No menu items!

தமிழ்நாட்டில் கோவில் சொத்துகள் கொள்ளையா? – மோடி பேசியது சரியா?

தமிழ்நாட்டில் கோவில் சொத்துகள் கொள்ளையா? – மோடி பேசியது சரியா?

தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்களின் நிர்வாகத்தை அரசு கையில் எடுக்க முடியுமா என்றும், இந்திய பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி இதனை பேசியுள்ளார். ‘தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத் துறையை ஒழிப்பதுதான் என் முதல் பணியாக இருக்கும்’ என்று முன்னதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு எதிர் தரப்பினர் பதில் என்ன? இது தொடர்பாக ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு திராவிடர் நட்பு கழகத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா அளித்த பேட்டி இங்கே.

கோயில்கள் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்பவர்கள், இந்து சமய அறநிலையத் துறை வேண்டாம் என்பவர்கள், அரசின் வேலை சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, மின்சாரம் வழங்குவது, சாலை போடுவது போன்ற அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி பேணுவதுதான்; மத விவகாரங்களில் அரசு தலையிடக் கூடாது என்கிறார்கள். உங்கள் பதில் என்ன?

தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய கோவில்கள் மன்னர்களால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக சேர, சோழ, பாண்டிய மன்னர்களாலும் பிற்காலத்தில் நாயக்க மன்னர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது. மன்னர்கள் எப்படி இந்த கோயில்களை உருவாக்கினார்கள்? அதற்கான பணம் அவர்களுக்கு எங்கேயிருந்து வந்தது? வரியாக வசூலிக்கப்பட்ட மக்களின் பணம் அரசு கருவூலத்தில் சேர்ந்து, அதைக் கொண்டுதான் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்களுக்கு இருக்கும் சொத்துகள், நிலம், நகை எல்லாம்கூட மக்கள் கொடுத்ததுதான். பெரும்பான்மை நிலங்கள் மக்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கி கோவிலுக்கு கொடுக்கப்பட்டது. ஆக கோவில் உருவானது மக்கள் காசில்தான், கோவிலின் சொத்துகளும் மக்களுடையதுதான். ஆக கோவிலின் முழு உரிமை மக்களைத்தான் சேரும்.

மன்னர்கள் காலத்தில் கோவில்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. மன்னர்கள் காலம் முடிந்து இப்போது நடப்பது மக்களாட்சி. எனவே, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு கட்டுபாட்டில் கோவில்கள் உள்ளன.

மக்களின் சொத்து என்றால் மக்களிடமே கொடுத்துவிட வேண்டியதுதானே; இந்து மதத்தினருக்கு சொந்தமான கோயில்கள் அந்த மத மக்களிடம் இருப்பதுதானே சரியானது என்பதுதான் பாஜகவினர் வாதமாக இருக்கிறது?

எப்படி? யாரிடம் கொடுப்பது? பொதுப் போக்குவரத்து மக்களுடையதுதான். அதற்காக மக்களிடைமே கொடுத்து நீங்களே நிர்வாகம் செய்துகொள்ளுங்கள், பராமரித்துக்கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட முடியுமா? இல்லைதானே, அதுபோல்தான் மக்களின் சொத்துக்களான கோவில்கள் இப்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தால் நிர்வாக செய்யப்படுகிறது, பராமரிக்கப்படுகிறது.

இன்னொன்று, இந்து சமய அறநிலையத் துறை இருக்கக்கூடாது என்பவர்கள், இந்த துறை ஏன் உருவானது? உருவாக்கியது யார்? என்று இதற்கு பின்னால் இருக்கும் வரலாற்றையும் பார்க்க வேண்டும். இந்த துறை உருவாக்கப்பட்டு 200 வருடங்கள் ஆகிறது. முதலில் 1810ஆம் ஆண்டு பிரிட்டீஷார் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. 1863இல் அது இன்னும் மேம்படுத்தப்பட்டது.

மத விவகாரங்களில் தலையிடக் கூடாது என்கிறீர்கள்; சரி, அதில் பிரச்சினை வந்தால் அரசு தலையிட்டுதானே ஆகவேண்டும். உங்களுக்கும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கும் பிரச்சினை. அவர் காவல்துறையில் போய் புகார் தெரிவிக்கிறார் என்றால் காவல்துறை வரத்தானே செய்யும். எங்கள் குடும்ப விவகாரத்தில் நீங்கள் தலையிடக்கூடாது என்று சொல்ல முடியுமா? அப்படித்தான், கோவில்களில் நிறைய பிரச்சினை உள்ளதாக உண்மையான பக்தர்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில்தான் அரசு தலையிட்டது. கோவில்களில் நிறைய ஊழல்கள் நடக்கிறது, கொள்ளை நடக்கிறது, கொலை நடக்கிறது என்று பக்தர்கள் போய் பிரிட்டீஷ் அரசாங்கத்திடம் புகார் கொடுக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கினார்கள். பின்னர் படிப்படியாக அது செழுமைபடுத்தப்பட்டது.

அன்றைய சென்னை மாகாணத்தில் 1920இல் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. அப்போது மீண்டும் பக்தர்கள் கோயில்களில் ஊழல் நடப்பதாக புகார்களுடன் வந்து நின்றார்கள். அதனால், நீதிக்கட்சி அரசாங்கம் ஒரு குழு அமைத்தது. அந்த குழுவில் இரண்டு பேர் பிராமணர்கள். அந்த குழு அறிக்கை அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை அரசு உருவாக்கியது.

சென்னை மாகாணத்தில் நடந்தது போலவே இந்தியா முழுவதும், ஆங்காங்கே கோயில் நிர்வாகத்தை கையில் வைத்திருந்தவர்கள் செய்த ஊழல் தொடர்பாக பக்தர்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து ஒன்றிய அரசு 1920இல் சிபி ராமசாமி ஐயங்கார் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்த குழு இந்தியா முழுவதும் பயணம் செய்து கோவில்களை பார்த்தது. அந்த குழு தாங்கள் பார்த்ததை அறிக்கையாக கொடுத்தபோது சிபி ராமசாமி ஐயங்கார் சொன்னது என்னவென்றால், ‘இந்து சமய அறநிலையத்துறை இல்லையென்றால் கோவில்களில் அறமே இருக்காது’ என்பதுதான்.

மேலும், ‘கோவில்கள் மிக மோசமான நிலைமையில் இருக்கிறது, கோவில்களில் அநாகரிகமான செயல்கள் நடக்கிறது, கொலை – கொள்ளை நடக்கிறது, குருக்களுக்கு மந்திரமே தெரியவில்லை, சமஸ்கிருதம் தெரியவில்லை, ஆகமம் தெரியவில்லை, சாமி நகை குருக்கள் ‘ஆத்துல’ இருக்கிறது. எனவே, எந்தந்த மாநிலங்களில் எல்லாம் இந்து சமய அறநிலையத்துறை இல்லையோ அங்கெல்லாம் தயவு செய்து அந்தத் துறையை ஆரம்பித்துவிடுங்கள்’ என்றெல்லாம் அறிக்கையில் சிபி ராமசாமி ஐயங்கார் குறிப்பிட்டிருந்தார். அதில் மிக முக்கியமான மாநிலம், உத்தரபிரதேசம். அதன் பின்னர்தான், அவரது அறிக்கையின் அடிப்படையில் இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது.

ஆக, தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இந்து சமய அறநிலையத்துறை உள்ளது. தமிழ்நாட்டில் இந்த துறையை கலைக்க வேண்டும் என்று சொல்லும் மோடியும் பாஜகவினரும் அண்ணாமலையும், அவர்கள் ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்களிடம் சொல்லி ஏன் அந்த துறையை கலைக்கவில்லை? அங்கெல்லாம் செல்லாமல் தமிழ்நாட்டில் இதை வலியுறுத்துவதற்கு அண்ணாமலைக்கும் மோடிக்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது.

மோடிக்கும் அண்ணாமலைக்கும் பின்னால் இருந்து, இந்த சட்டம் வேண்டாம், இந்து சமய அறநிலையத்துறையே இருக்கக்கூடாது என்பவர்களின் நோக்கம் கோவில்களின் பல லட்சக்கணக்கான சொத்துகள்தான். ஆம், இந்து சமய அறநிலையத்துறை இருக்கக்கூடாது என்று சொல்பவர்கள், ஆலய மீட்புக் குழுவினர் ‘ஆட்டைய’ போடணும்னு நினைக்கிறது கோவில்களின் பல லட்சம் கோடி சொத்துகள், நிலங்கள் மற்றும் அந்த கோயில்களில் இருக்கும் தங்கம், வைரம். இவை எல்லாம் அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால் அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. எனவே, கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்கிறார்கள்.

சரி, இந்த கோரிக்கையை முன்வைக்கும் மோடிக்கும் அண்ணாமலைக்கும் பின்னால் இருக்கும் அந்த அரசியல் என்ன?

பாஜகவால் தமிழ்நாட்டில் மதவெறியை தூண்டவே முடியாது. தமிழ்நாடு ஆன்மிக மண்தான்; இங்கே இருக்கும் 99 சதவிகித மக்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அந்த இறை நம்பிக்கையை அவர்கள் அரசியலாக மாற்றவில்லை. ஆன்மிகத்தையும் கடவுள் நம்பிக்கையையும் அரசியலோடு கலக்கக்கூடாது என்கிற சிந்தனை தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளது. அதனால்தான், தமிழ்நாட்டை பெரியார் மண் என்றும் சொல்கிறோம். இதனால், இந்து சமய அறநிலையைத்துறையை கலைத்துவிட்டு, கோவிலுக்குள் சென்று, கோவில்களில் அரசியல் பரப்புரை செய்து, மத அரசியலை புகுத்தி, மதவெறியை உருவாக்கிவிட வேண்டும் என்று பாஜககாரர்கள் திட்டமிடுகிறார்கள்.

ஏற்கெனவே, ஒரு கோவிலில் மோடிஜி பேசியை பரப்புரை செய்துள்ளார்கள். இப்படி கோவிலுக்குள் செய்வது ஆகம விதி மீறல்.

கோவில்களில் ஊழல் இருந்ததால் இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், இப்போது இந்து அறநிலையத்துறையில் ஊழல் உள்ளது; கோவில்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. அதனால்தான் அந்தத் துறையை கலைக்கச் சொல்கிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள்?

வாய் வார்த்தையாகத்தானே சொல்கிறார்கள். அதையே அறிக்கையாக கொடுப்பார்களா? இங்கே, இவ்வளவு பணம் காணாமல் போயுள்ளது என்று அறிக்கையாக கொடுக்கச் சொல்லுங்கள். இந்து சமய அறநிலையத் துறையில் ஊழல் நடந்துள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு போடச் சொல்லுங்கள். அதைச் செய்யாமல் வாய் வார்த்தையாகவே அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதற்கு காரணம், மக்கள் மத்தியில் மதவெறியை தூண்டுவதுதான் நோக்கம்.

இந்து சமய அறநிலையத்துறை ஏன் தேவை என்பதற்கு நான் ஒரு சமீப உதாரணம் சொல்கிறேன். சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லை; தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தீட்சிதர்கள்தான் அந்த கோயிலில் குருக்களாகவும் இருக்கிறார்கள், கோயில் நிர்வாக கமிட்டியிலும் இருக்கிறார்கள். கமிட்டியில் இருப்பவர்கள் தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் 1000 ரூபாய் அபராதம் கட்டச்சொல்லிவிட்டு, மீண்டும் கமிட்டியில் சேர்த்துக்கொள்வார்கள்.

இப்போது அரசாங்கம் சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்கைக் கேட்கிறது. கணக்கு கொடுக்க முடியாது என்று தீட்சிதர்கள் சொல்கிறார்கள். உங்களிடம் அரசாங்கம், நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று கணக்கு கேட்டால் கொடுக்க முடியாமல் இருக்க முடியுமா? ஒரு பிரஜை, உண்மையான தேசபக்தர் அரசாங்கம் கேட்டால் கணக்கு கொடுப்பார்கள்தானே. ஆனால், தீட்சிதர்களால் கொடுக்க முடியாது என்று சொல்ல முடிகிறது.

ஏன் அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள் என்பதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது.

பல நூறு ஆண்டுகளாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இடையே 2009 – 2014 ஐந்து வருடங்கள் மட்டும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தது. பொதுவாக ஒரு நிர்வாகம் கைமாறும்போது வரவு – செலவு எவ்வளவு, கையிருப்பு எவ்வளவு என கணக்கு கொடுப்போம் இல்லையா? அதுபோல், 2009இல் கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்கும்போது தீட்சிதர்களிடம் அரசாங்கம் கணக்கு கேட்டது. அதற்கு தீட்சிதர்கள் ஒரு கணக்கு கொடுத்தார்கள். ‘கோயிலின் வருட வருமானம் 33 ஆயிரத்து 199 ரூபாய். எல்லா செலவுகளும் போக கையிருப்பு 193 ரூபாய்’ என்பதுதான் அவர்கள் கொடுத்த கணக்கு.

இதுபோல், 2014இல் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்களிடம் திரும்ப ஒப்படைக்கும்போது அரசாங்கம் கொடுத்த கணக்கு என்ன தெரியுமா? அந்த ஐந்து வருடங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கிடைத்த வருமானம், 8 கோடியே 15 லட்சத்து 24 ஆயிரத்து 537 ரூபாய். 17 லட்சம் ரூபாய் ‘பிக்ஸட் டெபாசிட்’, அது தவிர்த்து தங்கம், வைரம் எல்லாமே இருக்கிறது.

தீட்சிதர்கள் கணக்குப்படி இந்த ஐந்து வருடங்களில் 1000 ரூபாய்கூட வந்திருக்காது. 1000 ரூபாய் எங்கே இருக்கிறது, 8 கோடி எங்கே இருக்கிறது?

தீட்சிதர்கள் ஏன் கணக்கு கொடுக்கமாட்டேன் என்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறதா? மடியில் கணம் இல்லையென்றால் கணக்கு கொடுத்துவிடலாமே. கணக்கு கொடுக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் தப்பு நடக்கிறது என கோஷம் போடும் ‘இந்து ஆலய மீட்புக்குழு’, கணக்கு கொடுக்க மறுக்கும் தீட்சிதர்களுக்கு எதிராக ஏன் வாயே திறப்பதில்லை? 

இந்து சமய அறநிலையத்துறை சரியாக இருக்கிறதா இல்லையா? ஏன் இந்தத் துறை தேவை என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  ஐந்து வருடம் 8 கோடி வருமானம் வந்த அந்த கோயிலில் 2014 – 2023 இந்த ஒன்பது வருடங்களில் எவ்வளவு இருக்க வேண்டும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும்.

கிறிஸ்தவர்கள் சர்ச் அவர்களிடமே இருக்கிறது, இஸ்லாமியர்கள் மசூதிகள் அவர்களிடமே இருக்கிறது; இந்துக்கள் கோயில்களை மட்டும் அரசு எடுத்துக்கொள்வது சரியா என்பது பாஜகவினரின் இன்னொரு கேள்வி?

அவர்களது இந்த தகவலே பொய்யானது. இஸ்லாமிய மசூதிகள் அரசு கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்து கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்வதுபோல், இஸ்லாமிய மசூதிகளை வக்பு வாரியம் நிர்வாகம் செய்கிறது. இந்த வக்பு வாரியம் இந்தியா முழுவதும் இருக்கிறது. இதை உருவாக்கியதே ஒன்றிய அரசுதான். இந்து கோயில்களில் கொலை, கொள்ளை, ஊழல்கள் நடந்து அது புகாரானதுபோல், மசூதிகளிலும் இவையெல்லாம் நடந்து புகாரானது. இதனால் அரசு அதன் நிர்வாகங்களில் தலையிட்டது.

ஆனால், கிறிஸ்தவர்களின் சர்ச்சுகள் மட்டும் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அவற்றை உருவாக்கிய டிரஸ்ட்களால்தான் நிர்வகிக்கப்படுகிறது. அதற்குக் காரணம் இந்து கோயில்களிலும் இஸ்லாமிய மசூதிகளிலும் இருந்து புகார்கள் குவிந்தது போல் இதுவரை சர்ச்சுகளில் இருந்து வரவில்லை. சர்ச்சுகளில் பிரச்சினை இருப்பதாக மக்கள் புகார் செய்தால் அரசு அதிலும் தலையிடத்தான் செய்யும், அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இதேபோல் பாஜகவினரின் இன்னொரு குற்றச்சாட்டு திராவிடர் கழகம் உட்பட கடவுள் நம்பிக்கையற்றவர்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய கடவுள்களை, அவர்களது நம்பிக்கைகளை விமர்சிப்பதில்லை; இந்து கடவுள்களை, நம்பிக்கைகளை மட்டும் விமர்சிக்கிறார்கள் என்பது. நீங்கள் இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பது ஏன்?

சட்டம் எங்களை இந்துக்கள் என்றுதானே சொல்கிறது. எங்களுக்கு எந்த மதமும் வேண்டாம் என்கிறோம். ஆனால், சட்டம் அதை அங்கீகரிக்க மறுக்கிறதே. அவர்களது பலத்தை பயன்படுத்தி, மதமே வேண்டாம் என்பவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்துவிடச் சொல்லுங்கள். நாங்கள் போய்விடுகிறோம்.

இப்போது பிறப்பால் நாங்கள் இந்துகள்தான் என்னும் நிலையில்  நாங்கள் இருக்கும் இடத்தில் ஒரு பிரச்சினை இருப்பதை பற்றி பேசாமல் எப்படி பார்த்துக்கொண்டிருக்க முடியும். இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது. ஒரு காலத்தில் கோயில் இருக்கிற தெருவில்கூட யாரையும் விடமாட்டோம் என்று தடுத்து வைத்திருந்தார்கள். அது மட்டுமா, பார்ப்பனர் அல்லாதவர்களை படிக்கவே அனுமதிக்காமல் இருந்தார்களே. சாஸ்திரத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் இது இருந்துகொண்டே இருக்கிறது. இப்படி இருப்பதை பார்க்கும் ஒரு மனிதனால் எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும். நாங்கள் கேள்வி கேட்டதால்தானே இப்ப இருக்கிற கொஞ்ச உரிமைகளாவது கிடைத்தது.

‘கோயில்களை மீட்போம்; அரசாங்கமே வெளியேறு’ என்று சொல்றவா எல்லாம், ஏன் இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமை பற்றி பேசமாட்டேன் என்கிறார்கள். தீண்டாமை இருக்கும்வரை நாங்கள் பேசிக்கொண்டேதான் இருப்போம். தீண்டாமை இனியும் இருக்க வேண்டும்; அதன் பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறவாகளுக்குதான் நாங்கள் பேசுவதை கேட்க கஷ்டமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...