No menu items!

சத்தம் இல்லாத சென்னை வேண்டும்: அபாயமாகும் ஒலி மாசு!

சத்தம் இல்லாத சென்னை வேண்டும்: அபாயமாகும் ஒலி மாசு!

சென்னை அண்ணா நகரில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இது. ஒரு இளம் தம்பதி இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். பின்னால் வந்துகொண்டிருந்த கார், பைக்கை ஓவர்டேக் செய்யும் போது, திடீரென காரோட்டி அதித சத்தம் எழுப்பும் ஹாரனை அடிக்கிறார். அந்த சத்தத்திலேயே அதிர்ச்சியாகி பைக்கில் பின்னால் உட்கார்ந்து வந்த பெண் கீழே விழுகிறார். காரும் பைக்கும் ஒன்றுடன் ஒன்று மோதாமலேயே விபத்து நிகழ்கிறது. காரோட்டி நடந்தது அறியாமலே சென்றுவிட்டார். ஆனால், கீழே விழுந்த பெண் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்துக்குக் காரணம் கார் ஹாரன் ஒலி மட்டுமே.

இந்த சம்பவம் நிகழ்ந்து ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இப்போதும் பெரிய மாற்றமில்லை.

சென்னையில் பல ஆட்டோக்கள் சைலன்சரில் மாற்றம் செய்து டட்டட்டட்டட்…. என்று ஒலிக்கதான் செல்கின்றன. இளைஞர்கள் பைக்குகளில் குழந்தை அழுவதுபோன்று, விலங்குகள் கத்துவது போன்ற ஹாரன்களை வைத்திருக்கிறார்கள். இந்த வண்டிகள் எல்லாம் சாலைகளில் இடைவிடாது ஒலித்தபடி செல்லும்போது, சாலையில் போகும் மற்ற வாகன ஓட்டிகளை மட்டுமல்லாமல் நடந்து செல்பவர்களையும் பீதி அடையச் செய்கின்றன.

செவிக்குள் ஸ்பீக்கர் நுழைந்ததுபோல கோயில் திருவிழாக்களிலும் திருமண நிகழ்வுகளிலும் ஒலிக்கும் பாடல்கள் வேறு ரகம். காதுக்குள் நுழைந்து கபாலத்தையே பாதிக்கும் சத்தம் அது. பிறந்த நாள் தொடங்கி இறந்த நாள் வரை தெறிக்கும் பட்டாசு சத்தம் இதயம் பலமாக இருப்பவர்களுக்கும் படபடப்பை ஏற்படுத்தக்கூடியது.

இப்படி எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் தேவையற்ற அல்லது அதிகப்படியான ஒலி, சென்னை மாநகர வாழ்க்கையையே நரக வாழ்க்கையாக்கி வருகிறது. சென்னையில் நம் கண்ணுக்குத் தெரியாமலேயே காதை, கவனத்தை, உடலை, உணர்வை அக்கு வேறு ஆணி வேறாக டேமேஜ் ஆக்குவதில் ஒலி மாசு என்னும் வில்லன் விஸ்வரூபமெடுத்து நிற்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? இந்தியாவிலே இரைச்சலான நகரம் சென்னை தான் என்று சொன்னால் நம்புவீர்களா?

ஆம், சமீபத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்  (CPCB) நடத்திய ஆய்வுகளின் படி இந்தியாவிலே அதிகம் ஒலி மாசு சென்னையில்தான் பதிவாகியுள்ளது.

சென்னையின் நெருக்கமான கட்டிடங்கள், கட்டுமானப் பணிகள், மெட்ரோ ரயில் மற்றும் மழை நீர் வடிகால் பணிகளால் சாலைகளின் அகலம் குறைந்துள்ளது, மக்களின் அன்றாட வாழும் முறைகள் போன்றவற்றால் கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாகவே ஒலி மாசு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஒலி மாசு எவ்வளவு இருக்கலாம்?

பொதுவாக, ஒலியின் தீவிரம் டெசிபல்களில் (dB) அளவிடப்படுகிறது. மனிதக் காது கேட்கக்கூடிய மிக மெல்லிய ஒலி 1 Db ஆகும், அதே போல் மனிதன் கேட்பதற்குப் பாதுகாப்பான அளவுகளாக 50 முதல் 55 டெசிபல்களை உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ளது. 85 டெசிபலுக்கு மேல் சென்றால் அது மனிதனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அளவுகளாக கருதப்படுகிறது.

இதுபோல், நம் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் ஒலி மாசுவுக்கு தர அளவினை நிர்ணயித்துள்ளது. அதன்படி குடியிருப்புப் பகுதிகளில் பகலில் 55 டெசிபிலும் இரவில் 45 டெசிபிலும், மார்க்கெட் போன்ற கமர்ஷியல் பகுதிகளில் பகலில் 65 டெசிபிலும் இரவில் 55 டெசிபலும், தொழிற்சாலை பகுதிகளில் பகலில் 75 டெசிபிலும் இரவில் 65 டெசிபிலும் இருக்கலாம் என்றும் நிர்ணயித்துள்ளது. ஆனால், சென்னையில் இந்த இடங்களில் எல்லாம் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான சத்தமே உள்ளது என்கிறது மாசு கட்டுப்பாட்டு வாரியம்.

இருபது ஆண்டுகளுக்கு முன் அண்ணா பல்கலைக்கழகம் சென்னையில் ஒலி மாசு அளவீடு செய்தபோது அதன் அளவீடு 60 டெசிபில்தான் இருந்தது. அதுவே 2000ஆம் ஆண்டு 75 டெசிபிலாகவும் இப்போது 85 டெசிபிலாகவும் உயர்ந்துள்ளது. காலை எட்டு மணி முதல் பத்து மணி வரையிலும் மாலை 6 மணி முதல் எட்டு மணி வரையிலும் 85 டெசிபில் அளவு ஒலி மாசு என்பது சாதாரணமாகிவிட்டது. ஒரு தொழிற்சாலையின் ஒலி மாசுவிற்கு நிகரான அளவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலி மாசு ஏன் ஆபத்தானது?

காதுகளில் துல்லியமான சின்ன ஒலிகளை கேட்பதற்கு இன்னர் ஹேர் செல்ஸ், 100 டெசிபெலுக்கு மேற்பட்ட அதிக சத்தத்தை கேட்பதற்கு அவுட்டோர் ஹேர் செல்ஸ் என்று இரண்டு வகையான ஹேர் செல்ஸ்கள் இருக்கிறது. அதிக ஒலிகள் ஏற்படுத்தும் அதிர்வுகளால் இவைகள் பாதிக்கப்பட்டாலும், எதிர்பாராத நேரத்தில் திடீரென தாக்கும் ஒலி மாசினாலும் கேட்கும் திறனை உடனே இழக்க நேரிடலாம். குறிப்பாக, 65-70 டெசிபல் சத்தத்தை சில மணி நேரம் தொடர்ந்து கேட்டு வந்தால் அது நமக்கு எரிச்சலூட்டும் இரைச்சலாக மாறி விடுகிறது. இதுவே 85 டெசிபல் சத்தத்தை இரண்டு மணி நேரத்திற்கும், 100 டெசிபல் சத்தத்தை 15 நிமிடங்களும், 120 டெசிபல் சத்தத்தை 2 நிமிடங்களும் கேட்டல் அது நம் காதுகளின் கேட்கும் திறனைப் பாதிக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள்.

ஒலி மாசினால் பாதிக்கப்படும் குழந்தைகள் சரியாக செய்யக்கூடிய ஒரு செயலை தவறாக செய்ய ஆரம்பிக்கும் வாய்ப்புகள் அதிகம்.


85 டெசிபில் ஒலி மாசில் வருடம் முழுவதும் வேலை பார்ப்பவர்களுக்கு காது கேளாமை ஏற்பட்டு விடும் ஆபத்து இருக்கிறது.

சாலைகளில் அதி அவசரமாக செல்லும் வாகனங்கள் எழுப்பும் ஒலியால் நமது உடம்பில் உடனடியாக இரத்த அழுத்தம் கூடி இதயத்தை பாதிக்கச் செய்யும். இரைச்சல் சத்தத்தை நம் காதுகள் கேட்கும் பொழுது அதிக அழுத்தம், இரத்த அழுத்தம், செவி கேளாமை, தூக்கமின்மை, சோர்வு ஆகியவை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக, சென்னையில் கட்டுமானப் பணிகள், போக்குவரத்து, ஒலிபெருக்கி பயன்பாடு போன்றவற்றால் மக்களின் தூக்கமின்மையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது புள்ளி விவரங்கள்.

அதிக ஒலி மாசிற்கு உள்ளாகுபவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஒரு ஆய்வு.

ஒலி மாசை தவிர்க்க என்ன செய்யவேண்டும்?

தொழிற்சாலை இயந்திரங்கள், அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள், வீட்டு உபயோக பொருட்கள், கட்டிட பணிகள், மின் விசைகள், ஒளிபரப்புக் கருவிகள், ஒலிபெருக்கி, ஆடல் பாடலுக்கான பொழுதுபோக்குச் சாதனங்கள் என இரைச்சல் உண்டாவதற்கு பல காரணிகளாக இருந்தாலும், சென்னை நகரத்தின் 60-70% இரைச்சலுக்குக் காரணமாக இருப்பது வாகனப் போக்குவரத்து தான். ஆம், சென்னையின் வாகனங்கள் தான் இந்நகரின்  ஒலி மாசிற்கான முக்கியக் காரணம்,

வெளிநாடுகளில் பின்னால் வரும் வாகன ஓட்டி ஹாரன் அடித்தால் முன்னால் செல்லும் வாகன ஓட்டி தவறு செய்வதாக அர்த்தம். ஆனால், சென்னையில் முன்னால் செல்பவர் தவறே செய்யாமல் இருக்கும்போதும் பின்னால் வருபவர்கள் வீணாக ஹாரன் அடித்து டென்ஷனை ஏற்றுகிறார்கள்; தனக்கும் ஏற்றிக்கொள்கிறார்கள்.

சிக்னலில் சிவப்பு விளக்கு எறிவது நின்று செல்வதற்காகத்தான். ஆனால், சிக்னல்களில் பச்சை விளக்குக்காக காத்திருக்கும்போதும் ஹாரன்களை விடாமலும் விட்டுவிட்டு ஒலிப்பவர்கள் இருக்கிறார்கள். நம்மில் பலரிடமும் தெரியாமலேயே ஒட்டிக்கொண்ட மோசமான பழக்கம் இது. இது மாற வேண்டும். அவசியமாக இருந்தால் மட்டுமே ஹாரன் ஒலியை எழுப்ப வேண்டும் என்பதை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

திருமண நிகழ்ச்சிகளின் அதிக ஒலியால் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே சிலர் மரணமடைந்த ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளும் நம் நாட்டில் நிகழ்ந்துள்ளன. எனவே கோயில்கள், திருத்தல வழிபாடுகளின்போதும், திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளின் போதும் மற்றவருக்கு இடையூறு செய்யாதவண்ணம் ஒலி அளவை குறைத்து வைக்கலாம்.

மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அதிக ஒலி எழுப்புவது அபராதத்திற்குரிய தண்டனையாக கருதப்படுகிறது. ஆனால், ஹெல்மெட் போடாததுக்கும், சிக்னல் மீறி போகிறவர்களையும் மடக்கி பிடிக்கும் போக்குவரத்து போலீசார் அதிக ஒலி எழுப்பும் வாகன ஓட்டிகளை பிடித்து நடவடிக்கை எடுப்பதில்லை. இதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

அரசு விதிகளின்படி, அமைதியான இடமாகக் கருதப்படும் பள்ளி கல்லூரிகளைச் சுற்றி 100 மீ தொலைவில் எந்த வணிக வளாகமும் தொழிற்சாலையும் இருத்தல் கூடாது, ஆனால், நகரின் பல இடங்களில் இது சரியாக கடைபிடிக்கப்படுவது இல்லை. இதனையும் அரசு முறைப்படுத்த வேண்டும்.

ஒலி மாசுபாடு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள் 2000, எந்த ஒலி-உமிழும் கருவியும் பரிந்துரைக்கப்பட்ட வரம்பைத் தாண்டி இரவில் செயல்பட முடியாது என்று கூறுகிறது. ஆனால், இன்று வரை பல கட்டுமானப் பணிகள் இரவில்தான் நடக்கின்றன. மேலும், நாள் முழுவதும் அமைதியான பகுதிகளிலும், இரவு 10 மணிக்குப் பிறகு குடியிருப்பு பகுதிகளிலும் சத்தம் போடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. மீறல்களுக்கு 1,000 முதல் 1 லட்சம் வரை அபராதம் விதிக்க CPCB பரிந்துரைக்கிறது. ஆனால், அதிக சத்தம் வருவதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கான அலைவரிசை மற்றும் உபகரணங்கள் நம் காவல்துறையிடமே இல்லை என்பது எவ்வளவு அவலமானது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக நீர் மாசு, காற்று மாசு போன்று ஒரு சூழலியல் பிரச்சினையாகக் கருதும் அளவிற்கு நாம் ஒலி மாசுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால், இனிமேல் இப்படி இருக்க முடியாது என்பதையே, அண்மைக் காலமாக ஒலி மாசு பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருவது காட்டுகிறது.

எச்சரிக்கையாக இருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...