No menu items!

மோடியை எதிர்த்து கமல்ஹாசன் போட்டி! – மிஸ் ரகசியா

மோடியை எதிர்த்து கமல்ஹாசன் போட்டி! – மிஸ் ரகசியா

“அண்ணாமலையோட பாத யாத்திரை தொடக்க விழாவுக்காக ராமேஸ்வரம் வந்திருக்கேன்” என்று காலையிலேயே போன் அடித்தாள் ரகசியா.

“ஏற்பாடெல்லாம் எப்படி இருக்கு?”

“மத்தியில ஆள்ற கட்சியாச்சே… ஏற்பாடுக்கா பஞ்சம். பேனர், கட் அவுட்னு தூள் கிளப்பறாங்க. பாஜகவைப் பொறுத்தவரை வரப் போற நாடாளுமன்ற தேர்தல்ல ராமநாதபுரத்துல மோடி நிப்பார்னு நம்பறாங்க. அதுனாலதான் அண்ணாமலை பாதயாத்திரையை ராமேஸ்வரத்துல துவக்குகிறார்னு பேசிக்கிறாங்க. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக கூட்டணியின் முதல் பிரச்சார நிகழ்ச்சி இதுதானாம்.”

“பாஜக கூட்டணினு பிரச்சாரம்னு சொல்ற ஆனா முக்கிய பெரிய தலையே வரலையே?”

“யாரைச் சொல்றிங்க, எடப்பாடி பழனிசாமியையா? அவருக்கு கடுப்பு. தன்னை நேர்ல வந்து கூப்பிடலனு. அது மட்டுமில்லாம, ஓபிஎஸ்க்கு வேற அழைப்பு கொடுத்திருக்காங்க. இதுல இன்னும் கடுப்பு.

“இருக்கத்தானே செய்யும்..ஆமா ஏன் ஓபிஎஸ்ஸை கூப்பிட்டாங்க?”

”இதே கேள்வியை தமிழ்நாட்டு பாஜகவின் துணைத் தலைவர் கரு.நாகராஜன்கிட்ட அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கேட்டிருக்காரு. உங்க பிரச்சினை புரியுது, அவரை வேணா நாங்க வேற இடத்துக்கு வந்து பாதயாத்திரைல கலந்துக்க சொல்றோம், துவக்க விழாவுக்கு வரவேண்டாம்னு சொல்லிடுறோம்னு சொல்லியிருக்காங்க.”

“பாவம் ஓபிஎஸ் நிலைமை இப்படியிருக்கு”

”பாவம்தான். ஆனா, ஓபிஎஸ்ஸை வர வேண்டாம்னு சொல்றோம்னதுக்கப்புறமும் எடப்பாடி தரப்பு ஏத்துக்கல. இப்ப முன்னாள் அமைச்சர் உதயகுமாரை அனுப்பி வைக்கிறாங்க. ரொம்ப முக்கியமா அண்ணாமலையை தூக்கிப் பிடிக்கிற நடை பயணத்துல எதுக்கு கலந்துக்கணும்கிற கேள்வியும் அதிமுககிட்ட இருக்கு ”
“அமித்ஷா வரார்னு தெரிஞ்சும் எடப்பாடி கெத்து காட்டுறாரே..ஆச்சர்யம்தான். ஒரு காலத்துல மோடி, அமித்ஷானா விழுந்தடிச்சு ஓடுவார்ல”

“தமிழ்நாட்ல தங்களை விட்டா பாஜகவுக்கு வழியில்லைன்னு எடப்பாடிக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. அதான் இப்ப தன் பங்குக்கு செக் வைக்கறார். இது மட்டுமில்லை, நாடாளுமன்றத் தேர்தலப்ப, தொகுதி பங்கீட்டு குழுவுல அண்ணாமலையை சேர்க்கக் கூடாதுன்னும் பாஜகவுக்கு எடப்பாடி கண்டிஷன் போட்டிருக்காராம்.”

”அங்க ராமேஸ்வரத்துல பாஜககாரங்ககிட்ட பேசினியா? எப்படி இருக்காங்க?”

“எல்லா உற்சாகமா இருக்காங்க. தமிழ்நாட்டுல ஆட்சியை பிடிச்சிட்டா மாதிரி உற்சாகமா இருக்காங்க. ஆனா எங்க பாத்தாலும் அண்ணாமலை புகழ்தான். இதை மத்த பாஜக தலைவர்கள் எப்படி எடுத்துப்பாங்கனு தெரியல”

“ராமநாதபுரத்துல மோடி நின்னா, அவரை எதிர்க்க திமுக தயாரா இருக்கா?”

“இதே கேள்வியை சில அமைச்சர்கள் முதல்வர்கிட்ட கேட்டிருக்காங்க. அதுக்கு அவர் சிரிச்சுட்டே ‘காமராஜரையே தோக்கடிச்ச கட்சி திமுக. மோடியை தோக்கடிக்க முடியாதா?’ன்னு திருப்பி கேட்டாராம். அப்படி கேட்டது மட்டுமில்லை.. ராமநாதபுரத்துல பிரதமர் நின்னா அவரை எதிர்கொள்ள இப்பவே திட்டங்களை போட ஆரம்பிச்சுட்டார். ஆகஸ்ட் 18-ம் தேதி ராமநாதபுரத்துல நடக்கப் போற மீனவர் மாநாட்டை இதுக்காக பயன்படுத்த திட்டமிட்டிருக்கார் முதல்வர் ஸ்டாலின். இந்த மாநாட்டுல மீனவ மக்களுக்காக நிறைய உதவித் திட்டங்களை முதல்வர் அறிவிக்கப் போறாராம். இதற்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்கிட்ட ஸ்பெஷல் உத்தரவுகள் போட்டிருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்துல இஸ்லாமியர்களும், மீனவர்களும் அதிகமா இருக்காங்க. அத்தனை பேர் வாக்குகளும் திமுகவுக்குதான் வரணும்னு சொல்லியிருக்கிறார். இஸ்லாமியர்களோட வாக்குகள் திமுகவை விட்டு போய்டாதுன்னு முதல்வர் உறுதியா நம்பறார்.”

”2019ல முஸ்லிம் லீக்குக்கு சீட் கொடுத்தாங்க. இந்த முறை அப்ப திமுகவே போட்டியிடுமா?”

“அங்க ஒரு ட்விஸ்ட் இருக்கு. மோடி போட்டியிட்டா ராமநாதபுரம் தொகுதில கமல்ஹாசனை நிக்க வைக்கலாம்னும் ஒரு ஐடியா இருக்காம். அவர் ராமநாதபுரத்துக்காரர்தானே”

“கமல் ஒத்துப்பாரா?”

“கமலுக்கு கோவைதான் ஆசை. அடுத்து தென் சென்னை. அதுக்கடுத்துதான் ராமநாதபுரம்”

”ராமநாதபுரத்துல பிரதமர் மோடி போட்டியிடுவாரா? டெல்லில என்ன சொல்றாங்க?”

“இல்லனு டெல்லில சொல்றாங்க. மோடி தென்னிந்தியாவுல போட்டியிட மாட்டார்னு உறுதியா சொல்றாங்க”

“வட இந்தியாவுல ஒரு தொகுதி தென்னிந்தியாவுல ஒரு தொகுதினு போட்டி போடுவார்னும் ஒரு நியூஸ் இருக்கே?”

“இல்லனுதான் டெல்லி நியூஸ் சொல்லுது. தமிழ்நாட்டுல போட்டியிட்டா இங்க நிறைய நேரத்தை செலவிட வேண்டியிருக்கும்னு டெல்லி பாஜக சொல்லுது. வட இந்தியாவிலேயே இந்த முறை கடுமையான போட்டி இருக்கும்னு பாஜக எதிர்பார்க்குது”

“சிறையில் செந்தில் பாலாஜி எப்படி இருக்கார்?

“இப்ப அவர் நிலைமை சரியில்லை. என்ன காரணம்னே தெரியலை திமுக தலைமை அவர் மேல கொஞ்சம் கோபமா இருக்கு. செந்தில் பாலாஜியை யாரும் சிறையில் போய் பார்க்கக் கூடாதுன்னு கட்சித் தலைமை உத்தரவு போட்டிருக்கு. கரூர் திமுககாரங்ககிட்ட இதுபத்தி கொஞ்சம் கடுமையாவே சொல்லி இருக்காங்க. அதேபோல் சிறையில் அமைச்சர்ங்கிற முறையில் செந்தில் பாலாஜிக்கு எந்த சலுகையும் கொடுக்க வேண்டாம். மீறித் தந்தா உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பேன்னு சிறைத் துறை அதிகாரிகள்கிட்ட அமைச்சர் ரகுபதி சொல்லி இருக்கார். சிறையில் செந்தில் பாலாஜியை சந்திக்க யாராவது மனு தந்தா அவர் யாருங்கிற விவரத்தை தனக்கு முன்னாடியே தரணும். அதுக்குப் பிறகுதான் அவங்களுக்கு அனுமதி தரணும்னும் ரகுபதி சொல்லி வச்சிருக்காராம். இந்த கெடுபிடிகளை செந்தில்பாலாஜி ரசிக்கலனும் சிறையிலிருந்து வரும் நியூஸ் சொல்லுது.”

“பாவம்தான். அவர் சிக்கல் இப்போதைக்கு முடியாது போல. திமுகவுலயும் நிறைய பிரச்சினை இருக்கு போல. கோவை திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக் பேசுனதுனு ஒரு ஆடியோ சுத்திக்கிட்டு இருக்கே?”

“ஆமாம். முன்னாடி பிடிஆர் மாட்டுனார். இப்ப இவர். பாவம் நான் அவனில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் திமுககாரங்க யாரும் அதை நம்புற மாதிரி தெரியல. அவருக்கு திமுகவுல இனி கஷ்ட காலம்தான். அதே மாதிரி திருநெல்வேலிலயும் ஒரு கவுன்சிலர் ஆடியோ வெளிவந்திருக்கு. பாஜகதான் ஆடியோ வீடியோவுல மாட்டுவாங்கனா இப்ப திமுகவுக்கும் அந்த நிலைமை வந்துருச்சு”

”திருநெல்வேலி திமுக பொறுப்பாளரா இருந்த அமைச்சர் ராஜ கண்ணப்பனை மாத்தி இருக்காங்களே?”

“மாவட்ட பொறுப்பாளர்களா இருக்கற சில அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களோட அதிகாரத்துல தலையிடறதா கட்சித் தலைமைக்கு புகார் போயிருக்கு. இதுபத்தி கட்சித் தலைமை நடத்தின விசாரணைக்குப் பிறகுதான் திருநெல்வேலி பொறுப்பாளரா இருந்த ராஜ கண்ணப்பனை நீக்கி, அங்க தங்கம் தென்னரசுவை நியமிச்சு இருக்காங்க. இன்னும் சில மாவட்ட பொறுப்பாளர்களும் மாற்றப்படுவாங்கன்னு பேச்சு இருக்கு.”

“மேயர்களுக்கும் இதேபோல எச்சரிக்கை போயிருக்காமே?”

“சில மேயர்களின் செயல்பாடு நாடாளுமன்றத் தேர்தல்ல கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்னு திமுக தலைமை நினைக்குது. அதனால சரியா செயல்படாதவங்க மாற்றப்படுவார்கள்னு எச்ச்சரிக்கை அனுப்பி இருக்காங்க. அவங்க மட்டுமில்லை மாவட்ட செயலாளர்களும் கிலியோடத்தான் இருக்காங்க. கருணாநிதி நூற்றாண்டு விழாவை திமுக சார்பாக எல்லா மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தணும்னு முதல்வர் அறிவுறுத்தி இருக்கார். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எல்லா மாவட்டங்களிலும் கருணாநிதிக்கு சிலை வைக்கணும்னும் அவர் சொல்லி இருக்கார். இப்ப கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பா செய்யாத மாவட்டங்கள் பத்தின விவரங்களை திமுக தலைமை சேகரிச்சுட்டு வருது. அப்படி செய்யாதவங்க மேல நடவடிக்கை எடுக்கப் போறாங்களாம்.”

“தினகரன் – ஓபிஎஸ் ட்வின்ஸ் பத்தி ஏதும் நியூஸ் இருக்கா?”

“டெல்லியில இருக்கற தன்னோட தொடர்பைப் பயன்படுத்தி பாஜக்கிட்ட தினகரன் இன்னும் பேசிட்டுதான் இருக்காராம். அதிமுககிட்ட தங்களுக்கும் சேர்த்து பாஜக சீட்களை வாங்கும்னு தினகரன் நம்பறார். அப்படி வாங்கினா, தனக்கும், ஓபிஎஸ் மகனுக்கும் பாஜக சீட் தரும்னு நம்பறார் தினகரன். நம்பிக்கதானே வாழ்க்கை’ என்று சிரித்துக் கொண்டே போனை வைத்தாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...