No menu items!

30 ரூபாய் தக்காளி 100 ரூபாய் – என்ன ஆச்சு?

30 ரூபாய் தக்காளி 100 ரூபாய் – என்ன ஆச்சு?

ஏற்கெனவே இருக்கும் பிரச்சினைகள் போதாதென்று தமிழக மக்களை, குறிப்பாக சென்னை மக்களை இப்போது சூழ்ந்துள்ள புதிய பிரச்சினை தக்காளியின் விலை உயர்வு. கடந்த வாரம் வரை கிலோ 30 ரூபாய்க்கு விற்றுவந்த ஒரு கிலோ தக்காளியின் விலை, இப்போது 100 ரூபாய் வரை உயர்ந்துவிட்டது.

பொதுவாக ஒரு காய்கறியின் விலை உயர்ந்தால், அதை வாங்காமல் தவிர்ப்பது மக்களின் வழக்கம். ஆனால் தக்காளியைப் பொறுத்தவரை அது முடியாது. அசைவ உணவு, சைவ உணவு என்று எந்த வகை உணவைச் சாப்பிடுபவராக இருந்தாலும் சரி, அதில் தக்காளியை தவிர்க்க முடியாது. அதனால் தக்காளியின் விலை உயர்வால் தவித்துப் போயிருக்கிறார்கள் மக்கள். 5 தக்காளி போடும் குழம்பில் 4 தக்காளிகளைப் போடுவது, 3 தக்காளி போடும் உணவில் 2 தக்காளிகளைப் போடுவது என்று சிக்கனப்படுத்தி வருகிறார்கள்.

ஓட்டல்களில் வழக்கமாக டிபனுக்கு வழங்கப்படும் சட்னிகளில் தக்காளிச் சட்னி இடம்பெற்றிருக்கும். ஆனால் இப்போது விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக ஓட்டல் மெனுவில் தக்காளிச் சட்னி இல்லை. விலை உயர்வு காரணமாக தக்காளி சட்னி கிடையாது என்று வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார்கள். மதிய சாப்பாட்டிலும் சில ஓட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள்.

தக்காளி விலை உயர்வுக்கு என்ன காரணம்? இந்த விலை உயர்வு எப்போது கட்டுப்படுத்தப்படும் என்பது போன்ற கேள்விகளுடன் கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நல சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமாரை சந்தித்தோம்.

“சென்னை கோயம்பேட்டுக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து பெரும் அளவில் தக்காளி வருகிறது. இந்த மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. நேற்று மிகக் குறைந்த அளவிலான லாரிகள் மட்டுமே வந்ததால் தக்காளி 100 ரூபாய் வரை விற்கப்பட்டது. இன்று 38 முதல் 40 லாரிகள் வரை தக்காளி வந்ததால் கோயம்பேட்டில் தக்காளியின் விலை கிலோ 70 ரூபாய் வரை குறைந்துள்ளது. சில்லறை வணிகத்தில் 90 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது.

பல இடங்களில் தக்காளி அறுவடை முடிந்து இப்போதுதான் புதிதாக தக்காளியை பயிரிட்டுள்ளனர். இவை வளர்வதற்கு சில காலம் பிடிக்கும். அதனால் டிசம்பர் மாதம் வரை தக்காளியின் விலை 50 ரூபாய்க்கு குறையாது.

தக்காளியின் கொள்முதல் விலையுடன் சேர்த்து சுங்கக் கட்டணம் உள்ளிட்ட போக்குவரத்து கட்டணமும் சேர்வதால் அதன் விலை கடுமையாக அதிகரிக்கிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், தமிழக அரசு போக்குவரத்துச் செலவை எடுத்துகொள்ள வேண்டும்” என்று முத்துக்குமார் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...