No menu items!

தமிழரின் சாதனை! – உலகம் ஏற்றுக்கொண்ட முதல் இந்திய மருந்து…

தமிழரின் சாதனை! – உலகம் ஏற்றுக்கொண்ட முதல் இந்திய மருந்து…

அலெக்ஸாண்டர் ஃபிளம்மிங் கண்டுபிடித்த ‘பென்சிலின்’ மருந்து உலக சரித்திரத்தில் இன்று வரை கொண்டாடப்படும் ஒரு பெரும் சாதனை. லட்சோப லட்சம் மனித உயிர்களை இன்று வரையிலும் இந்த மருந்துதான் காப்பாற்றி வருகிறது. அதுபோன்ற ஒரு கண்டுபிடிப்பாக, மருத்துவ துறையில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வரும் கண்டுபிடிப்பு, ‘எக்ஸ்ப்லைஃபெப்’ (Exblifep) எனும் மருந்து. சமீபத்தில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் (FDA), இதற்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறது. இந்த மருந்தை கண்டுபிடித்திருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதுதான் இதில் ட்விஸ்ட்!

யார் அவர்? இந்த மருந்தில் அப்படி என்ன விசேஷம்?

கொஞ்சம் சிக்கலான இந்த அறிவியலை நாம் புரியும் படி எளிமையாக இங்கே விளக்குகிறார், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியரும் உயிர் தொழில்நுட்பத்துறையில் மண்புழுவைக் கொண்டு உறுப்புகள் மறுஉருவாகாக ஆராய்ச்சி செய்து வருபவருமான, சுதாகர் சிவசுப்பிரமணியம்.

இனி சுதாகர் சிவசுப்பிரமணியம்…

‘நாம் ஒரு நிலம் வாங்கினால் அதன் எல்லைகளை அறிய கல் நடுவோம். விபரத்தை பத்திரமாக எழுதி வைத்துக்கொள்ளுவோம். பட்டாவும் போட்டுக்கொள்வோம். ஆனால், நாய்கள் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட இடத்தின் எல்லைகளை தன் சிறுநீரினால் பதிவு செய்கின்றன. வேறு நாய்கள் எல்லையைக் கடந்து வந்தால், அங்கு நாய்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட இடத்தை தக்கவைக்க மூர்க்கத்தனமாகச் சண்டையிடத் தொடங்கிவிடும்!

நுண்ணுயிரிகளுக்கு இடையேயும் இந்த எல்லைத் தகராறு உண்டு. ஒரு துளி இரத்தம் தரையில் விழுந்தால் அது நுண்ணுயிரிகளான பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு விருந்து. அதனில் ஒரு பாக்டீரியம் முதலில் வந்து அமர்கிறது என வைத்துக்கொள்வோம். சாப்பாடு கிடைத்த மகிழ்ச்சியில் அது பல்கிப் பெருகத் தொடங்கும். கூடவே அவை உயிர்க் கொல்லியான ஆன்டிபயாட்டிக்கை ஒன்றை உற்பத்தி செய்கிறது எனவும் வைத்துக்கொள்வோம். அந்த இரத்தத் துளி இந்த பாக்டீரித்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். பிற நுண்ணுயிரிகள் இந்த இரத்தத்தில் வந்து அமர்ந்து அங்குள்ள இரத்தத்தைச் சாப்பிட முடியாது. காரணம் அங்குள்ள ஆன்டிபயாட்டிக் இதர நுண்ணுயிரிகளை வளர விடாது. அதனால் தான்மட்டும் அந்த இரத்தத்துளியை அந்த பாக்டீரியா மட்டுமே உண்டுமகிழ்கின்றன. மேலும் தன் இனத்தைப் பெருக்கிக்கொள்கின்றன!

1919 முதல் உலகப் போர் மூண்டது. இந்த போரில் காயமடைந்தவர்களில் பெரும்பாலான வீரர்கள் நுண்ணுயிரிகளினால் ஏற்படும் நோய் தொற்றால் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். இதைப் போல் இந்த காலகட்டத்தில் குழந்தை பிறப்பிற்கு பின்னர் நுண்ணுயிர் தொற்றால் பெரும்பாலான தாய்மார்கர்களும் மாண்டு வந்தனர்.

1928ஆம் ஆண்டு இங்கிலாந்து மருத்துவர் அலெக்ஸாண்டர் பிளமிங்தான் முதன் முதலில் ஆன்டிபயாட்டிகை கண்டறிந்தார். அவர் கண்டுபிடித்த ஆன்டிபயாட்டிக்கின் பெயர் ‘ பென்சிலின்’. இந்த கண்டுபிடிப்பிற்கு பிறகு வந்த இரண்டாம் உலகப் போரின் போது காயத்தால் ஏற்படும் உயிரிழப்பு பெருமளவு கட்டுப்படுத்தப் பட்டது!

பின்னர் 1946இல் ‘பென்சிலின்’ அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தடைந்தது. இதன் பின்னர் குழந்தை பிறப்பிற்கு பின்னர் தாய்மார்களுக்கு ஏற்படும் நுண்ணுயிர் தொற்றை எளிதாக குணப்படுத்த முடிந்தது. 1950ஆம் ஆண்டு 254 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை இன்று 804 கோடியாக உயர்ந்துள்ளதற்கு இந்த கண்டுபிடிப்பு முக்கிய காரணம் எனலாம்.

இதன் பின்னர் நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபயாட்டிக்கள் ஏராளம் கண்டறியப்பட்டன. அவைகளில் 258 ஆன்டிபயாட்டிக்கள் நுண்ணுயிரிகளால் வரும் நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன.

சுமார் 77 ஆண்டுகளாக நோய் தொற்றுக்களைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆன்டிபயாட்டிக்களை பயன்படுத்தி வருகிறோம். இருந்தாலும் பல்வேறு காரணங்களால் புதிய ஆன்டிபயாட்டிக்களின் தேவைகள் அதிகரித்தே வருகின்றன.

இந்த ஆன்டிபயாட்டிக்களையும் சேர்த்து மொத்தம் 4383 மருந்துகள் இன்றைய உலகில் பயன்பாட்டில் உள்ளன. இவற்றைத்தான் பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால் இந்த மருந்துகளில் ஒன்று கூட இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்டவை இல்லை! இவை அனைத்தும் வெளிநாடுகளில் கண்டறியப்பட்டவை. இந்த மருந்துகளைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம்.‌

லக்னோவில் மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ஆர்மெலோக்சிபன் (Ormeloxifene) என்ற மருந்தைக் கண்டுபிடித்தது. இந்த மருந்து கருத்தரிப்பைத் தடுக்கப் பயன்படுகிறது. 1992ஆம் ஆண்டு ஆர்மெலோக்சிபன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், இந்த மருந்து இந்தியாவில் மட்டுமே விற்கப்பட்டு வருகிறது. உலகில் பிற பகுதிகளில் இந்த மருந்து பயன்பாட்டில் இல்லை.

2024 ஜனவரி மாதம் எக்ஸ்ப்லைஃபெப் (Exblifep) என்ற மருந்து ஐரோப்பாவில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த மருந்து பல வகையான சிறுநீர் குழாயில் பாக்டீரியாவினால் ஏற்படும் தொற்று (Urinary Tract Infections – cUTI) மற்றும் பாக்டீரியாவினால் நுரையீரலில் ஏற்படும் நிமோனியா (Pneumonia) போன்ற நோயைக் குணப் படுத்துகிறது. இந்த மருந்து சிறுநீர் குழாய் தொற்றுக்கு வழக்கமாகக் கண்டுபிடிக்கப்படும் மருந்தைவிடச் சிறந்ததாக உள்ளது. மேலும் இந்த மருந்துதான், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அனைத்து வெளிநாடுகளிலும் விற்பனைக்கு வரும் முதல் மருந்து!

டாக்டர் U.P. செந்தில் குமார் என்ற ஆராய்ச்சிளர்தான் எக்ஸ்ப்லைஃபெப் (Exblifep) மருந்தைக் கண்டுபிடித்தார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள உடையாம்பாளையம் என்னும் அழகிய கிராமத்தில் பிறந்தவர்.

இவர் கோபி என்று அழைக்கப்படும் கோபிசெட்டிபாளையத்தில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட அரசு உதவிபெறும் வைர விழா மேல்நிலைப் பள்ளியில் படித்தவர். பின்னர் அங்குள்ள கோபி கலைக் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். இந்த கல்லூரி கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இவர் பாரதியார் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் மாணவனாகத் தேர்வானார்!

பின்னர் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை வேதியியல் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். அந்த நேரத்தில்தான் பேராசிரியர் R. ஜெயராமன் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி அமெரிக்கன் கல்லூரியில் சில காலம் பணியாற்றினார். பேராசிரியர் R. ஜெயராமனிடம் செந்தில் குமார் முதுகலைப் பட்டப் படிப்புக்கான ஆராய்ச்சி பயிற்சி பெற்றார். இந்த பயிற்சியின் போது சொல்லும் படியாக புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவது அரிது. ஆனால், இவர் மென்சால்டிகைடு வகையான ஒரு புதிய வேதிப்பொருளை உருவாக்கினார். பேராசிரியர் இந்த கண்டுபிடிப்பை இந்தியன் வேதியியல் பத்திரிகையில் 1987ஆம் ஆண்டு வெளியிட்டார்.

பொதுவாக இது மாதிரி இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டால் பல்கலைக் கழகங்கள் இப்போது PhD பட்டம் கொடுக்க தயாராக உள்ளன! எனவே முதுகலைப் பட்டப் படிப்பின் போதே செந்தில் குமார் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராக உருவெடுத்துவிட்டார் எனலாம்.

செந்தில் குமார் முதுகலைப் படிப்பை முடித்த நேரம் பேராசிரியர் R ஜெயராமனுக்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது. எனவே, பேராசிரியர் R ஜெயராமன் அமெரிக்கன் கல்லூரியிலிருந்து விடைபெற்று பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு பேராசிரியராக செல்கிறார்.

இதனிடையே, U.P. செந்தில் குமார் முதுகலைப் பட்டப் படிப்பின் இறுதியில் நெட் (நெட்) என அழைக்கப்படும் தேசிய தகுதித் தேர்வு (National Eligibility Text (NET)) மற்றும் கேட் (GATE: Graduate Aptitude Test in Engineering) போன்ற தேர்வுகளில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார். கேட் (GATE) தேர்வில் இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்தார்.

NET தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆராய்ச்சி செய்ய முதல் இரண்டு வருடத்திற்கு மாதம் 37 ஆயிரம் வழங்கப்படுகிறது. அடுத்த மூன்று வருடத்திற்கு வருடத்திற்கு 42 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்துடன் வீட்டு வாடகை மற்றும் இதர செலவுக்கும் பணம் வழங்கப்படுகிறது. ஆர்வமாக விரும்பிப் படிக்கும் மாணவ மாணவிகள் இந்த தேர்வில் வெற்றி பெறுவது எளிது.

கேட் (GATE) மற்றும் நெட் (NET)போன்ற தகுதித் தேர்வுகளை வெற்றிகரமாக சந்தித்தால் இந்தியாவில் எந்த ஆராய்ச்சி கூடத்திலும் PhD பட்டப் படிப்பைத் தொடர வாய்ப்பு கிடைக்கும். பல்கலைக் கழகங்களை விட இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் (Indian Institute of Technology (IIT). இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (IISc), மத்திய பல்கலைக் கழகங்கள்) அதிக ஆய்வுக்கூட மற்றும் பொருளாதார வசதிகள் கொண்டவை. எனவே இவற்றில் PhD பட்டம் பெற்றால் மிகச்சிறந்த எதிர்காலத்திற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதனால், ஜஜடி மும்பை மற்றும் ஜஜடி சென்னை, BARC, TIFR என சென்ற இடமெல்லாம் செந்தில் குமாருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், இவருக்கு எங்கும் செல்ல மனமில்லை. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும், தீயான ஆர்வத்தை தன்னுள்ளே விதைத்த குருவான பேராசிரியர் R ஜெயராமனிடமே PhD பட்டப் படிப்பை அர்ப்பணிப்போடு தொடர்ந்தார்.

PhD பட்டப் படிப்பின் போது நைட்ரசோ கெட்டிரோ சைக்ளிக் சேர்ம வகையைச் சார்ந்த வேதிப் பொருட்களை உருவாக்க ஆராய்ச்சி செய்தார். இவை புற்றுநோயைக் குணப்படுத்த வல்ல வேதிப் பொருட்களாகும். இந்த ஆராய்ச்சியில் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு வேதிப் பொருட்களை உருவாக்கும் கலையை பேராசிரியர் R ஜெயராமனிடமும் உடன் ஆராய்ச்சி செய்த நண்பர்களிடமும் கற்றுத் தேர்ந்தார். பின்னர் வெற்றிகரமாக ஆராய்ச்சி பணியை முடித்தார். PhD பட்டமும் பெற்று டாக்டர் U.P. செந்தில் குமார் ஆனார்.

அடுத்து குஜராத் மாநிலத்தில் உள்ள டாரண்ட் ஃபார்மா (Torrent Pharma) என்ற நிறுவனத்தில் சில ஆண்டுகள் மருந்து ஆராய்ச்சியாளராக பணியாற்றினார்.‌ பின்னர் டாக்டர் செந்தில் குமாரின் திறமையைப் பார்த்த ஆர்க்கிட் ஃபார்மா (Orchid Pharma Ltd) என்ற நிறுவனம் இவரை தன்னகத்தே இணைத்துக் கொண்டது. இந்த நிறுவனம் சென்னைக்கு அருகே உள்ள ஆலத்தூரில் உள்ளது.

இந்த நிறுவனத்தில் டாக்டர் செந்தில் குமார் நுண்ணுயிரிகளை அழிக்கப் பயன்படும் மருந்தைக் கண்டறியப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார். இவருக்கு ஆன்டிபயாட்டிக் எனப்படும் நுண்ணுயிர் கொல்லிகளின் உருவ அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் சிறந்த நிபுணத்துவம் வந்தது.

உலகமெங்கும் 258 ஆன்டிபயாட்டிக்கள் பயன்பாட்டில் உள்ளன என அறிவோம். இருந்தாலும் குணப்படுத்த முடியாத நுண்ணுயிர்களின் தொற்றால் இப்போதும் உலகமெங்கும் ஆண்டுக்கு சுமார் 12.7 லட்சம் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதற்குக் காரணம் நோய்த் தொற்றை உருவாக்கும் பாக்டீரியா நோயாளிகள் சாப்பிடும் ஆன்டிபயாட்டிக்கை செயலிழக்கச் செய்யும் வல்லமை பெற்றுவிடுவதுதான். அதாவது பாக்டீரியாவை நோக்கி நாம் ஏவுகணை வீசினால், அவை ஏவுகணைகளைக் கண்டறிந்து அழிக்கும் ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது.

ஆண்டிபயாடிக்கை அழிக்க வல்ல ஏவுகணை வேறொன்றுமில்லை பீட்டா லேக்டமேஸ் (Beta lactamase) என்ற நொதிதான். இந்த நொதியைச் செயலிழக்கச் செய்யும் மருந்தை உருவாக்கினால் மனிதக் குலத்திற்கு பேருதவியாக இருக்கும். காரணம் பாக்டீரியாக்களை இந்த மருந்தைக் கொண்டு எளிதில் அழித்து விடலாம்.

டாக்டர் செந்தில் குமாருக்கு இதுவரை கண்டுபிடித்த ஆன்டிபயாட்டிக்களைப் பற்றி நன்கு தெரியும். அதனால் தான் இதுவரை கற்றுத் தெரிந்தவற்றின் அடிப்படையில் கற்பனையில் இந்த நொதியை செயலிழக்க செய்யும் வேதிப் பொருளை வடிவமைத்தார். பின்னர், “இந்த வேதிப்பொருள் பீட்டா லேக்டமேஸ் என்ற இந்த நொதியைச் செயலிழக்கச் செய்யுமா?” எனக் கணினியின் துணை கொண்டு கணக்கிட்டுப் பார்த்தார். திட்டம் கச்சிதமாக இருப்பதை உணர்ந்தார். பின்னர், “கற்பனையில் வடிவமைத்த இந்த வேதிப் பொருட்களை உருவாக்க முடிந்தால் அது ஒரு சிறந்த மருந்தாக இருக்கும்” என முடிவு செய்தார்.

பின்னர் கற்பனையில் சஞ்சரித்த அந்த வேதிப்பொருளை உருவாக்க ஆய்வுக்கூட வேலையைத் தன் குழுவுடன் துவங்கினார். எக்ஸ்ப்லிபன் என்ற இந்த மருந்தை 2005ஆம் ஆண்டு இவரது ஆராய்ச்சிக் குழு உருவாக்கியது. வியக்கும் வண்ணம் இந்த மருந்தின் பாக்டீரியாக்களை அழிக்கும் செயல்திறன் இருந்தது!

பின்னர் இந்த மருந்தை எலி போன்ற விலங்குகளுக்குக் கொடுத்துப் பார்த்தார்கள். விலங்குகளுக்கு இந்த மருந்தால் எந்த பாதிப்பும் இல்லை எனக் கண்டறிந்தனர்.

பின்னர் 20 மனிதர்களுக்குக் கொடுத்துப் பார்த்தனர். இதனை முதல் கட்ட சோதனை (Phase I) என அழைப்பார்கள். முதல்கட்ட சோதனையில் இந்த மருந்தால் மனித உடலுக்கும் எந்த தீங்கும் ஏற்பட வில்லை எனக் கண்டறிந்தனர்.

அடுத்து 200 மனிதர்களுக்கு எக்ஸ்ப்லிபன் மருந்தைக் கொடுத்துப் பார்த்தார்கள். இதனை இரண்டாம் கட்ட சோதனை (Phase II) என்பார்கள். இந்த சோதனையிலும் யாருக்கும் இந்த மருந்தால் பாதிப்பில்லை எனத் தெரிந்தது.

மூன்றாம் கட்ட சோதனையாக (Phase III) 2000 பேர்களுக்கு இந்த மருந்தைக் கொடுத்துப் பார்த்தனர். இந்த சோதனையிலும் இந்த மருந்து மனிதர்களுக்கு நன்மையே தவிர, தீமை எதுவும் இல்லை என உறுதியானது.

மேற்கண்ட மூன்று சோதனைகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் செய்து முடிக்கப்பட்டது. டாக்டர் செந்தில் குமாரின் எண்ண அலையில் உதயமாகி, அவரின் கைகளால் உருவம் பெற்ற இந்த மருந்து மனித உடலுக்கு உகந்தது என ஐரோப்பிய மருந்து கட்டுப்பாடு நிறுவனம் தீர ஆய்ந்து ஏற்றுக் கொண்டது. அதனால் இந்த மருந்து பல்வேறு நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி கிடைக்குமளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது.

மேற்கண்ட மூன்று சோதனைகளையும் செய்ய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவாகும்! இந்த பெரும் செலவுகளை செய்ய ‘அலக்ரா’ (Allecra) என்ற ஜெர்மானிய நிறுவனம்தான் முன்னுக்கு வந்தது. பின்னர் இந்த நிறுவனம் அட்வான்ஸ் ஃபார்மா என்ற ஒரு நிறுவனத்திடம் மேற்கண்ட சோதனைகளை ஐரோப்பிய கண்டத்தில் முடிக்க ஒப்பந்தம் செய்தது. இந்த நிறுவனத்திடமே டாக்டர் செந்தில் குமாரால் உருவாக்கப் பட்ட எக்ஸ்ப்லிபன் என்ற மருந்தின் விற்பனை உரிமை இருக்கிறது.

“ஏன் இந்த மூன்று முக்கிய சோதனைகளையும் இந்தியாவில் செய்யவில்லை?” என்ற கேள்வி உங்களுக்கு எழும். என் மனதிலும் இந்த கேள்வியே தோன்றியது. அதுபற்றி டாக்டர் செந்தில் குமாரிடம் கேட்டேன்.

பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவு செய்து மூன்று கட்ட சோதனைகளையும் செய்து முடிக்கத் தகுந்த நிதிவளம் நிறைந்த நிறுவனங்கள் எதுவும் இந்தியாவில் இல்லை என்றார் டாக்டர் U.P. செந்தில் குமார். மேலும் இப்போதுதான் இத்தகைய நிறுவனங்கள் இந்தியாவில் உருவாகி வருகிறது என்றார் டாக்டர் செந்தில் குமார்.

“இந்த மூன்று பரிசோதனைகளில் ஒரு புது மருந்து மனித உடலுக்கு ஏதாவது வகையில் கேடு விளைவிக்கிறது” என்று கண்டறியப் பட்டால் சோதனையில் ஈடுபடும் நிறுவனத்திற்கு சில ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும். அதே வேளையில் அந்த மருந்து அனைத்து சோதனையிலும் மனித உடலுக்குத் தீங்கற்றது என நிரூபிக்கப் பட்டால் சோதனையில் பங்கேற்ற நிறுவனங்கள் நிறைய லாபமீட்ட முடியும்.

பின்னர் அலக்ரா என்ற ஜெர்மானிய நிறுவனம் எக்ஸ்ப்லிபன் என்ற இந்த மருந்தைச் சீனாவில் விற்பனை செய்ய அனுமதி அளித்தது. இந்த வகையில் மட்டும் அலக்ராக்கு 620 கோடி இந்திய ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

அலக்ராவுடனான ஒப்பந்தப்படி ஆர்க்கிட் ஃபார்மாவுக்கு உலக அளவிலான விற்பனையில் ஆறு முதல் எட்டு விழுக்காட்டுப் பங்கு கிடைக்கும்! இதனால் மட்டும் ஆர்க்கிட் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு தோராயமாக 100 முதல் 200 கோடி ரூபாய் வரை வருட வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

மேலும் இந்தியாவில் இந்த மருந்தின் விற்பனையின் முழு உரிமையும் ஆர்க்கிட் நிறுவனத்திடமே உள்ளது. அதனால் ஆர்க்கிட் நிறுவனம் விரைவாக வளர்ச்சி அடையும். இதனால் சென்னையில் உள்ள ஆர்க்கிட் ஃபார்மாவின் பங்குச் சந்தை மதிப்பு 25 %க்கு மேல் வேகமாக உயர்ந்துள்ளது.

கோபியில் வாழ்ந்த விவசாயியான திரு. O.S. பழனிச்சாமி – கண்ணம்மாள் தம்பதியர்தான் 1966ஆம் ஆண்டு டாக்டர் செந்தில் குமாரை பெற்றடுத்தனர். டாக்டர் செந்தில் குமார்-நந்தினி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள்.  முதல் பெண் ப்ரணீதாஸ்ரீ பல் மருத்துவம் பயின்று வருகிறார். இரண்டாவது பெண் குழந்தை ஜெயசிதாஸ்ரீ இப்போது எட்டாவது படித்து வருகிறார்.

டாக்டர் செந்தில் குமார் சமீபத்தில் முருகப்பா குழுமத்தின் மருந்து ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவில் ஆராய்ச்சியாளராக இணைந்திருக்கிறார்.

டாக்டர் செந்தில் குமாரின் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பயணம் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட எளிய மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும் உற்சாகத்தையும் கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

“நாம் கண்டறிந்த மருந்து வெள்ளைக்காரர்களின் இரத்த ஓட்டத்தில் கலக்க வேண்டும், இந்தியாவில் உள்ள என் சகோதர சகோதரிகளுக்கு அந்த மருந்து இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன்” என்று ஆர்க்டிக் ஃபார்மா நிறுவனர் டாக்டர் கே ராகவேந்திர ராவ் ஒரு பேட்டியில் கூறினார், இவர்தான் ஆர்கிட் ஃபார்மாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவை உருவாக்கினார். அவரின் கனவு இப்போது நினைவாகியுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...