நேற்று மாலை தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றங்கள் நடந்தன.
உளவுத் துறை ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் ஆசிர்வாதம் ஐபிஎஸ் காவல்துறை தலைமையக ஏடிஜிபியாக மாற்றப்பட்டிருக்கிறார். உளவுத் துறை தலைமை என்பது சர்வதிகாரமிக்க பொறுப்பு. தலைமையக ஏடிஜிபி என்பது நிர்வாக பொறுப்பு, அதிக அதிகாரமில்லாத பொறுப்பு.
இந்த மாற்றம் காவல் துறை வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. டேவிட்சன் ஆசிர்வாதம்தான் அடுத்த சென்னை போலீஸ் கமிஷனர் என்று கூறப்பட்டு வந்தார். ஆனால் அப்படி நடக்கவில்லை.
தற்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருக்கும் சங்கர் ஜீவால்தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபி என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் சென்னை கமிஷனர் இடத்துக்கு யார்?
அது மட்டுமில்லாமல் டேவிட்சன் ஆசிர்வாதம் வகித்து வந்த உளவுத்துறை ஏடிஜிபி பொறுப்புக்கு செந்தில்வேலன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இவர் கூடுதலாகதான் இந்தப் பொறுப்பை கவனித்துக் கொள்வார் என்று அரசு தெரிவிக்கிறது. முழுமையான உளவுத்துறை தலைவர் அல்ல.
அப்படியென்றால் உளவுத்துறை தலைவமைப் பொறுப்புக்கு வரப் போவது யார்?
இந்தக் கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை.
இந்த மாதத்துடன் – இன்னும் சில நாட்கள்தாம் – சைலேந்திரபாபு ஐபிஎஸ்ஸின் பதவிக் காலம் முடிகிறது. 2021ல் திமுக அரசு பொறுப்பேற்றதும் தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார். இரண்டு வருடங்கள் முடிவடைந்து ஓய்வு பெறுகிறார்.
காவல்துறையைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு டிஜிபிதான் காவல்துறைக்கு தலைவர். அதனால் இந்தப் பதவிக்கு போட்டி அதிகம். இந்த பதவிக்கான போட்டியில் டெல்லி மாநகர காவல் ஆணையராக பணியாற்றும் சஞ்சய் அரோரா, டி.கே.ரவி, தற்போதைய சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், அபாய்குமார், சீமா அகர்வால் என பல ஐபிஎஸ் அதிகாரி இருந்தார்கள்.
ஒரு மாநிலத்தின் டிஜிபியை மத்திய அரசின் ஆலோசனையுடன் தேர்ந்தெடுக்க வேண்டும். கடந்த வாரம் இதற்கான் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு அதிகாரிகளுடன் தலைமைச் செயலை இறையன்பு ஐஏஎஸ், தமிழ்நாட்டு உள்துறை செயலர் அமுதா ஐஏஎஸ், டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். ஆலோசனையின் இறுதியில் ஷங்கர் ஜிவால், பி.கே.ரவி, சஞ்சய் ஆரோரா ஆகியவர்களின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மூவர்களில் ஒருவரை தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுப்பார். இவர்களில் ஷங்கர் ஜிவாலுகே வாய்ப்புகள் அதிகம் என்று காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த மூவர் பட்டியலில் சீனியாரிட்டிபடி முதலில் இருப்பவர் சஞ்சய் அரோரா. தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த இந்த ஐ.பி.எஸ் அதிகாரி தற்போது டெல்லி காவல் ஆணையராக பணி புரிந்து வருகிறார். மதிப்பு வாய்ந்த அந்த பதவியை விட்டு சஞ்சய் அரோரா வருவாரா என்பது சந்தேகம் தான். பி.கே.ரவி ஐபிஎஸ்க்கும் சில சிக்கல்கள் இருப்பதால் அவருக்கும் டிஜிபி வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.
சங்கர் ஜிவாலுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்படாமல் ஓரம் கட்டப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளில் இவரும் ஒருவர். இவர் மீது தேவையில்லாமல் தி.மு.க சாயம் பூசப்பட்டது.கலைஞர் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு உளவுத்துறையின் டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜியாக இருந்தது தான் இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து சங்கர் ஜிவால் சென்னை பெருநகர் காவல் ஆணையாளராக இருக்கிறார். சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் உளவுத்துறையில் தனது முத்திரையைப் பதித்தவர் சங்கர் ஜிவால். அதனால் இவருக்கு தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி யாக பிரகாசமான வாய்ப்பு என்று கூறப்படுகிறது.