முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்தது பேசுபொருளாகியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள், ‘அப்படியானால் நீட் தகுதித் தேர்வு ஏன்’ என கேள்வி எழுப்பியுள்ளார்கள். இது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மத்திய அரசு ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டது? இது என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும்?
ஜீரோ மார்க் வாங்கியவர்களும் பாஸ்!
இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். இதனடிப்படையில், 2024ஆம் ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடிவுகள், ஜூன் 2வது வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்யமாக எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்ற மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவிப்பும் நேற்று வெளியானது. ஏற்கெனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்தநிலையில், 3வது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணாக்கர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் 8 ஆயிரத்துக்கும் கூடுதலான முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் போகும் என்றும், அந்த இடங்களை நிரப்ப தகுதியான மாணவர்கள் இல்லை என்பதால் தான் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக மத்திய அரசின் தரப்பிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பிலும் கூறப்படுகிறது.
ஆனாலும், நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தவர்களும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்ற மத்திய அரசின் இந்த அறிவிப்பு பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் தரத்தை அதிகரிக்கவே நீட் தகுதித் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளதாக நீட் ஆதரவாளர்கள் சொல்லி வரும் நிலையில், ஜீரோ மதிப்பெண்கள் பெற்றுள்ளவர்களும் மேற்படிப்பு படிக்க முடியும் என்பது எப்படி தகுதித் தேர்வாக இருக்க முடியும் என எதிர் தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
அரசியல் தலைவர்கள் இது பற்றி என்ன சொல்கிறார்கள்?
நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் – முதல்வர் காட்டம்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வின் பயன் பூஜ்ஜியம் தான் என்பதை, மத்திய பாஜ அரசு ஒப்புக் கொண்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கட் ஆப் மதிப்பெண் ஜீரோ என குறைத்தது, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வை அர்த்தமற்றதாகிவிட்டது.
நீட் தேர்விற்கும் தகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை நீண்ட காலமாக கூறி வருகிறோம். பல உன்னதமான உயிர்கள் இழந்தாலும் மனம் தளராத மத்திய அரசு தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. பல உயிர்களை பழிவாங்கும் நீட் தேர்வை மத்திய அரசு நீக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
அம்பலமான சூழ்ச்சி – உதயநிதி அறிக்கை
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘ஒன்றிய அரசின் புதிய அறிவிப்பு நீட் தேர்வின் சூழ்ச்சியை அம்பலமாக்கியுள்ளது. தகுதி, தகுதி என்று சொல்லிவிட்டு, நீட் தேர்வை எழுதினாலே முதுநிலை மருத்துவம் படிக்கலாம் என்றால், அந்த தேர்வை ஏன் நடத்த வேண்டும்? தனியார் பயிற்சி மையங்களையும் – தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் வளப்படுத்துவதற்கான ஏற்பாடு தான் நீட் தேர்வு என்று திமுக ஆரம்பம் முதல் கூறி வந்தது இன்றைக்கு உண்மையாகியுள்ளது. மருத்துவராகும் கனவுடன் புறப்படும் நம் ஏழை – எளிய பிள்ளைகளை மரணக்குழியில் தள்ளும் நீட் அநீதிக்கு, ஒன்றிய அரசு பதில் சொல்லும் நாள் தொலைவில் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவ கல்லூரிகளுக்காக செய்த மாற்றம் – அன்புமணிஇராமதாஸ்
பா.ம.க. தலைவரும் மருத்துவருமான அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பாண்டிற்கான முதுநிலை நீட் தேர்வில் 30 பேர் ஒற்றை இலக்கத்திலும் 14 பேர் பூஜ்ஜியம் மதிப்பெண்களும் 13 எதிர்மறை மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு இப்போது கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையில் உயர்த்தாது, கண்டிப்பாக குறைக்கும். இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.
மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் 8 ஆயிரத்துக்கும் கூடுதலான முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் போகும் என்றும், அந்த இடங்களை நிரப்ப தகுதியான மாணவர்கள் இல்லை என்பதால் தான் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக மத்திய அரசின் தரப்பிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பிலும் கூறப்படுகிறது. இது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் ஆகும். காலியாக இருக்கும் இடங்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவை தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் தான் உள்ளன. அவற்றின் வருமானம் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
முதுநிலை நீட் தேர்வுக்கான விதிகளின்படி, மொத்தம் 800 மதிப்பெண் கொண்ட தேர்வில் பொதுப்போட்டிப் பிரிவினருக்கு 291 மதிப்பெண்களும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 257 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதிய 2 லட்சத்து 517 பேரில், 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மேற்கண்ட மதிப்பெண்களை பெற்று முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் உள்ள மொத்த இடங்களே 45,337 தான். அவற்றை நிரப்ப அந்த இடங்களை விட கிட்டத்தட்ட மும்மடங்கினர் தகுதி பெற்று இருக்கும் போது, தகுதி மதிப்பெண்களை குறைத்து கூடுதலாக 80,000 பேருக்கு தகுதி வழங்க வேண்டிய தேவை என்ன?
முதுநிலை மருத்துவப் படிப்பில் காலியாக இருக்கும் இடங்களில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்கள் தனியார் கல்லூரிகளில் தான் உள்ளன. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தமிழக அரசின் கல்வி நிறுவனங்களில் ஆண்டு கல்விக் கட்டணமே ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை தான். ஆனால், தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கல்விக்கட்டணம் ரூ.40 லட்சத்துக்கும் அதிகம் ஆகும். இந்த அளவு கல்விக்கட்டணத்தை செலுத்துவது இதுவரை தகுதி பெற்ற மாணவர்களால் சாத்தியமில்லை என்பதால் தான், 8000 இடங்கள் நிரம்பவில்லை. இப்போது அந்தக் கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு புதிய போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கவே தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டு 80,000 பேருக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது சமூக அநீதி ஆகும்.
முதுநிலை மருத்துவக் கல்வி இடங்கள் வீணாகக் கூடாது, அவ்வாறு வீணானால் மருத்துவ வல்லுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்விக் கட்டணத்தை குறைத்து, அந்த இடங்கள் அனைத்தையும் அரசே கலந்தாய்வு மூலம் நிரப்பினால், ஏற்கனவே தகுதி பெற்ற மாணவர்களைக் கொண்டு அனைத்து இடங்களையும் நிரப்ப முடியும். ஆனால், தகுதியான மாணவர்கள் தேவையில்லை, பணம் வைத்துள்ள மாணவர்கள் தான் தேவை என்று தேசிய மருத்துவ ஆணையமும் தனியார் கல்லூரிகளும் எதிர்பார்ப்பது தான் அனைத்து சிக்கல்களுக்கும் சீரழிவுகளுக்கும் காரணம் ஆகும்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு 2010-ஆம் ஆண்டு முதன்முறையாக அறிவிக்கப்பட்ட போது, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதும் மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும் தான் அதன் நோக்கங்கள் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அவை இரண்டுமே நடக்கவில்லை. மாறாக தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தகுதியைப் பற்றிக் கவலைப்படாமல் கோடிக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதற்கு துணை செய்வதற்காகவே நீட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது இப்போது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும் மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதே உண்மை. எனவே, மருத்துவப் படிப்புக்கான அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
நீட் வெறும் கண்துடைப்பு என்பது உறுதியாகியுள்ளது – வைகோ
மதிமுக நிறுவன பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு தான் தகுதி என்று ஒன்றிய பாஜக அரசு விடாப்பிடியாக இருந்து வரும் நிலையில், தற்போது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவித்திருப்பதன் மூலம் நீட் முடிவு தேர்வு வெறும் கண்துடைப்பு என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது. மருத்துவக் கல்விக்கு நீட் என்பது ஒரு மோசடியான தகுதித் தேர்வு என்பது தெரிகிறது. தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக 20 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதே நிலைதான் பிற மாநிலங்களிலும் இருக்கிறது. எனவே ஒன்றிய பாஜக அரசு மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவதை நிறுத்த வேண்டும்’ தெரிவித்துள்ளார்.