1987 டிசம்பர் 24… தமிழ்நாடு அரசியலில் ஒரு திருப்புமுனை நாள். தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வென்று பத்தாண்டுகளுக்கு மேல் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். மரணமடைந்த நாள். அன்று இரவு எம்.ஜி.ஆரின் இல்லமான ராமாவரம் தோட்டத்தில் என்ன நடந்தது என்பது இன்று வரை மர்மம்தான். இந்நிலையில், அன்று ராமாவரம் தோட்டத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த முன்னாள் காவல்துறை அதிகாரி என். தாமோதரன் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு இந்த அளித்த பேட்டியில் பல தகவல்கள் முதன்முறையாக பகிர்கிறார்.
எம்.ஜி.ஆர். மறைந்த போது நீங்கள் ராமாவரம் தோட்டத்து பாதுகாப்பு பணியில் இருந்திருக்கிறீர்கள். செய்தி உங்களுக்கு வந்ததும் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
எம்.ஜி.ஆர். காலமானதும் காவல்துறை சார்பில் வழக்கம்போல் பந்தோபஸ்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1897இல் நான் இன்ஸ்பெக்டராக இருந்தேன். அப்போது எனது மேலதிகாரியாக இருந்தவர் ஒய்வு பெற்ற எஸ்.பி. சுப்பையா. இப்போது அவர் உயிரோடு இல்லை. அன்று ராமாவரம் தோட்டத்துக்கு என்னையும் வரச்சொல்லிவிட்டார் எஸ்.பி. உடனே புறப்பட்டு சென்றுவிட்டேன். ஆனால், தோட்டத்துக்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. எஸ்.பி.யுடன் ராமாவரம் தோட்டத்துக்கு வெளியிலேயே காத்திருந்தேன்.
நள்ளிரவு கடந்துவிட்டது. மணி ஒன்று, இரண்டு… என நேரம் கடந்துகொண்டிருந்தது. தகவல் பரவி கூட்டம் வரத் தொடங்கியது. கே.ஆர். விஜயா உட்பட அன்று முன்னணியில் இருந்த நடிகர், நடிகைகள்; எம்.ஜி.ஆருடன் நடித்தவர்கள் என பலரும் வந்தார்கள்.
அன்று ராமாவரம் தோட்டத்துக்கு முதலில் வந்தவர் எம்.ஜி.ஆரின் முன்னாள் நண்பரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி என்று தகவல். அவர் வந்தபோது அங்கு என்ன நடந்தது? அவருடன் யாரெல்லாம் வந்தார்கள்?
நான் முதலிலேயே குறுப்பிட்டதுபோல் ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். எஸ்.பி.யும் நானும் எங்கள் வாகனத்திலேயே இருந்து கவனித்துக் கொண்டிருந்தோம். பல்லாவரம் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ரங்கநாதனும் எங்களுடன் இருந்தார். நேரம் கடந்துகொண்டிருந்தது. அதிகாலை நான்கு மணி இருக்கும்…. பூட்டப்பட்ட ராமாவரம் தோட்டம் கேட்டுக்கு முன்னால் ஒரு அம்பாசிடர் கார் வந்து நின்றது. முன்னாள் முதலமைச்சர் கலைஞரும் ஆற்காடு வீராசாமியும் அந்த வண்டியில் இருந்து இறங்கினார்கள்.
அவர்களை அப்போது அங்கே பார்த்ததும் எங்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. பதறிவிட்டோம். கலைஞரும் எம்.ஜி.ஆரும் நண்பர்கள் என்றாலும் அதிமுக, திமுக என அரசியலில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள். இந்நிலையில், அங்கே கலைஞரைப் பார்த்தால் அதிமுக கட்சிக்காரர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என கணிக்க முடியாது. கலைஞர் அப்போது எதிர்கட்சி தலைவர்; முன்னாள் முதலமைச்சரும்கூட. அவருக்கு பாதுகாப்பு தரவேண்டியது எங்கள் கடமை.
எனவே, எஸ்.பி. என்னிடம், ‘கலைஞரிடம் போய், ‘உடனே இந்த இடத்திலிருந்து சென்றுவிடுங்கள். இங்கே இருப்பது நல்லதல்ல. எம்.ஜி.ஆர். உடலை பார்ப்பதற்கும் வாய்ப்பில்லை’ என்று சொல்ல சொன்னார்.
நான் நேரே ஆற்காடு வீராசாமியிடம் சென்று சொன்னேன். ஆனால் அவர், ‘முடியாது, ஏன் நாங்கள் பார்க்கக்கூடாது’ என்றார். ‘ஆங்காங்கே இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இல்லை. உங்களை பாதுகாப்பது எங்கள் கடமை. ஆனால், நீங்கள் இங்கே இருப்பது பாதுகாப்பானது இல்லை. இந்த கூட்டத்தில் எங்களால் உங்களை பாதுகாப்பது சாத்தியமில்லை. எனவே, உடனே இங்கிருந்து சென்றுவிடுங்கள்’ என்றேன்.
கலைஞர் என்னை திரும்பி பார்த்தார். நான் சொல்வதை புரிந்துகொண்டார். ‘சரி, வாய்யா போகலாம்’ என்று ஆற்காடு வீராசாமியை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
அவர் சென்று சிறிது நேரத்தில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. நீங்கள்கூட கேள்விப்பட்டிருக்கலாம். புகாரி ஹோட்டல் பக்கம் இருந்த கலைஞர் சிலையை அதிமுக தொண்டர்கள் அடித்து உடைத்துவிட்டார்கள்.
கலைஞரைத் தொடர்ந்து ராமாவரம் தோட்டத்துக்கு ஜெயலலிதா வந்ததாகவும் அவரை உள்ளே விடவில்லை என்றும் செய்திகள் வந்தன. அவருக்கு நடந்தது?