வாழ் தமிழா யூடியூப் சேனலில் (Wow Tamizhaa – YouTube) வரும் Book Talk தொடரில் திரைப்பட பாடலாசிரியர் கு. உமா தேவியை சந்தித்தோம். படிக்க வேண்டிய பத்து புத்தகங்களை இப்பேட்டியில் வாசகர்களுக்கு உமா தேவி பரிந்துரை செய்கிறார். அதன் இரண்டாவது பகுதி இது.
எரியும் பனிக்காடு – பால் ஹாரிஸ் டேனியல்
இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’ திரைப்படத்தின் மூலக் கதை இந்த நாவல்தான். மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய தேயிலைத் தோட்டங்களை கட்டியமைக்கக் கூட்டங் கூட்டமாக ஒடுக்கப்பட்ட மக்கள் பலிகொடுக்கப்பட்டார்கள். இதுபோல் ஒவ்வொரு தேயிலை தோட்டத்தின் உருவாக்கத்துக்குப் பின்னாலும் ஆயிரமாயிரம் மக்களின் ரத்த சரித்திரம் மறைந்திருக்கிறது. நாம் குடிக்கும் ஒவ்வொரு தேநீரிலும் அவர்களின் வலிகள் நிறைந்திருக்கிறது. அந்த கதையை, அம்மக்களிடையே பணியாற்றிய மருத்துவரும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளருமான பால் ஹாரிஸ் டேனியல் ஆங்கிலத்தில் ‘ரெட் டீ’ என்ற தலைப்பில் நாவலாக எழுதினார். அதன் தமிழ் மொழிபெயர்ப்புதான் ‘எரியும் பனிக்காடு’. வழக்கறிஞரும் எழுத்தாளருமான இரா. முருகவேள் மிக நேர்த்தியாக இதை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
தீண்டாத வசந்தம் – ஜி. கல்யாணராவ்
அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவு செய்துகொள்ள முடியாத நிலையிலும், மனித உரிமைகள் பலவும் மறுக்கப்பட்ட நிலையிலும், வசந்தத்தை தீண்ட முடியாதவர்களாக நிற்கும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் ஐந்து தலைமுறைகள் வாழ்க்கையை இந்த தெலுங்கு நாவலில் நமக்கு காட்சிபடுத்துகிறார் ஜி. கல்யாணராவ். பறையர்களும் சக்கிலியர்களும் எவ்வாறு உருவானார்கள் என வேதங்கள் கூறும் காமதேனு கதையில் ஆரம்பித்து, புராணங்களையும் வேதங்களையும் உருவாக்கியவர்கள் எவ்வாறு இவர்களை ஒதுக்கிவிட்டு தமது வசதிக்கு ஏற்றவாறு வரலாற்றை அமைத்துக்கொண்டார்கள் என்ற உண்மையையும் பாத்திரங்களின் ஊடாக முன்வைக்கின்றார்.
தலைமுறை, தலைமுறையாக தொடரும் தீண்டாமை, அதற்கு எதிரான மக்களின் போராட்டம் என்ற உருக்கமான கதை மாத்திரமல்ல, அதனையும் மீறி, அவற்றை வெற்றிகொள்ள வேண்டிய கேள்விகளையும் இந்த நாவல் உணர்த்துகிறது. இந்த நாவலின் ஒவ்வொரு அம்சங்களிலும், ஆந்திரப் பிரதேசத்தின் பொருளாதாரம், அரசியல், சமூக கட்டமைப்புக்கள் பற்றியும் கூறுகிறார். தெலுங்கில் இருந்து இதை தமிழில் ஏ.ஜி. எத்திராஜுலு மொழிபெயர்த்துள்ளார்.
கருக்கு – பாமா
தமிழில் வந்த முதல் தன் வரலாற்று நூல் என்று இதனை சொல்லலாம். ‘கருக்கு’ பாமாவின் முதல் படைப்பு. தனது முதல் படைப்பிலேயே தமிழ் இலக்கிய உலகின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தவர். தன் வாழ்க்கையையே சாட்சியாய் வைத்து தனது மக்களின் அவல வாழ்க்கையைப் பாசாங்கின்றி இதில் பதிவு செய்துள்ளார். அதுவரை பேசப்படாதிருந்த ஒரு சமூக மௌனத்தை தனது தனித்துவமான மொழியினால் கலைத்துள்ளார். இங்கிருந்த மதத்தின் ஒடுக்குதலுக்கு எதிராக வந்த ஒரு மதத்துக்குள்ளும் எப்படியான ஒடுக்குதல்கள் இருக்கிறது என்பதை அப்பட்டமாக தோலுரித்து காட்டுகிறார்.
சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கௌதமன்
‘கருக்கு’ பாமாவின் சகோதரர்தான் ராஜ் கெளதமன். ஏழ்மையாலும் வேலையின்மையாலும் சாதிய முரண்களாலும் குரூரமாகத் துவைத்தெடுக்கப்பட்ட சிலுவைராஜின் சரித்திரத்தை இந்த நாவலில் சொல்கிறார். வலிகளாலும் அவமானங்களாலும் நிரம்பியது அவனது கதை.
ஆனால், ஒரு கிராமிய வாழ்க்கை என்றால் அதில் கழிவிரக்கம், கெஞ்சல், அழுகை, ஓலம், ஒப்பாரி எல்லாம் இருக்கும் என்ற பொது புரிதலை கடந்து இந்த நாவலுக்குள் அவ்வளவு அங்கதங்கள் இருக்கிறது. அவர்கள் வறுமையில் சோற்றுக்கு வழி இல்லாமல்தான் இருக்கிறார்கள்; ஆனாலும், அவர்களுக்குள் ஒரு நையாண்டி இருக்கிறது. அவர்கள் அன்றாடங்களுக்குள் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. சிலுவைராஜின் பால்யத்திலிருந்து விரியும் நாவல் பின்னால் வரும் வாழ்வு முழுவதையும் அதே பால்யத்தின் வெகுளித்தனத்துடனும் மாசடையாத மனசாட்சியுடனும் பரிசீலிக்கிறது. கிராமத்தில் விளையாட்டுத்தனமாக வளரும் சிறுவன் சிலுவை, மிலிட்டரி தந்தையிடம் அடி வாங்குகிறான். பள்ளியிலும் அடி. ராக்கம்மாப் பாட்டியின் கதைகள் அவனை அணைத்துக்கொள்கின்றன.
சிலுவைராஜ் சாதாரண மனிதன் இல்லை; அவனது தேர்ந்த ரசனை, விரிந்த வாசிப்பு, தன்னெழுச்சியாய் எழும் கூர்மையான பார்வை, சதா துடிதுடிக்கும் மனசாட்சி போன்றவற்றால் நம் மனதில் ஆழப் பதிகிறான்.
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும் – பால் ஃப்ராலிட்ச்
பெண் விடுதலை, கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய பேச்சுகளில் தவிர்க்க முடியாத பெயர் ரோசா லக்சம்பர்க். லெனினின் சமகாலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்தவர். ஒரு புரட்சிகர இயக்கத்தை கட்டமைப்பதற்காக தன் உழைப்பையும் பயணத்தையும் செலவு செய்தவர். அவரை வெட்டி கொலை செய்து சாக்கடையில் போட்டுள்ளார்கள் என்றால், அந்தளவு அவர்கள் பணி இருந்திருக்கிறது. இந்த புத்தகத்தை எல்லா இளைஞர்களும், குறிப்பாக பெண்கள் படிக்க வேண்டும் என்று நான் சொல்வேன். தமிழில் கொற்றவை மொழிபெயர்த்துள்ளார்.