No menu items!

பணம் இல்லாமல் வாழும் மனிதன் – காரணம் காந்தி

பணம் இல்லாமல் வாழும் மனிதன் – காரணம் காந்தி

‘பணம் இல்லாதவன் பிணம் எனறு சொல்வார்கள். ஆனால் அந்தப் பணம் இல்லாமலேயே வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்த முடியும் என்று நிரூபித்திருக்கிறார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரான மார்க் பாயல். இங்கிலாந்து பத்திரிகைகளுக்காக தொடர்ந்து கட்டுரைகளை எழுதிவரும் மார்க், கடந்த 2008-ம் ஆண்டுமுதல் எந்த விஷயத்துக்காகவும் பணத்தை பயன்படுத்தியதில்லை. பணம் மட்டுமின்றி புதிய தொழில்நுட்பங்களைக்கூட பயன்படுத்தாமல் வாழ்ந்து வருகிறார் மார்க் பாயல்.

அயர்லாந்து நாட்டில் உள்ள பாலிஷனான் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர் மார்க் பாயல். கால்வாய் – மயோ தொழில்நுட்ப கல்லூரியில் வர்த்தகத்தில் டிகிரி படித்துள்ளார். படிப்பை முடித்த பிறகு பிரிஸ்டால் நகரத்தில் உள்ள உணவு நிறுவனம் ஒன்றில் இவருக்கு நல்ல வேலை கிடைத்துள்ளது. கைநிறைய சம்பாதித்து வந்துள்ளார். வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் நிறைய பணம் சேர்க்கவேண்டும் என்ற லட்சியத்துடன் கடுமையாக வேலை பார்த்துள்ளார் மார்க் பாயல். நிறைய பணமும் சம்பாதித்திருக்கிறார். இந்த சூழலில்தான் அவர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ இயக்கிய காந்தி படத்தை பார்த்திருக்கிறார்.

இந்த படத்தாலும், காந்தியின் எளிய வாழ்க்கை முறையாலும் கவரப்பட்ட மார்க் பாயல், அவரைப்போலவே எளிமையாக வாழ விரும்பியிருக்கிறார். இந்த சூழலில் ஒருநாள் தனது படகுவீட்டில் அமர்ந்து நண்பர்களுடன் பணத்தைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார் மார்க். அப்படி பேசும்போதுதான், ‘வாழ்க்கையில் மக்கள் படும் கஷ்டங்களுக்கு பணம்தான் காரணம்’ என்ற விஷயம் அவரது மூளைக்கு எட்டியிருக்கிறது. இந்த நேரத்தில் தான் பார்த்த காந்தி படமும் அவரது நினைவுக்கு வர, அவரைப் போல் எளிமையான வாழ்க்கையை வாழ தீர்மானித்துள்ளார். அன்றிலிருந்து, இனி பணத்தையே தொடக்கூடாது என்றும் தீர்மானம் செய்துள்ளார் மார்க்.

இந்த சிந்தனை வந்த பிறகு தனக்கு சொந்தமான படகு வீட்டை விற்பனை செய்து, ஒரு பழைய காரவனை வாங்கியிருக்கிறார். இப்போது அவரிடம் சொந்தமாக இருக்கும் ஒரே விஷயம் காரவன்தான். அதைத்தவிர அவருக்கு எந்த சொத்தும் இல்லை.

ஆரம்ப காலத்தில் பணமில்லாமல் வாழ்வதில் அவருக்கு பல சிக்கல்கள் இருந்தன. டீ, காபி குடிப்பது போன்ற பழக்கங்களை அவரால் எளிதில் நிறுத்த முடியவில்லை. ஆனால் கடும் போராட்டங்களுக்கு பிறகு அவற்றை தவிர்த்த மார்க், இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிட்டு வருகிறார். இந்த வாழ்க்கை முறை பழகிய சூழலில் 2017-ம் ஆண்டுமுதல் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதையும் நிறுத்தியிருக்கிறார். இப்போது சாதாரண பட்டன் போன்கூட இல்லாமல் அவர் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்.

தனது வாழ்க்கை அனுபவங்களை புகழ்பெற்ற கார்டியன் பத்திரிகையில் எழுதிவரும் மார்க், ‘ The Moneyless Man: A Year of Freeconomic Living’ உள்ளிட்ட பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

தனது வாழ்க்கை முறையைப் பற்றி செய்தியாளர்களிடம் கூறியிருக்கும் மார்க், “இயற்கையான உணவுப் பொருட்களையே சாப்பிட்டு வருவதால் எனக்கு இதுவரை எந்த நோயும் வந்ததில்லை. என் கடந்தகால வாழ்க்கையைவிட எதிர்காலத்தைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறேன். அதனால் பணமில்லாத, தொழில்நுட்பங்களின் உதவியில்லாத வாழ்க்கையை வாழ்வது கஷ்டமாக இல்லை. என் வாழ்க்கை இந்த அளவுக்கு மாற, காந்தியிடம் நான் கொண்ட ஈடுபாடே காரணம்” என்கிறார்.

எங்கோ ஐரோப்பாவில் பிறந்த மார்க், காந்தியை நினைத்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் நாம்தான் காந்தியை மறந்துவிட்டோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...