No menu items!

மதுரை எய்ம்ஸ்: பொய்களும் உண்மைகளும் – ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி

மதுரை எய்ம்ஸ்: பொய்களும் உண்மைகளும் – ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி

தமிழ்நாடு அரசியல் களத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஹாட் டாபிக்காக இருக்கும் ஒரே விஷயம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. ‘வரும் ஆனால் வராது’ கதையாக நீடித்துக்கொண்டே இருக்கிறது மதுரை எய்ம்ஸ் சர்ச்சை. அறிவிக்கப்பட்டு 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை மதுரை எய்ம்ஸ்க்கு வெறும் 12.35 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கும் தகவல் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கடந்து வந்த பாதை உங்களுக்காக…

 • டெல்லியில் இருப்பது போல அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதனை ஏற்று, தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015 பிப்ரவரியில் அன்றைய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். ஆனால், உடனே இந்த மருத்துவமனையை மதுரையில் அமைப்பதா தஞ்சாவூரில் அமைப்பதா என சர்ச்சை எழுந்தது.
 • மதுரையா தஞ்சையா என்ற இழுப்பறி முடிவுக்கு வர மூன்றரை ஆண்டுகள் ஆனது. ஒரு வழியாக 2018 ஜூன் மாதம் மதுரைக்கு அருகில் உள்ள தோப்பூரில் 224.24 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது மாநில அரசு. இதற்கு அதே ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
 • 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக ஜனவரி 27ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த மருத்துவமனை சுமார் 750 படுக்கைகளுடன் அமைக்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
 • மேலும், 1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதாவது, 2022 செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும்.
 • ஆனால், கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்து இரண்டே கால் ஆண்டுகள் முடிந்த பின்னர்தான் ஜப்பானைச் சேர்ந்த ‘ஜப்பான் இன்டர்நேஷனல் கோ-ஆபரேஷன் ஏஜென்சி’ (ஜெய்கா) அமைப்பின் நிதி உதவியுடன் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்கான கடன் ஒப்பந்தம் 2021 மார்ச்சில்தான் ஜெய்காவுடன் செய்யப்பட்டது.
 • 2021 மார்ச்சில் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு மாற்றியமைக்கப்பட்டது. புதிய திட்ட மதிப்பீட்டில் மருத்துவமனைக்கான செலவு ரூ. 1977.8 கோடியாக உயர்ந்தது. புதிதாக ஒரு துறையும் சேர்க்கப்பட்டது.
 • அதற்குப் பிறகும் தோப்பூரில் மருத்துவமனை தொடர்பான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை அல்லது மிக மிக மெதுவாகவே நடைபெற்றது. இதனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதில், மத்திய பாஜக சுணக்கம் காட்டி, தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக திமுக உட்பட எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதன் உச்சமாக 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை காட்டி பாஜகவுக்கு எதிராக பேசியது பெரிதும் கவனம் ஈர்த்தது.
 • தொடக்க விழாவில் பிரதமர் அறிவித்தபடி, மதுரை எய்ம்ஸ் 2022 செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டிய நிலையில், 2022 செப்டம்பர் மாதம் வரை மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றி ஒரு சுற்றுச்சுவரும் ஒரு சாலையும் ஒரே ஒரு கட்டடமும் மட்டுமே கட்டப்பட்டிருந்தன.
 • இந்நிலையில், 2022 செப்டம்பர் 21ஆம் தேதி மதுரைக்கு வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, எய்ம்ஸ் மருத்துவமனையின் 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் பிரதமர் மருத்துவமனையை நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்றும் கூறி மதுரைக்காரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
 • நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் கடைசி நாளன்று மதுரை எய்ம்ஸ் பணிகள் முடங்கிக் கிடப்பது குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது, மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருவதாக குற்றச்சாட்டிய மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா, “மதுரை எய்மஸ் கல்லூரியில் மருத்துவ படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என கூறி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
 • இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதால், முதலாமாண்டு வகுப்புகள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாகத் தொடங்கப்பட்டு அதில் 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியானது.
 • ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகளுக்காக 1,900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், மதுரை எய்ம்ஸிற்கு மிக குறைவான தொகையே ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. மொத்த மதிப்பீடு ரூ. 1,977.8 கோடி என்னும் நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் 12.35 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்திருக்கிறது. மேலும், 2026இல்தான் பணிகள் முடிவடையும் என்றும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026இலாவது மதுரை எய்ம்ஸ் பயன்பாட்டுக்கு வருமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...