No menu items!

மோடி Vs சுப்ரமணியன் சுவாமி – மிஸ் ரகசியா

மோடி Vs சுப்ரமணியன் சுவாமி – மிஸ் ரகசியா

“உதயநிதியோட வேலைப்பளு கூடிட்டே போகுது” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“உதயநிதிக்கு அப்படி என்ன வேலைப்பளு கூடியிருக்கு?”

“இனி கட்சி நிர்வாகிகள் இல்ல திருமணங்கள், மாவட்டங்கள்ல அமைச்சர்கள் நடத்தும் நலத் திட்ட நிகழ்ச்சிகள்ல முதல்வருக்கு பதிலா இனி உதயநிதி ஸ்டாலின்தான் கலந்துப்பார். அவரை வச்சு நடத்துங்க. முதல்வரை டிஸ்டர்ப் பண்ணாதீங்கன்னு அறிவாலய தலைமை திட்டவட்டமா சொல்லிடுச்சாம். இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏத்த மாதிரி படப்பிடிப்பை வச்சுக்கணும்னு உதயநிதி ஸ்டாலின் கிட்டயும் கட்சித் தலைமை சொல்லி இருக்கிறது. முதல்வருக்கு சமீபகாலத்துல வந்த முதுகு வலியால அவரோட பயணங்களை முடிஞ்சவரைக்கும் குறைக்க இந்த ஏற்பாட்டை செஞ்சிருக்கறதா சொல்லப்படுது”

“திமுகவுக்கு இது புதுசு கிடையாதே. ஏற்கெனவே கலைஞர் முதல்வரா இருந்தப்ப, இப்படித்தானே ஸ்டாலினுக்கு புரொமோஷன் கொடுத்தாங்க. இப்ப கலைஞர் இடத்துல ஸ்டாலின் இருக்காரு. ஸ்டாலினோட பழைய இடத்துக்கு உதயநிதி வர்றாரு.”

“முதல்வர் – மம்தா சந்திப்பைப் பற்றி ஏதாவது தகவல் இருக்கா?”

“அவங்க ரெண்டு பேசுமே சொல்லி வச்சாப்பல நாங்கள் அரசியல் பேசலைன்னு சொல்றாங்க. ஆனா அது உண்மை இல்ல. அரசியலைப் பத்திதான் அவங்க முக்கியமா பேசினாங்கன்னு அறிவாலயத்துல பேசிக்கறாங்க. இந்த சந்திப்புல காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பு பற்றி மம்தா பேச முற்பட அதை தொடக்கத்திலேயே மறுத்திருக்கார் முதல்வர். இப்படி செஞ்சா பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிரியும். அது பாஜகவுக்கு சாதகமா மாறிடும்னு முதல்வர் சொல்லி இருக்கார். தவிர ராகுல் காந்தியோட நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுத்திருக்குன்னும் சொல்லி இருக்காரு. மம்தாவும் அவர் சொன்னதை கவனமா கேட்டுக்கிடாராம். அதேநேரம் இந்த சந்திப்பால முதல்வர் மேல காம்ரேட்கள் வருத்தத்தில இருக்காங்கன்னும் செய்தி வருது. இல.கண்ச்சன் மூலமா மம்தாவையும் ஸ்டாலினையும் வளைச்சுப்போட பாஜக நினைக்குதோன்னு அவங்க சந்தேகப்படறாங்க.”

“சமீப காலமா ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைகள்ல திமுக தீவிரமா இருக்கே?”
“ஆளுநரை எதிர்ப்பதன் மூலம் பாரதிய ஜனதாவை கடுமையாக இனி விமர்சனம் செய்யறதுன்னு திமுக முடிவு செஞ்சிருக்காம். அதோட முதல் கட்டமாத்தான் ஆளுநரை திரும்ப பெறச்ச்சொல்லி திமுக கூட்டணி எம்பிக்கள் சார்பில் ஜனாதிபதிக்கு மனு கொடுத்திருக்காங்க.”

“இது ஆளுநருக்கு கூடுதல் பிரஷரைக் கொடுக்குமே?”

“ஜனவரி முதல் வாரம் இல்லைன்னா பிப்ரவரி முதல் வாரம் தமிழக சட்டப்பேரவை கூடணும். பொதுவா ஆளுநர் உரையோடத்தான் சட்டப்பேரவை கூட்டம் தொடங்களும். பெரும்பாலும் ஆளுநர் உரையை ஆளும் அரசு தயாரிக்கும். ஆளுநர் அதை அப்படியே வாசிப்பார். அதுதான் மரபு. ஆனா முன்ன சென்னாரெட்டி ஆளுநரா இருந்தப்போ, ஜெயலலிதா அர்சு தயாரிச்ச உரையில இருந்த குறிப்பிட்ட சில பகுதிகளை வேணும்னே படிக்காம தவிர்த்துட்டாரு. ஆனா அப்போதைய பேரவைத் தலைவர், அதை ஆளுநர் வாசிச்சதா சட்டசபை பதிவேட்டில் பதிவு செய்தார். இந்த முறை சென்னாரெட்டி பார்முலாவை ஆர்.என்.ரவி பாலோ செய்வாரா இல்லை மோதல் இல்லாம பாத்துக்குவாராங்கிற விவாதம் இப்பவே எழுந்திருக்கு. அதே நேரத்துல இந்த முறை குடியரசு தினத்துல இந்த முறை ஆளுநருக்கு பதில் முதல்வர் ஏன் கொடியேற்றக் கூடாதுங்கிற யோசனை அறிவாலயத்தில் உலா வரத் தொடங்கி இருக்கு. இப்படி ஆளுநருக்கு எதிரா திமுக வரிஞ்சு கட்டிட்டு நிக்குது.”

“சுதந்திர தினத்தில் முதல்வர் கொடியேற்றுவார் குடியரசுத் தினத்தில் ஆளுநர் கொடியேற்றுவார். இதுதானே மரபு”

“ஆமாம். ஒரே ஒரு முறை இது மாறியிருக்கிறது. 2017ல் ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது ஆளுநர் வித்யாசகர் ராவ் மகாராஷ்டிரா, தமிழ் நாடுனு ரெண்டு மாநிலங்களுக்கு முதல்வராக இருந்தார். அவர் மகாராஷ்ட்ராவுல கொடியேத்தினதுனால இங்க ஓபிஎஸ் தேசியக் கொடியை ஏற்றினார். குடியரசுத் தினத்தில் கொடியேற்றிய ஒரே முதல்வர் என்ற பெயர் அப்போது ஓபிஎஸ்க்கு கிடைத்தது. ஆனால் இப்போது ஆர்.என்.ரவி இங்கு மட்டுமேதானே ஆளுநராக இருக்கிறார். அவர் கொடி ஏற்ற வேண்டும் என்பதுதானே அரசமைப்பு சட்ட விதி?”
”தெரியவில்லை. முதல்வர் கொடியேற்ற வாய்ப்பு இருக்கிறதா என்று திமுகவினர் பார்க்கிறார்கள்”

“மோதல் முற்றிக் கொண்டிருக்கிறது போல..எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. இன்னொரு மோதல் பற்றியும் உன் கிட்ட கேக்கணும். சுப்ரமணிய சுவாமிக்கும் பாஜகவுக்கும் என்ன பிரச்சினை?”

“டெல்லி சோர்ஸ்ல விசாரிச்சேன். மோடி, அமித்ஷா மேல சுப்ரமணியன் சுவாமி கடுமையான கோபத்துல இருக்கிறார். சமீபத்திய தனது ட்விட்டர் பதிவில் ‘என் மீது ஹரேன் பாண்டியா போன்ற ஒரு முயற்சியை மோடி, அமித்ஷா திட்டமிடவில்லை என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். ஹரேன் பாண்டியா பாஜகவை சேர்ந்தவர். குஜராத்தின் முன்னாள் அமைச்சர். 2003ல் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னை சுட்டுக் கொல்லப்பட்ட ஹரேன் பாண்டியாவுடன் ஒப்பிட்டு சுப்ரமணியன் சுவாமி குறிப்பிட்டிருப்பது பாஜகவில் பெரிய சர்ச்சையை உண்டு பண்ணியிருக்கிறது. அவரை பாஜகவில் வச்சிருக்கிறதா வெளியேற்றுவதான்ற குழப்பத்துல மோடி-அமித்ஷா டீம் இருக்கு.”

“இந்தியாவையே கட்டுப்படுத்துறவங்களால் சுப்ரமணியன் சுவாமியை கட்டுப்படுத்த முடியவில்லையா?”

“என்ன செய்யறது? அவர்கிட்ட இருக்கிற ரகசியங்கள் அப்படி” என்று கூறி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...