No menu items!

மஞ்சுமெல் பாய்ஸ் இருக்கட்டும் குணாவே காப்பிதான் – வைரல் விமர்சகர் சத்யேந்திரன்

மஞ்சுமெல் பாய்ஸ் இருக்கட்டும் குணாவே காப்பிதான் – வைரல் விமர்சகர் சத்யேந்திரன்

கேரளாவில் சக்கை போடு போடுவதுடன் தமிழ்நாட்டிலும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ வெற்றியால் கமலின் ‘குணா’ படமும் 33 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இதனை முன்னிட்டு கமல்ஹாசனும் ‘குணா’ இயக்குநர் சந்தான பாரதியும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படக்குழுவினரை அழைத்து பாராட்டி இருக்கிறார்கள்.

‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்துக்கான இன்ஸ்பிரேசன் என ‘குணா’ மீண்டும் டிரண்டாவது ஒரு பக்கம் இருக்க, ‘குணா’வே இன்னொரு படத்தின் இன்ஸ்பிரேன்சன்தான் என அதிர்ச்சியளிக்கிறார், சினிமா விமர்சகர் சத்யேந்திரன்.

அந்த படம் எது என பார்க்கும்முன் ‘குணா’… ஒரு குட்டி பிளாஷ்பேக்..

  
ஆந்திரத்தின் மலையையொட்டிய இடுக்கு இடுக்கான குறுக்குச் சந்துகளில் உள்ள ஒரு வீட்டின் மாடி… மிக மோசமான தகப்பன்; பெண்களை வைத்து ‘தொழில்’ நடத்தும் அம்மா வரலக்ஷ்மி. இதெல்லாம் தப்பு என்கிற நினைப்புடனும் அந்தத் தப்புக்கு கடவுளைச் சரணடைவதுதான் சரி என்கிற வேண்டுதலுடனும் ஒரு கனவுலகத்தில் சஞ்சரிப்பவன் குணா (கமல்).

‘இந்த பாவச் சகதியில் சிக்கிக்கொண்டிருக்கிற நம்மை ஒரு தேவதை மீட்க வருவாள், அவள் பார்வதிதேவி’ என்று நம்பிக் கொண்டிருக்கிறான். அப்படியொரு சமயத்தில் நாயகியை (ரோஷிணி) பார்க்கிறான். அதுவும் கோயிலில்! தன்னை ரட்சிக்க வந்த தேவதையாக, தெய்வமாக, உமையவளாக, அபிராமியாகவே அவளைப் பார்க்கிறான் குணா.

நாயகியைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறான் குணா. வீட்டிலும் சிக்கல், பிரச்சினைகள். அவளை அழைத்துக்கொண்டு, ஆந்திரத்திலிருந்து தமிழகத்தின் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வந்துவிடுகிறான்.  முதலில் கொடைக்கானல் மலையில் ஒரு இடிந்த தேவாலயத்தில் ரோஷிணி வைத்திருப்பார் கமல். அங்கேயும் ஆட்கள் கண்டுபிடித்து வந்துவிட, பின்னர் ‘குணா’ குகை என்று இப்போது அழைக்கப்படும் குகைக்கு மாற்றுவார்.

இந்த குகைதான் இப்போது வெளியாகி பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தின் மையம். கொடைக்கானலின் அடையாளமாக உள்ள குணா குகையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது, ‘மஞ்சுமோல் பாய்ஸ்’. குணா குகையில் விழுந்து சிக்கிய கேரள இளைஞர் மற்றும் உடன் அவர்களது நண்பர்கள் குழுவின் கதையை அற்புதமாக காண்பித்திருக்கிறார்கள்.

1991ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியானது ‘குணா’.  அதற்கு முன்னர் 1975ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்வீட் ஹோஸ்டேஜ்’ (Sweet Hostage) என்ற படத்தின் தழுவல்தான் ‘குணா’ என்பது சத்யேந்திரன் வாதம்.

‘வாவ் தமிழா’ யூ டீயூப் சேனலுக்கு சத்யேந்திரன் அளித்த பேட்டியில், ‘அமெரிக்க எழுத்தாளர் நதானியேல் பெஞ்ச்லியின் ‘வெல்கம் டு சனாடு’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்கத் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட திரைப்படம், ‘ஸ்வீட் ஹோஸ்டேஜ்’.

மனநல காப்பகத்தில் இருந்து தப்பியோடிய 31 வயதான மனநோயாளி, படிப்பறிவில்லாத, ஒரு சிறுமியை அருகிலுள்ள பண்ணையில் இருந்து கடத்தி, ஆள் நடமாட்டம் இல்லாத மலைக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்துகிறார். அங்கு அவர் அவளுக்கு படிக்க கற்றுக்கொடுக்கிறார். இன்னொரு பக்கம் சிறுமியையும் மனநோயாளியையும் காவல்துறை தேடுகிறது. இதனிடையே மனநோயாளி பிடியில் இருக்கும் சிறுமி ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்படுகிறாள்.

சிறுமியும் மனநோயாளியும் இருக்கும் இடத்தை துப்பறிந்து நெருக்கும் காவல்துறையினர், மனநோயாளியிடம் இருந்து சிறுமையைக் காப்பாற்ற துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். அப்போது மனநோயாளி தற்கொலை செய்துகொள்கிறார். இறுதியில் சிறுமி பெற்றோருடன் மீண்டும் இணைகிறாள்.

லிண்டா பிளேயர், மார்ட்டின் ஷீன் இருவரின் நடிப்பும் மிகப் பிரமாதமாக இருக்கும்.

இந்தப் படத்தை தழுவிதான் கமல் நடித்த ‘குணா’ மட்டுமல்ல, செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘காதல் கொண்டேன்’ படமும் எடுக்கப்பட்டது’ என்கிறார் சத்யேந்திரன்.

‘ஸ்வீட் ஹோஸ்டேஜ்’ படத்தை யூடியூப்பில் பார்க்க…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...