No menu items!

தன்பாலினர் திருமணம் – மறுத்த உச்ச நீதிமன்றம் – அடுத்து என்ன?

தன்பாலினர் திருமணம் – மறுத்த உச்ச நீதிமன்றம் – அடுத்து என்ன?

LGBTQIA+ எனப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மணம் புரிந்துகொள்ளும் உரிமையை வழங்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறது. அந்த உரிமையை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்திருக்கிறது; தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றம், சட்டமன்றங்களே முடிவு செய்யும் என்று கூறியுள்ளது. எனினும், திருமண சமத்துவம் தேவையான ஒன்று எனவும் கருத்து தெரிவித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து தன்பாலின ஈர்ப்பாளர்களும் எதிரானவர்களும் என்ன சொல்கிறார்கள்?

உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் வழக்கில் நேற்று, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு 4 வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியது.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “உச்ச நீதிமன்றத்தால் சிறப்புத் திருமணச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது. அதில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரிக்கும் ஷரத்தை சேர்க்கவும் முடியாது. திருமணங்கள் தொடர்பான சட்டங்களை நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும்தான் இயற்ற முடியும். இப்போதுள்ள சட்டத்தின்படி திருமணத்துக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ள இயலாது என்பதால் நாடாளுமன்றமும் சட்டமன்றங்களுமே தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

நீதிபதி பட் தனது தீர்ப்பில், “திருமண பந்தங்களை சட்டங்கள்தான் அங்கீகரிக்கும். இந்த நீதிமன்றம் அதற்கான சட்டங்களை இயற்றும்படி அரசை வலியுறுத்த மட்டுமே முடியும்” என குறிப்பிட்டார்.

நீதிபதி கவுல் அளித்த தீர்ப்பில், “தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதன் மூலம் திருமண சமத்துவத்தில் அடுத்த அடியை எடுத்து வைக்கலாம்” என்று கூறினார்.

5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 5 நீதிபதிகளும் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். தன்பாலின திருமணத்தை சட்டபூர்வ அங்கீகரிப்பது நாடாளுமன்றம், சட்டமன்றங்களால் மட்டுமே முடியும் என்ற நிலைப்பாட்டினை 3 நீதிபதிகள் எடுத்ததை அடுத்து, இந்த விவகாரம் தற்போது நாடாளுமன்றம், சட்டமன்றங்களின் கைகளுக்குச் சென்றுள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததுபோது, ”தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய சமூக நிறுவனத்தை உருவாக்க நீதிமன்றம் முயலக் கூடாது. நீதிபதிகள் இந்தப் பணியை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும்.

இதுபோன்ற ‘வேறு வகை’ திருமணங்களை சமூக ரீதியாகவும் மத ரீதியாகவும் ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். தற்போது திருமணம் என்பது சட்டத்தின்படியும் மதத்தின்படியும் புனிதமான ஒன்றாக, பன்முகத்தன்மை கொண்ட அமைப்பாக உள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டால், அது ஒவ்வொரு குடிமகனின் நலன்களையும் தீவிரமாக பாதிக்கும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகுந்த மன வருத்தத்தை தந்துவிட்டதாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பெரிய எதிர்பார்ப்புடன் இருந்ததாகவும் திருமணத்திற்கான உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பு உறுதிப்படுத்தவில்லை என்று ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்தாக சொல்லியது, தங்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரும் LGBTQ+ உரிமை ஆர்வலருமான ஹரிஷ் ஐயர், தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இல்லாவிட்டாலும், உச்ச நீதிமன்றத்தின் பல அவதானிப்புகள் LGBTQ+ சமூகத்துக்குச் சாதகமாக அமைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மனுதாரர்கள் குழுவில் இருந்த இன்னொருவரான அஞ்சலி கோபாலனும் தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். ‘தத்தெடுப்பு தொடர்பாக தலைமை நீதிபதி கூறியது மிகவும் நல்ல விஷயம். ஆனால், மற்ற நீதிபதிகள் ஒப்புக் கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது’ என்றும் அஞ்சலி கோபாலன் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் பால்புதுமையினர் செயற்பாட்டாளருமான ரோஸ், ”உச்சநீதிமன்றம் லாவகமாக நாடாளுமன்றத்திடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டது. நீதிமன்றத்தில் எங்களுக்கு கிடைக்காத நீதி, நாடாளுமன்றத்தில் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில், தற்போது ஆட்சியில் உள்ள பாஜகவை சேர்ந்த பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பால் புதுமையினருக்கு எதிராக பேசுகிறார்கள் என்பதால், எங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. ஒருவேளை அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், ஏதாவது வாய்ப்பிருக்கும்,” என கூறியுள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவரும் தன்பாலின ஈர்ப்பாளருமான நாகராஜ், “நானும் எனது துணைவரும் எங்கள் குடும்பத்தினரிடம் மோசமான வசைகளை எதிர்கொண்டவர்கள். சொந்தங்கள், நண்பர்கள் என பலரும் எங்களை கைவிட்ட நிலையில் எங்களுக்கான வாழ்வை நாங்கள் வாழ தொடங்கியிருக்கிறோம். ஆனால், இந்த தீர்ப்பு எங்களை எதிர்ப்பவர்களுக்கு பலம் சேர்த்துள்ளது. எங்களை போன்ற நசுக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக இன்னும் எத்தனை காலம் தான் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை,” என கூறியுள்ளார்.

எதிர்ப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஆர்எஸ்எஸ் அமைப்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரச்சார பிரிவு பொறுப்பாளர் சுணில் அம்பேத்கர், “உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நமது நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறை, இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்கள் குறித்தும் விவாதித்து பொருத்தமான முடிவை எடுத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

விசுவ இந்து பரிஷத் அமைப்பு, “தீர்ப்பில் நாங்கள் திருப்தி அடைகிறோம். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தவர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டு, தன்பாலின திருமணம் உரிமையாக இருக்க முடியாது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது. இது அடிப்படை உரிமை கிடையாது என்பது உறுதியாகி உள்ளது” என தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்ற பார் கவுன்சிலும் வரவேற்றுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் ஆதிஷ் அகர்வாலா, “தன்பாலின திருமண விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா ஒரு புராதன நாடு. இங்கே தன்பாலினத்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு நீதிமன்றத்தால் அனுமதி வழங்க முடியாது” என தெரிவித்துள்ளார்.

இனி என்ன ஆகும்?

உச்சநீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமானதாக இல்லை என்பதால் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து பேச தன்பாலின ஈர்ப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்றம் கூறியபடி அமைக்கப்படும் கமிட்டியில் தங்களது ஆதரவாளர்கள் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் அவர்கள் வைத்துள்ளனர்.

ஆனால், ரோஸ் குறிப்பிடுவது போல், மத்தியில் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான நிலைப்பாடே கொண்டிருப்பதால், அவர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...