ரஜினி ‘ஜெயிலர்’ பட வெற்றிக்குப் பிறகு இப்போது, ’ஜெய்பீம்’ இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ’வேட்டையன்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைய இருக்கிறது.
இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து ரஜினி நடிக்க இருக்கிறார். இது குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் தெரிவித்து இருக்கிறது. மேலும் ஏப்ரல் 22-ம் தேதி இப்படத்தின் பெயரை வெளியிடப் போகிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
தற்காலிமாக இப்படத்திற்கு ’தலைவர் 171’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.
இப்படத்தின் கதை இதுதான் என ஒருவரி ஒன்று கோலிவுட்டில் சுற்றிக்கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் போதைக் கடத்தலுக்கு அடுத்தப்படியாக இருக்கும் மிகப்பெரும் நெட்வொர்க் தங்கம் கடத்தலில்தான். இந்த தங்க கடத்தலை மையமாக வைத்துதான் திரைக்கதை எழுதப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.
ரஜினிக்கு இது நெகட்டிவ்வான கதாபாத்திரம் என்றும், தங்க கடத்தலில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு டான் ஆக நடிக்கப் போகிறார் என்று கிசுகிசுக்கிறார்கள். தங்கம் எப்படியெல்லாம் கடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து எப்படி இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி கொண்டுவரப்படுகிறது என்பதையெல்லாம் வைத்து ஆக்ஷன் கதையாக லோகேஷ் கனகராஜ் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த ’எந்திரன்’ பெரும் வெற்றிப் பெற்றது நினைவில் இருக்கலாம். அதே வரிசையில் இப்படமும் இணைகிறது என்கிறார்கள்.
ஏப்ரல் 22-ம் தேதி ‘தலைவர் 171’ படத்தின் பெயர் வெளியாகும் போது என்ன கதை என்பதை ஓரளவிற்கு யூகித்துவிடலாம் என்று ரசிகர்கள் இப்பொழுதே தயாராகவிட்டார்கள்.
ஆக்ஷன் ஹீரோவாகும் தோனி
இந்த ஐபிஎல் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற போகிறார் என்ற கருத்து நிலவுகிறது.
அடுத்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக களமிறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும், தோனி சினிமாவில் இறங்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள். தோனிக்கும், அவரது மனைவி சாக்ஷிக்கும் சினிமா மீது ஒர் ஈர்ப்பு இருக்கிறது. இதனால்தான் ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்கள். ‘லெட் கெட் மேரிட்’ என்ற படத்தையும் தயாரித்தார்கள்.
இந்நிறுவனம் இப்போது அடுத்த பட தயாரிப்புகாக கதை கேட்டு வருகிறதாம். ஏதாவது நல்ல ஆக்ஷன் கதை இருந்தால் சொல்லுங்கள் என்றும் கதை சொல்ல வருகிறவர்களிடம் கேட்கிறார்களாம்.
எதற்கு ஆக்ஷன் கதையில் அவ்வளவு நாட்டம் என்று விசாரித்தால், நல்ல ஆக்ஷன் கதையாக இருந்தால் அதில் தோனி ஹீரோவாக களமிறங்கவும் திட்டம் இருக்கிறதாம்.
இதை தோனியின் மனைவி சாக்ஷியும் மறைமுகமாக கூற ஆரம்பித்திருக்கிறார்.
‘தோனிக்கு கேமரா முன்னாடி நிக்கிறதுல பயமோ கூச்சமோ இல்ல. அதனால் அவர் சுலபமா நடிச்சிடுவார். 2006-லிருந்து டிவி விளம்பரங்கள்ல நடிச்சிட்டுதானே இருக்கார். ஆனால் அவருக்கு ஆக்ஷன் கதைகள்ல நடிக்கதான் ஆர்வம் இருக்கு. தோனி கதாநாயகனாக நடிச்சா, கண்டிப்பா அந்தப்படம் ஆக்ஷன் படமாகதான் இருக்கும். நல்ல கருத்தோடு ஆக்ஷனும் இருந்தா தோனி நடிப்பார்’ என்று சாக்ஷி கூறியிருக்கிறார்.
அநேகமாக ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு தோனி நடிப்பாரா, கதை கிடைத்ததா என்பதை தோனி எண்டர்டெயின்மெண்ட் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஆலியா பட்டின் நெக்லஸ் விலை 20 கோடி
இன்றைய நிலவரப்படி இந்தியாவின் நம்பர் 1 கதாநாயகி ஆலியா பட். இவரது சம்பளம் சுமார் 15 கோடி முதல் 20 கோடி வரை.
உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார். அதேவேகத்தில் குழந்தையும் பெற்றுக்கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துவிட்டார். இவரது இந்த தன்னம்பிக்கையைப் பார்த்து நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இப்படியொரு பின்னணி இருக்கும் ஆலியா சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். ஹோலா ஹோப் என்ற நிகழ்ச்சி அது. இந்தியாவில் ஆதரவற்ற விடலை பருவத்தினருக்கு ஆதரவுக்கரம் நீட்டும் நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.