தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் மட்டும் இருந்த நாட்டுப்புறக் கலையான வில்லுப்பாட்டை மாநிலம் முழுவதும் பிரபலம் அடையச் செய்தவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். அவருக்குப் பிறகு அக்கலையை உலகளவில் கொண்டு சென்றவர் ‘வில்லிசை வேந்தர்’ சுப்பு ஆறுமுகம். வயது முதிர்வு காரணமாக சுப்பு ஆறுமுகம் சென்னையில் இன்று காலமானார்.
ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி. சிவம் சகோதரரும், ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தின் கதாசிரியரும், சென்னை தொலைக்காட்சி (பொதிகை) முன்னாள் இயக்குநருமான எம்.எஸ். பெருமாள், வில்லிசை வேந்தருடன் நெருங்கிப் பழகியவர். சுப்பு ஆறுமுகம் குறித்த நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
“வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேரை, எத்தனையோ காரணங்களுக்காக, எத்தனையோ தடவை வாழ்த்தியிருப்போம். ஆனாலும், வருடத்தில் ஐம்பது நபர்களை வாழ்த்தியிருந்தாலே அதிகம். ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் ஆயிரக்கணக்கான ரசிகர்களையும் நேயர்களையும் அன்பர்களையும் அன்றாடம் “வாழியவே பல்லாண்டு காலம்” என சிரித்த முகமும் உரத்த குரலுமுடன் வாழ்த்திக்கொண்டே இருந்தவர், அண்ணாச்சி சுப்பு ஆறுமுகம். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் குருகுலத்தில் கலை பயின்றவர்; கலைவாணரின் செல்லப்பிள்ளை.
கதாசிரியராக, திரைப்பட வசனகர்த்தாவாக, திரைப்பட பாடலாசிரியராக, நடிகராக, வில்லிசை வேந்தராக அண்ணாச்சியின் பன்முகப் பணிகளில் மனதை பறிகொடுத்தவன் நான். மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பத்தின் ஆயுள் உறுப்பினர் அண்ணாச்சி. 1960 – 61இல் என் தந்தையாரின் வானொலி தொடர்களான ‘காப்புக்கட்டிச் சரித்திரம்’, ‘ஜனதா நகர்’ ஆகியவற்றின் சில பகுதிகளை அண்ணாச்சிதான் எழுதியிருக்கிறார்.
கலைவாணர் தொடங்கி கமல்ஹாசன் வரை தொடர்ந்தது அண்ணாச்சியின் திரைப் பயணம். கலைவாணரது 19 திரைப்படங்களுக்கும், நாகேஷின் ஏறக்குறைய அறுபது திரைப்படங்களுக்கும் நகைச்சுவைப் பகுதிகளை சுப்பு ஆறுமுகம் எழுதியிருக்கிறார். இவர் கதையில் ‘சின்னஞ்சிறு உலகம்’ திரைப்படம் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனால் தயாரிக்கப்பட்டது.
எழுத்தில் மட்டுமல்லாமல் பேச்சிலும் எப்போதும் நகைச்சுவை சரவெடிதான். குற்றாலம் அருவி மாதிரி வார்த்தைகள் பொங்கி வரும். ஆனாலும், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் உத்தி அவருக்கு கைவந்த கலை. அபிமானங்களையும் அவமானங்களையும் புதிய கோணத்தில் காணவைக்கும் அற்புதமான சொல்லாற்றல் கொண்டவர்.
எத்தனையோ வில்லிசைக் கலைஞர்கள் இருந்தாலும் ‘வில்லுப்பாட்டு’ என்றதும் நினைவுக்கு வரும் பெயர் சுப்பு ஆறுமுகம்தான். 1948இல் தொடங்கி, 70 ஆண்டுகளுக்கும் மேலான கலைப்பயணத்தில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 1975இல் சென்னை தொலைக்காட்சி நிலையம் தொடங்கிய நாள் முதலாக அண்ணாச்சி வழங்கிய வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் ஏராளம் ஏராளம். திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவின் 147-வது ஆண்டு நிகழ்ச்சியில் தியாகப் பிரம்மத்தைப் பற்றி 2 மணி நேரத்துக்கு வில்லுப்பாட்டு கதை நிகழ்த்தினார்.
பொதுவாக வில்லுப்பாட்டு என்றால் ‘சுடலைமாடன் கதை’, ‘நல்லதங்காள் கதை’, ‘தேசிங்குராஜன் கதை’ என புராண வரலாற்றுக் கதைகள் தான் இடம்பெறும். அதை மாற்றிக் காட்சிய பெருமை அண்ணாச்சியைத்தான் சேரும். ஆன்மிகம், இலக்கியம் மட்டுமின்றி, மருத்துவம், அறிவியல், சமூக விழிப்புணர்வு என பல துறைகளிலும் வில்லிசைக் கச்சேரிகள் நிகழ்த்தக்கூடியவர். மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, குடும்ப நலம், பெண் கல்வி, தொழில் வளம், வேளாண்மை நுணுக்கங்கள் என இவர் பலவற்றை வில்லுப்பாட்டில் தொட்டு வெற்றி பெற்றவர்.
சங்கரமடத்திலும் பெரியார் திடலிலும் சுப்பு ஆறுமுகம் கச்சேரிகள் நடத்துவதுண்டு. ஆனால், எந்த மேடையாக இருந்தாலும் அவர் அவராகவே இருப்பார். இடத்துக்கு தகுந்த மாதிரி முகமூடிகளை மாற்றிக்கொள்ள மாட்டார்.