறு, மொழி, பண்பாடு, கலாச்சாரம், அறிவியல் சார்ந்த சிந்தனை ஒவ்வொன்றைப் பற்றியும் தெளிந்த சிந்தனையோடும் தீர்க்க தரிசனத்தோடும் எழுதியிருக்கிறார். அரசியல் வசனங்கள், தத்துவ வசனங்கள், நகைச்சுவை வசனங்கள், காதல் வசனங்கள், வரலாறு தொடர்புடைய வசனங்கள், இலக்கியம் தொடர்புடைய வசனங்கள் என எத்தனை மாதிரிகளை கலைஞர் எழுதி காட்டியிருக்கிறார். எப்பக்கம் சாய்ந்தாலும் நிமிர்ந்தே எரியும் தீப்பிழம்பாக இருக்கிறது கலைஞரின் வசனங்கள்.

‘அம்மையப்பன்‘ (1954) படத்தில் காதலுக்கு புது விளக்கம் ஒன்றை தருகிறார். “காதல் பன்னீரில் குளித்து, பழரசத்தில் நீந்திக் கன்னியர் புடைசூழ கட்டிலறைக்குச் சென்றால்தான் வருவேன் என்று சொல்வதல்ல காதல்.“

கலைஞர், அவருக்கு முன்பிருந்த யாருடைய சாயலிலும் எழுதியதில்லை. யாருடைய பாணியையும் பின்பற்றியதில்லை. அவருடைய சாயலையும் பாணியையும்தான் மற்றவர்கள் பின்பற்றியிருக்கிறார்கள்.

கலைஞர் தன்னுடைய எழுத்திற்கான, கதைக்கான, வசனத்திற்கான நோக்கம் என்னவென்று அவரே சொல்கிறார் “யாப்பின்றி போனாலும் போகட்டும். நம் நாடு, மொழி, மனம் உணர்வெல்லாம் காப்பின்றி போகக்கூடாது.“ இந்த கொள்கை முழக்கம்தான் அவருடைய வாழ்க்கையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...