ஓவியர் மாருதி மறைந்துவிட்டார். வார, மாத இதழ்களில் கதைகள், தொடர் கதைகள், நாவல்களுக்கு அவர் வரைந்த குண்டு விழி பெண்களை காதலிக்காத ஆண் வாசகர்கள் இருக்கமாட்டார்கள். பெண்கள் வாசகர்களையும் கவர்ந்தவர். பல இளம் ஓவியர்களுக்கு ஊக்கமாக இருந்தவர்.
மாருதியுடன் நெருங்கிய பழகிய பதிப்பாளர்கள், படைப்பாளிகள், ஓவியர்கள் அவர் குறித்து பகிர்ந்துகொண்ட நினைவுகள் இங்கே.
பாக்கெட் நாவல் அசோகன்
பதிப்பாளர்
அவருடன் 1980களில் இருந்து எனக்கு நேரடிப் பழக்கம். என் தந்தைக்கும் அவருக்கும் வாழையடி வாழை என பழக்கம்.
ஆம், மாருதி அண்ணனின் தந்தை புதுக்கோட்டை பள்ளியில் என் தந்தையாரின் கணக்கு ஆசிரியர்.
1980களில் அவரின் திருமணத்திற்கு, என் குருநாதரும் தந்தையுமான வாலிபம் ராஜ் என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட எல்.ஜி. ராஜ், உடல்நல குறைவால் செல்லமுடியாத சூழ்நிலையில் என்னை அனுப்பினார். அந்த திருமணத்தில் நாங்கள் கொடுத்தது, ஒரு எவர்சில்வர் தட்டு. பல ஆண்டுகள் அந்த தட்டை நினைவுப்படுத்தி மகிழ்ந்தார்.
1981இல் என் தந்தையார் இறந்தபின் அவர் வாங்கித்தந்த ‘சுபயோகம்’ என்ற தலைப்பை கொண்டு ஜோதிட இதழைத் தொடங்கினேன். ‘சுபயோகம்’ இதழ் முதல் சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து அட்டைப்படம் போட்டார் மாருதி.
‘க்ரைம் நாவல்’ தொடங்கிய போது மாருதி அண்ணனைத் தான் தொடர்பு கொண்டேன். அவரோ… ‘தம்பி அசோகன், என் ஓவிங்கள் கொஞ்சம் குடும்பத்தனமாகவும் பழமைசாயல் கொண்டதாகவும் இருக்கும். இப்ப அரஸ் என்ற தம்பி அயனாவரத்தில் பச்சக்கல் வீராசாமி தெருவில் இருக்கார். அவர் இதற்கு சரியாக இருக்கும். இந்தாங்க அவர் முகவரி’ என்று போன் எண் தந்தார். அவர் அன்று போட்ட அந்த அரஸ் – அசோகன் உறவு தொடருது.
இராயப்பேட்டை திருவள்ளுவர் சிலை சற்று தள்ளி இருக்கும் லெட்சுமி லாட்ஜின் உள்ளே கடைசிக்கு சென்றால்… 1985 வரை அங்குதான் மாருதி அறை. அந்த அறைக்கு வராத பிரபலங்களே இல்லை.
என்னிடம் வயதுவரம்பு பார்க்காமல் பழகுவார். தீவிர சைவ குடும்பம் என்றாலும் முற்போக்கு சிந்தனக்கொண்டவர். நான் கடவுளை கும்பிட்டேன் என்றால் சந்தோசம் என்பார், நான் கடவுளை கும்பிடமாட்டேன் என்றால் ரொம்ப,ரொம்ப மகிழ்ச்சி என்பார். தன் கொள்கையை அடுத்தவரிடம் புகுத்தமாட்டார். அவரின் சாமிப் படங்கள் தெய்வமே நேரில் இருப்பது போலவே இருக்கும், அதே மாருதி வரைந்த தந்தை பெரியார் படம் மிகவும் தத்ரூபமாக இருக்கும்.
ஒருமுறைக் கேட்டேன், ‘அண்ணே நீங்க போடற படத்தில் உள்ள பெண்கள் மாடலா கற்பனையா’ என்றேன்.
‘தம்பி அந்த உண்மையை சொல்றேன். எனக்கு பயமில்ல. ஏன்னா என் மனைவிகிட்டேயும் சொல்லிட்டேன். என் ஓவியத்தின் விசிறியாக அந்த பெண் அறிமுகமானார். அடிக்கடி வருவார், பேசுவார். ஒருமுறை எனக்கு உடல்நலம் சரியில்லாதபோது எனக்கு உணவெல்லாம் தந்தார். எனக்கும் திருமண தள்ளிபோகிறது. அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாமே என்று எண்ணம். அதை அவரிடம் எப்படி சொல்வது. ஒருநாள் முடிவுசெய்து இன்று நம்ம விருப்பத்தை சொல்லலாம் என காத்திருந்தேன், காத்திருந்தேன். இன்று வரை காத்திருக்கேன். அவர் வரவேயில்லை’ என்றார்.
மாருதி அண்ணனுக்கு தாமதமாகத்தான், அதாவது அவரின் 40 ஆவது வயதில் திருமணம். அண்ணனும் அண்ணியார் விமலாவும் அவ்வளவு பாசமாவும் ஒற்றுமையாகவும் இருப்பார்கள். வீட்டுக்கு போனதும் காப்பி வந்துவிடும்.
திருமணத்திற்கு பின் விவேகானந்தர் கல்லூரியின் எதிரில் அப்பர்சாமி மேற்கு தெருவில் வாடகை வீட்டில் சில வருடங்கள் இருந்தார். அதன் பின் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள சினிவாச அவின்யூவில் அரசு பொது குலுக்கல் முறையில் கிடைத்த வீட்டில் குடிபுகுந்தார். துணைவியார் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அண்ணியார் உடல்நிலை சரியில்லாது, போனபோது அருகிலேயே இருந்து கவனித்தார். இருப்பினும் மனைவி காலமானபின் மனதளவில் பாதிக்கப்பட்டார்.
இரண்டு மகள்கள். முத்தவர் சுபாஷினி, இரண்டாமவர் சுஹாசினி. இருவரும் புனே நகரில் இருக்கிறார்கள். இவர் தனிமையில் இங்கு இருந்தார். சென்னையில் தான் இருக்க ஆசைப்பட்டார்.
மாருதி அண்ணனின் ஓவியங்கள் அழியாது, அவரின் புகழும் அழியாது.
கவின் மலர்
பத்திரிகையாளர்
என் பால்யத்தில், பள்ளிப் பருவத்தில், கல்லூரிக் காலத்தில் இதழ்களில் வாசித்த கதைகளின் நாயகிகளுக்கு நல்ல பெரிய உருண்டை விழிகள், மேடிட்ட கன்னங்கள், நிலா போன்ற அழகிய முகம் என ஓவியர் மாருதியின் நாயகிகளை லயித்து ரசித்திருக்கிறேன். ஓவியங்களுக்காக மட்டுமே சில தொடர்கதைகளை வாசித்திருக்கிறேன். அப்படியொரு மயக்கம் அவருடைய ஓவியங்கள் மீது.
நாகப்பட்டினத்தில் எங்கள் பக்கத்து வீட்டில் அவருடைய அட்டைப்பட ஓவியத்திற்காகவே ‘கண்மணி’ நாவலை வாங்குவார்கள். பக்கத்து வீட்டு அத்தை ஒரு முறை சொன்னார், “கவின்! இந்த ஓவியங்கள் அந்தப் பெண்கள் போட்டிருக்கும் தோடு டிசைன் அத்தனை அழகாக இருக்கும் கவனிச்சிருக்கியா?” என்றார். அதன் பின்னரே உற்றுப் பார்க்கத் தொடங்கினேன் அந்த டிசைன்களை. அவர் சொன்னது உண்மைதான். அதைப் பார்க்கையில் கூடுதலாக ஒன்றும் புலப்பட்டது. தோடு வரையும்போது, வெளிச்சம் பட்டு காதோரம் விழும் அதன் நிழலைக் கூட அவ்வளவு நுணுக்கமாக வரைந்திருப்பார்.
ஒளி முகத்தில் படுவதையும் முன்கூந்தலில், பின்கூந்தலில் பட்டு மின்னும் முடிக்கற்றைகளையும் அத்தனை அழகாக அவர் போல வேறொருவர் வரைந்து அந்தக் காலகட்டத்தில் நான் பார்த்ததில்லை. கதையை விட அவருடைய ஓவியங்களை அதிகம் ரசித்திருக்கிறேன்.
அதன்பின் பத்திரிகைப் பணியில் அவருடைய ஓவியங்களுக்காக அவரோடு பேசும் வாய்ப்புகள் கிடைத்ததை என் பேறெனவே கொள்கிறேன்.
அகிலன் கண்ணன்
எழுத்தாளர்
அவரை நேரில் சந்தித்துப் பேசியது நான்கைந்து முறைகள் மட்டுமே. அவை சுவையான பொழுதுகள். ஆரம்பத்தில் தினமணிகதிரில் எனது சிறுகதைகள் அவரது தூரிகையால் அலங்காரம் பெற்றன. எனது முதல் சிறுகதை தொகுப்பு ‘ யந்திரங்கள் ‘ முதல் பதிப்புக்கும் அவரே முகமும் பின்னலாய் பின்னட்டையும் தந்தார்!
‘தீபம்’ இதழிலும் இவரது ஓவியங்கள் தனித்துவம் பெற்றுள்ளன. தனது சொந்தப் பெயரான வி.ரங்கனாதனின் சுருக்கமாக ‘விர ‘ என்று தீபத்தில் வரைந்துள்ளார்.
குமுதம் எஸ்.ஏ.பி. ஒரு முறை வித்தியாசமான யோசனையில், பல ஓவியர்களைப் படம் வரையச் சொல்லி அந்தப் படங்களுக்கான கதைகளைப் பிரபல எழுத்தாளர்களை எழுதச் சொல்லி வாங்கி வெளியிட்டார். அப்படி மாருதி அவர்களது ஓவியத்திற்கு அகிலன் எழுதிய கதையும் உண்டு! (2.5.1978 தேதி ‘குமுதம்’ இதழில் ‘அடுத்தவன் மனைவி’ என்னும் தலைப்பில் அக்கதை வெளியானது)
ஓய்வறியா ஓவியம் …
எண்ணமும் வண்ணமும் இரண்டறக் கலந்து மனதைப் பேசும் ஓவியங்கள் தீட்டிய கைகள் ஓய்வுபெற்றன…
மருத்துவர் ருத்ரன்
ஓவியர்
மாருதி- சிறு வயதிலிருந்து நான் பார்த்து ரசித்த ஓவியர். போஸ்டர் கலர் பயன்பாட்டை அவரது ஓவியங்கள் மூலம் கற்றுக்கொள்ள முயற்சித்தவன் நான். அதற்காகவே 70களில் அவரை ராயப்பேட்டையில் சென்று பார்த்தேன். 2018இல் ஓவியக் கண்காட்சி ஒன்றில் ம.செ வுடன் அவரைப் பார்த்தபோது அதைச் சொன்னதும் கேட்டு ஆச்சரியத்துடன் மகிழ்ந்தார். என்னைப் போல் ஓவியன் எனும் அங்கீகாரம் இல்லாமல் படம் வரைபவர்களையும் அன்புடன் ஊக்கப்படுத்தும் பெருமனது உடையவர்.
ஒரு மாதத்திற்கு முன்பு கூட முகநூலில் புதிதாய் வரைந்து பதிவேற்றியவர்.
அவர் கைகளை என் கைகளில் பற்றிக் கொண்டு நின்ற நிமிடம் என் வாழ்வில் கிடைத்த வரம். வணங்கி வழியனுப்புகிறேன்.
ஜீவா
ஓவியர்
1986 என்று நினைக்கிறேன். கோவையில் நடந்த தொழிற்துறை ஓவியர் சங்க மாநாட்டிற்கு ஓவியர் மாருதி சிறப்பு விருந்தினர். அவருடன் ஒட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தேன். மதிய வேளையில் அருகில் இருந்த எங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று, இருவரும் டிவியில் பிரகாஷ் ஜா இயக்கிய ‘தாமுல் ‘ படம் பார்த்தோம். பின்னொரு முறை சென்னை மயிலாப்பூரில் இருந்த அவரது சிறிய அறையில் அவரை சந்தித்து அவர் போஸ்டர் கலரை லாவகமாகக் கையாளும் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன்.
கே.மாதவன், ஆர்.நடராஜ் பாரம்பரிய வரிசையில் அவர்கள் பாணியை கையாண்டு வெற்றி கண்ட ஓவியர் மாருதி! இளமையான மாருதியை மட்டும் நேரில் சந்தித்து இருக்கிறேன். முகநூலில் அவர் சேர்ந்தவுடன் மீண்டும் நட்பு தொடர்ந்தது. எங்கள் ‘We Love Art ‘ குழுவில் வரும் பல ஓவியங்களுக்கு அவர் கமெண்ட் செய்வதுண்டு.
கர்வமில்லா ஓவியருக்கு அஞ்சலி!
சுந்தரன் முருகேசன்
ஓவியர்
தம் இறுதிக் காலம் வரை தான் கைக்கொண்ட தூரிகை வழியாக ஓவியங்களை வரைந்து வரைந்து நம் கண்களுக்கு விருந்தளித்தவர் மாருதி.
என்னைப் போன்ற நூற்றுக்கணக்கானோர் ஓவியர் ஆவதற்குக் காரணமாக இருந்த பத்திரிகை ஓவியர்கள் பலருள் முக்கியமானவர். எங்களைப் போன்றவர்களுக்கு ‘வாஷ் ட்ராயிங்’ என்றால் என்ன என்பதற்கு அரிச்சுவடியாகக் காணக் கிடைத்தது மாருதி ஓவியங்கள்தான். அவற்றைப் பார்த்துப் பார்த்துக் கருப்பு வெள்ளையிலும் வண்ணங்களிலும் தீட்டித் தீட்டி எங்களை நாங்கள் மெருகேற்றிக் கொண்டோம்.
மாபெரும் கலை ஆளுமையான ஓவியர் மாதவனின் வண்ணத் தீற்றல்களில் தங்கள் மனதைப் பறிகொடுக்காத ஓவியர்கள் யாரும் இல்லை. அத்தகைய மாபெரும் ஆளுமையின் தொடர்ச்சியாகவும் இறுதியாகவும் வாழ்ந்த ஒரு வண்ணங்களின் ரசிகன் இவர்.
இளையவர்களை, வளர்ந்து வரும் ஓவியர்களைப் பாராட்டி ஊக்கம் தந்து வளர்த்துவிடும் அவரின் மாண்பு பாராட்டுக்குரியது. அவர் தன்னுடைய உயரங்களை என்றும் தலைக்கு மீது ஏற்றிக் கொண்டதில்லை.
புதுக்கோட்டை ரங்கநாதன் இறந்திருக்கலாம், ஓவியர் மாருதிக்கு என்றும் இறப்பு இல்லை. ஓவிய உலகில் அவரது பெயரை அவரது ஓவியங்கள் நிச்சயம் கூறிக் கொண்டே இருக்கும்.
ஸ்ரீமதி
எழுத்தாளர்
“நான் மாருதி பேசுகிறேன்.”
எப்போது அலைபேசியில் அழைத்தாலும் இப்படித்தான் தொடங்குவார்.
எத்தனை எத்தனை நினைவுகள். நான் எப்படி வாழ வேண்டும் என்று அவரது வாழ்க்கையையே எனக்கு உதாரணமாக கூறுவார். எங்கே, எப்படி நடந்துகொள்ள வேண்டும்? இந்த உலகம் எப்படி இருந்தது, இருக்கிறது, இனி இருக்கப் போகிறது? என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தவர்.
“சார். உங்களைப் பார்க்க வேண்டும்.அப்பாய்ன்மெண்ட் கொடுங்க” என்று கேட்பேன்.
“கிடையாது” என்பார்.
“ஏன் சார்?”
“மற்றவர்களுக்கு தான் அப்பாய்ன்மெண்ட் உங்களுக்கு கிடையாது. நீங்கள் எப்ப வேண்டுமானலும் வரலாம் .நீங்கள் என் நண்பர்” என்று சொல்வார்.
அவர் இறப்பைக் கண்டு பயப்படவே இல்லை. எப்போது பேசினாலும் அதை தான் எதிர் நோக்கிக் கொண்டிருப்பதாக சர்வசாதரணமாக சொல்வார்.
அவரது எதிர்பார்ப்பு பூர்த்தி அடைந்துவிட்டது.
மனுஷ்யபுத்திரன்
கவிஞர்
மாருதி இறந்துவிட்டார்.
மாருதியின் பெண்கள்
தலைவிரி கோலமாக
வார இதழ்களின் கதைகள் நடுவே
அழுதுகொண்டிருக்கிறார்கள்.
நீர் அன்னங்கள் போல
கண்களில் மிதக்கும்
அந்த உருண்டை விழிகள்
இப்போது கண்ணீரில் மிதக்கின்றன.
புன்னகை மாறாத
அந்த தளும்பும் கன்னங்கள்
துயரத்தில் வாடிவிட்டன.
மாருதி பெண்களின் முகத்தை
வரைந்தபிறகுதான்
‘நிலவு முகம்’ என்ற புலவனின் உருவகத்திற்கு
ஒரு உருவம் கிடைத்தது.
‘குடும்பப் பெண்’ என்ற
தமிழ் ஆணின் மூட்டமான கற்பனைக்கு
ஒரு சித்திரத்தை வழங்கியதே
மாருதியின் தூரிகைதான்.
மாருதியின் பெண்கள்
எப்போதும் தாய்மையுடன் இருந்தார்கள்
தம் வசீகரத்தால்
ஆண்களை தாழ்வுணர்ச்சி
அடையச் செய்பவர்களாக இருந்தார்கள்.
மாருதியின் பெண்கள்
‘ டயட்’ டில் நம்பிக்கையற்றவற்றவர்களாக
இருந்தபோதும்
அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்தார்கள்.
பருமனான, சற்றே உயரம் குறைந்த பெண்களையே
தமிழ் ஆண்கள் மோகிக்கிறார்கள் என
ஒருவர் எழுதியதை எங்கோ படித்தேன்
அதற்கு பழைய தமிழ்சினிமா கதாநாயகிகள் மட்டுமல்ல
மாருதியின் படங்களில் இருந்த பெண்களும்
காரணமாக இருந்திருக்கவேண்டும்.
மாருதியின் பெண்களை
திருமணம் செய்துகொள்ள விரும்பியவர்கள்
பிறகு இருட்டறையில்
சமரசம் செய்துகொண்டார்கள்.
எனக்கு மாருதியின் பெண்களைவிட
ஜெயராஜ்ஜின் பெண்களையே
மிகவும் பிடித்திருந்தது.
அவர்களைத்தான் நான் காதலித்தேன்.
அவர்களுக்காக
என் வாழ்வை பணயம் வைத்தேன்.
மாருதியின் பெண்கள் சுதந்திரமற்றவர்கள் எனவும்
ஜெயராஜ்ஜின் பெண்கள் விடுதலையடைந்தவர்கள் எனவும்
என் இளம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
ஆனால்,
வாழ்நாள் முழுக்க
என்னைப் பாதுகாத்தது என்னவோ
மாருதியின் பெண்கள்தான்.