No menu items!

சனாதன இந்து! சபிக்கப்பட்ட இந்து! – ஆ. ராசா சனாதன விளக்கம்

சனாதன இந்து! சபிக்கப்பட்ட இந்து! – ஆ. ராசா சனாதன விளக்கம்

சனாதனம் பற்றி, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி பேசியது இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. உதயநிதி கூறும் சனாதனம் என்றால் என்ன? பாஜகவினர் கூறுவது போல் இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? இந்த கேள்விகளுக்கு, திமுக துணைப் பொதுச் செயலாலாளரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பியுமான ஆ. ராசா ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறிய பதில் இங்கே…

இந்து பானாரஸ் பல்கலைக்கழகம் 1916இல் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது. சனாதனம் என்றால் என்ன என்பதற்கு ஆதார நூல் அதுதான். அந்த புத்தகத்தில், ‘இந்து மதம் ஆரியர்களுக்கு சொந்தமானது. அவர்கள் அனைவரையும்விட உயர்ந்தவர்கள், அழகானவர்கள்’ என்று சொல்கிறது. ஆம், இந்து என்று பெயர் வருவதற்கு முன் இதற்கு பெயர் சனாதனம்.

சனாதனம் போன்ற இந்து மத தத்துவங்களுக்குதான் நாங்கள் எதிரி; எல்லா இந்துக்களுக்கும் அல்ல. அருந்ததியருக்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்தது நாங்கள்; வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தவப்பட்டவர்கள் என்று கொடுத்தது நாங்கள்; இதுபோல் முக்குலத்தோருக்கு, ஆதி திராவிடர்களுக்கு கொடுத்தது நாங்கள்தானே. இவர்கள் எல்லாம் இந்துக்கள்தானே. பிராமணர் அல்லாதவர்களுக்கு கோயிலை, சாலையை, பள்ளிக்கூடத்தை, மருத்துவமனைகளை திறந்துவிட்டது நாங்கள்தானே. பெண்ணுக்கு கல்வி கொடு என்று சொன்னோம். கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்களுக்கா அதை சொன்னோம், இந்து பெண்களுக்குதானே சொன்னோம். இந்துக்கள் என்று சட்டத்தால் அறியப்பட்டவர்கள் எல்லோருக்கும் 100 வருடங்களாக நாங்கள்தான் உரிமை வாங்கிக் கொடுத்தோம்.

இந்து சனாதன தத்துவப்படி உயர இருக்கிறதாக சொல்லும் பிராமணர், ஒரே குலம் ஒரே தேசம் என்கிறாரே, கடைசியில் இருக்கிற அருந்ததியர் சாப்பிடும் உணவை அவர் சாப்பிடுவாரா?

இந்துக்கள் என்ற பெயரால் யாரை ஏமாற்றுகிறார்கள்? இந்துக்களிலேயே சமத்துவத்தை எதிர்க்கிற சனாதன இந்து, சாமானிய இந்து என்று இரண்டு பேர் இருக்கிறார்கள். 2000 வருடங்களாக சபிக்கப்பட்ட சாமானிய இந்துக்கள் பக்கம் நாங்கள் நிற்கிறோம். இதை புரிந்துகொண்டால் சனாதன இந்துக்கள் செய்யும் துஷ்பிரயோகத்தை சுலபமாக முறியடிக்கலாம்.

2000 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் கடற்கரை ஓரமாக குடியிருந்தவர்கள் கொடைக்கானலிலோ ஊட்டியிலோ போய் திருமண உறவு வைத்துக்கொள்ள முடியுமா? சாத்தியமில்லை. அதனால்தான், அப்போது தங்கள் வாழ்விட வட்டாரத்தில், செய்கின்ற தொழிலுக்கு ஏற்ப குலமாக வாழ்ந்தார்கள். இப்படி குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை நிலப் பரப்புகளில் மனிதர்கள் குலங்களாக வாழ்ந்ததன் அடிப்படையில் பிரிவினைகள் இருந்தது. சமமான நிலைதான். ஆனால், ஏற்றத்தாழ்வு இல்லை. அதாவது ஒரு அறையில் நீங்கள் அந்தப் பக்கம், நான் இந்தப் பக்கம் என்பது போல். இதை மாற்றி நான் மேல் நீ கீழ் என ஏணிப்படி பிரிவினைகளை உருவாக்கியது சனாதனம். 2000 ஆண்டு கால இந்த கொடுமையை நீக்க வேண்டுமா வேண்டாமா? நீதிக்கட்சி காலம் தொடங்கி கடந்த நூறு ஆண்டுகளாக அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். சாதியையும் சாதியால் உருவாக்கப்பட்ட தாழ்வு மனப்பான்மையையும் மக்கள் மண்டையில் இருந்து நீக்க வேண்டும்.

ஒரு காலத்தில் தொட்டால் தீட்டு என்றார்கள்; இன்று தொட்டுக்கொள்கிறார்கள். வீதிக்குள் போனால் தீட்டு என்றார்கள்; இன்று வீதிக்குள் போகிறார்கள். இப்போது ஆணவக் கொலைகள் இருக்கிறது. வரும் காலங்களில் அதுவும் இல்லாமல் போகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...