No menu items!

புத்தகம் படிப்போம்: நோபல் பரிசின் அரசியல்

புத்தகம் படிப்போம்: நோபல் பரிசின் அரசியல்

சற்குணம் ஸ்டீவன்

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியாகிய டாக்டர் வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன் எனும் வெங்கி, ‘ஜீன் மெஷின்’ எனும் இந்நூலில், முதன்முதலாக இளம் மாணவர் பருவத்தில் அமெரிக்காவில் வாழ்க்கையைத் தொடங்கியது முதல், தனது கல்வியைப் பற்றியும் ஆய்வுகள் குறித்தும் ஆய்வு வாழ்க்கையின் அனுபவங்கள் குறித்தும் மிக சுவாரஸ்யமாக விவரித்துள்ளார். நோபல் பரிசு அறிவிப்பு செய்யப்பட்ட காலத்திலிருந்து பரிசு பெற்ற அனுபவம், நோபல் பரிசின் தேர்வுமுறை, அதிலுள்ள நுணுக்கமான அரசியல், பரிசு பெற்ற பின் அமையும் வாழ்க்கை போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

வெங்கி, தமிழகத்தின் சிதம்பரத்தில் 1952இல் பிறந்தவர். இவரது தந்தை டாக்டர் சி.வி. இராமகிருஷ்ணன் உயிர் வேதியியல் அறிவியலாளர். வெங்கியின் தாயார் டாக்டர் ஆர். ராஜலஷ்மி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையில் பணியாற்றினார். வெங்கி பிறந்த வேளையில் அவரது தந்தை முதுமுனைவராக அமெரிக்காவின் விஸ்கான்ஸின் – மாடிசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பதினெட்டு மாதக் குழந்தையான வெங்கியை அவரது தாத்தா – பாட்டி, உறவினர்கள் கண்காணிப்பில் விட்டுவிட்டு அவரது தாயார் தான் பெற்ற கல்வி நிதி உதவியுடன் அமெரிக்காவிற்குச் செல்ல நேரிட்டது.

வெங்கிக்கு மூன்று வயதாகும் வேளையில் அவரது தந்தை பரோடாவின் மகாராஜா சாயாஜி பல்கலைக் கழகத்தில் உயிர்-வேதியியல் துறையைத் தோற்றுவித்துத் தலைமைப் பொறுப்பில் பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றார். எனவே, அவர் மனைவியையும் மகனையும் அழைத்துக்கொண்டு பரோடா சென்றுவிட்டார். அங்கு வெங்கியின் தாயார் ஆராய்ச்சிப் படிப்பிற்கென மீண்டும் கனடா செல்ல நேரிட்டது. முனைவர் பட்டம் பெற்றுத் திரும்பிய அவர் மத்திய அரசின் CSIRஇன் திட்டப் பணியாளராக வெளிநாடுகளிலிருந்து திரும்பும் விஞ்ஞானிகளுக்கு உதவும் பணியினை மேற்கொண்டார். அவ்வேளையில் பல விஞ்ஞானிகளுடன் பழகுதல், உரையாடுதல் போன்ற வாய்ப்புகள் பள்ளி மாணவராகிய வெங்கிக்குக் கிடைத்தன.

குறுகிய காலம் ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பும் வெங்கிக்குக் கிடைத்தது. பரோடாவில் ஆங்கில வழிப் பள்ளியில் உயர்நிலை வகுப்புகளில் பயின்றார். அப்பள்ளியைத் திடீரெனப் பெண்கள் பள்ளியாக மாற்றிவிட்டனர். இருப்பினும் பயின்று கொண்டிருந்த மாணவர்களைத் தொடர்ந்து பயில அனுமதித்தனர். ஆண்டுதோறும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பல பெண்களுடன் பள்ளியில் பயின்றதால் பிற்காலத்தில் பெண் விஞ்ஞானிகளுடன் ஆய்வகங்களில் பணி செய்வது எளிதாக இருந்தது என வெங்கி குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிப் படிப்பினைத் தொடர்ந்து பரோடா பல்கலைக்கழகத்தில் ஓராண்டு கல்லூரிக் கல்வியின் நுழைவு வகுப்பினை முடித்து இளம் அறிவியலின் இயற்பியல் பிரிவில் சேர்ந்தார். சிறந்த பேராசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளில் பட்டப் படிப்பினை முடித்தார். அதன் பின் இந்நூலில் அவர் குறிப்பிட்டுள்ளபடி பல முயற்சிகள் செய்து அமெரிக்காவின் ஊர்பானாவிலிருந்த தனது பெற்றோருடன் இணைந்தார்.

ஓஹையோவின் Graduate Schoolஇல் சேர்ந்தவர் அப்பயிற்சியின் இறுதியில் பிஎச்.டி பட்டம் பெறுகிறார். இதுபற்றிய செய்திகள் அனைத்தும் விரிவாக இந்நூலில் தரப்பட்டுள்ளன. இப்படிப்புக் காலத்திலேயே வேரா ரோசன்பெர்க்கைத் திருமணம் செய்துகொள்கிறார். வெங்கியின் ஆய்வுப் பயணம் நெடியது. இக்காலத்தில் இவரது மனைவி வேரா உற்ற துணையாக விளங்கி ஊக்கமளித்துள்ளார்.

உயிரியல் துறை தொடர்பான ஆய்வுகளில் நாட்டம் கொண்டு அதற்கு அடிப்படையான உயிரியலைக் கற்க எண்ணி மிகுந்த போராட்டங்களுடன் சான் டிகோவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பில் நுழைகிறார். ஏற்கெனவே இயற்பியலில் பிஎச்.டி. பட்டம் பெற்ற ஒருவர் இப்போது உயிரியல் பட்டப்படிப்பில் இளம் மாணவர்களோடு இணைந்ததில் பலருக்கும் ஆச்சரியம். அப்படிப்பில் தான் அறிந்துகொள்ள வேண்டும் என எண்ணிய அனைத்துப் பாடப் பிரிவுகளையும் தனது விருப்பப் பாடங்களாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நன்கு பயில்கிறார். படிப்பை முடித்து இரண்டாவது பிஎச்.டி பெற வாய்ப்பிருந்தும் கற்றுத் தெரிந்ததுவரை போதும் என்றெண்ணியவர் அக்கல்வியிலிருந்து விலகுகிறார். பின் யேல் பல்கலைக்கழகத்தில் பீட்டர் மூரின் ஆய்வகத்தில் முதுமுனைவராகப் பணியில் சேருகிறார். இங்கு ‘ரைபோசோம்’ ஆய்வுகளுக்கு அறிமுகம் பெற்று புரோட்டீன் மூலக் கூறுகளின் அமைப்பை அறிவதில் பயிற்சி பெறுகிறார். மேலும், ஆய்வுத் துறைகளைச் சார்ந்த பல நண்பர்களைப் பெறுகிறார். ரைபோசோம்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்வது என முடிவு செய்கிறார்.

யேல் பல்கலைக்கழகப் பணிக்காலம் நிறைவுறுகையில் பல ஆய்வு நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பங்கள் அனுப்புகிறார். பின் 1300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓக்ரிட்ஜின் உயிரியல் பிரிவில் ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. அங்குள்ள ஆய்வுத் திட்டம் அவருக்குத் திருப்தியளிப்பதாக இல்லை.

பல முயற்சிகளுக்குப் பிறகு ஓக்ரிட்ஜிலிருந்து 865 கிலோமீட்டர் தொலைவிலுள்ள புரூக்ஹேவன் தேசிய ஆய்வு நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. வெங்கியின் மனைவி வேராவிற்கு ஓக்ரிட்ஜின் அழகிய சூழலை விட்டுப் பிரிந்து செல்ல விருப்பமில்லை. இருப்பினும் அவர் ஏற்றுக்கொள்கிறார். குறைந்த விலைக்கு வீட்டை விற்றுவிட்டு புரூக்ஹேவன் கிளம்புகின்றனர். புரூக்ஹேவனில் வசதியான ஆய்வு நிலையம், நல்ல நண்பர்கள், தனிப்பட ஆய்வு செய்ய அனுமதி எனும் சூழல். தனிப்பட மேற்கொண்ட ஆய்விற்கான கட்டுரை ஒன்றினைப் புகழ்பெற்ற Science ஆய்வு இதழில் வெளியிடும் வாய்ப்புக் கிட்டியது. மிகுந்த மகிழ்ச்சியான தருணம். இங்கு ஒரு சில ஆண்டுகள் பணியாற்றிய பின் தொடர்ந்து அங்கேயே பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது. அங்கிருக்கும் வேளையிலேயே அங்கிருந்து 63 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ‘கோல்டு ஸ்பிரிங் ஹார்பரில்’ மூலக்கூறுகளைப் படிகங்களாக்குதலுக்கான குறுகிய காலப் படிப்பிற்கும் பயிற்சிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. சென்று பயில்கிறார். மேலும் பல திறன்களையும் வளர்த்துக்கொள்கிறார். பல மூலக்கூறுகளின் அமைப்பைப் படிகவியல் வழியே அறிவதில் ஆர்வம்கொள்கிறார்.

புரூக்ஹேவனில் விருப்ப ஊதிய விடுப்புப் பெற்று இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள MRC ஆய்வகத்தில் படிகவியல் ஆய்வில் ஈடுபட விரும்புகிறார். முதுமுனைவராகச் செல்கிறார். வேராவிற்கும் இங்கிலாந்து செல்வதில் விருப்பம். அங்கு பலவற்றையும் கற்றுக்கொள்கிறார். சிறந்த ஆய்வுகளை மேற்கொள்கிறார். ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிடுகிறார். முதுமுனைவர் பணிக்காலம் முடிவடைகிறது. மீண்டும் அமெரிக்காவின் புரூக்ஹேவன் திரும்புகிறார். பின் யூட்டாவில் ஆய்வுப் பணிகளைத் தொடர்கிறார். அவரது திறமைகளால் மீண்டும் இங்கிலாந்தின் LMBயில் பணிபுரிய வாய்ப்புக் கிடைக்கிறது. இங்கு பல இன்னல்களுடன் பணிபுரிந்து தனக்கான ஓரிடத்தைப் பெறுகிறார். இவருக்குத் துணையாகப் பல இளம் விஞ்ஞானிகள் இவருடன் இணைகின்றனர். ரைபோசோம் துணையலகுகள் RNAக்களைப் பற்றிய ஆய்வுகளில் மும்முரமாக ஈடுபடுகிறார். அறிவியல் உலகில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. பல கட்டுரைகளை வெளியிடுகிறார். பல இடங்களில் கருத்தரங்குகளில் பங்குபெற்று ரைபோசோம் கண்டுபிடிப்புகளில் தனக்கான இடத்தைப் பெற்றுக்கொள்கிறார். இவை அனைத்தும் நோபல் பரிசு பெற வழிவகுக்கின்றன.

இந்நூலின் வழியே ஆய்வுத் துறையில் வெங்கியின் விடாப்பிடியான முயற்சியைப் பற்றி அறிந்துகொள்ளலாம். பிறரை நன்கு மதித்துப் பழகும் குணம் இவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்ததையும் உணரலாம். நோபல் பரிசுகள், பிற பரிசுகளுக்கான தேர்வுகள், அதில் உள்ள இடர்ப்பாடுகள் போன்றவற்றை விவரிக்கையில் அவரது பொறுப்புமிக்க இயல்புகளும் உயர்ந்த தன்மைகளும் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. நூலாசிரியரின் விவரிப்புகளில் நகைச்சுவையுணர்வு அமைந்துள்ளதைக் காணலாம்.

சித்தார்த் முகர்ஜி குறிப்பிட்டபடி வாசிக்கத் துவங்கிய பின் நூலைக் கீழே வைக்க இயலவில்லை. ‘இந்நூலை மீண்டும், மீண்டும் வாசிக்கலாம்’ எனும் ரிச்சர்ட் டாக்கின்ஸின் கூற்றும் சரியானதே.

அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் இன்னல்களையும் ஆய்வகங்களிலும் விஞ்ஞானிகளிடையே தோன்றும் அரசியல் பிரச்சினைகளையும் இந்நூலின் வழியே அனைவரும் அறியலாம். ஆய்வுப் பணிகளில் ஈடுபட முற்படும் இளைஞர்கள் எத்தகைய தீர்மானமான மனநிலையுடனும் விடாப்பிடியான முயற்சிகளுடனும் ஈடுபட வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளலாம். ஆய்வுகள் சிறக்கப் புதிதாகத் தோன்றும் செய்முறைகளைக் கற்றறிந்து பயன்படுத்த முன்வருதலின் முக்கியத்துவமும் அதற்கான உதவிகளைப் பெறுதலில் கடைப்பிடிக்க வேண்டிய அமைதியான செயல்முறைகளையும் அறிந்துகொள்ளலாம். இவ்வகையில் ‘ஜீன் மெஷின்’ இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் நூலாகவே அமையும் எனக் கருதுகிறேன்.

பொது வாசகர்களும் ஆய்வு உலகத்தைப் பற்றி அறிவதோடு அரசும் சமுதாய அமைப்புகளும் எத்தகைய உதவிகளைப் பங்களிப்பாகச் செய்ய வேண்டும் எனச் சிந்திக்க வாய்ப்பளிப்பதாக இந்நூல் அமைய வாய்ப்புகளுண்டு.

*

ஜீன் மெஷின்; ஆசிரியர்: வெங்கி ராமகிருஷ்ணன் (நோபல் பரிசு பெற்றவர்); தமிழில்: சற்குணம் ஸ்டீவன்; பக்கம்: 312, நூல் விலை ரூ. 395/; வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

விரைவில் வெளிவர உள்ள இந்த நூலை முன் வெளியீட்டுத் திட்டத்தில் ரூ.245/-க்கு வாங்கலாம். முன் வெளியீட்டுத் திட்டத்திற்குப் பதிவுசெய்துகொள்ளக் கடைசித் தேதி டிசம்பர் 5

நூலைப் பெற:

https://books.kalachuvadu.com/catalogue/u0b9cu0ba9-u0baeu0bb7u0ba9_1090/

*

வெங்கியின் வாழ்க்கை வரலாற்றினையும் ஆய்வுகள் மேற்கொண்ட முறைகளையும் அவரது நோபல் உரையினையும் கீழ்வரும் இணையத் தொடர்புகளில் காணலாம்.

https://www.nobelprize.org/prizes/chemistry/2009/ramakrishnan/biographical/

https://www.nobelprize.org/prizes/chemistry/2009/ramakrishnan/prize-presentation/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...