இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருந்தது. நீண்ட காலமாக அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்ததால், ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல் தன்னை முன்கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில், ஏழு பேரையும் முன் கூட்டி விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களைக் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் டெல்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசுக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை, எனவே ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று சமீபத்தில் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.கள் குற்றம்சாட்டி இருந்தனர். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை ஆளுநர் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) வரை டெல்லியில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அதன் பிறகு சென்னை திரும்புவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
நீட்: தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு நேற்று தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் ஜூலை 17-ம் தேதி, பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நீட் தேர்வு நடைபெறும். இதில் 200 கேள்விகள் கேட்கப்படும் நிலையில் தேர்வு எழுதுவதற்கான நேரம் 200 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 3 மணி நேரம் வழங்கப்பட்டு இருந்ததைவிட தற்போது 20 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படுகிறது.
தமிழக மீனவர்களுக்கு பிணை வழங்க ரூ. 12 கோடி: இலங்கை நீதிமன்றம் உத்தரவு
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரைக் கடந்த 24-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இலங்கை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மீனவர்களுக்கு பிணை கோரப்பட்டது. அப்போது, தமிழக மீனவர்கள் பிணையில் செல்ல வேண்டுமென்றால் நபர் ஒருவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடி செலுத்த வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 12 பேரையும் மே 12-ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘மிஸ்டர் லோக்கல்’ விவகாரம்: சிவகார்த்திகேயனுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்கு பேசப்பட்ட சம்பளத்தில் 4 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும், அதை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரியும், நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகள் கழித்து மனுத்தாக்கல் செய்தது ஏன் எனவும், டி.டி.எஸ். விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஒரு மனு நிலுவையில் இருக்கும் போது, மற்றொரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது ஏன் எனவும், சிவ கார்த்திகேயன் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கு விசாரணையை ஏப்ரல் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.