No menu items!

காலாபாணி: சர்ச்சையில் சாகித்ய அகாதமி விருது!

காலாபாணி: சர்ச்சையில் சாகித்ய அகாதமி விருது!

தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது இந்த ஆண்டு மு. ராஜேந்திரன் எழுதிய ‘காலா பாணி’ என்ற நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா வருடமும் சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு வெளியானதும் சர்ச்சையும் தொடங்கிவிடும். இந்த ஆண்டு என்ன சர்ச்சை?

சர்ச்சையைப் பார்க்கும் முன் விருதுபெற்ற ‘காலா பாணி’ நாவல் பற்றி கொஞ்சம்…

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள மு. ராஜேந்திரன் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி. தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராக பணிபுரிந்து வருகிறார். சிறுகதை, நாவல் என நிறைய எழுதியிருந்தாலும் வரலாறுதான் இவருக்கு விருப்பம். சோழர் காலச் செப்பேடுகள், பாண்டியர் காலச் செப்பேடுகள், சேரர் காலச் செப்பேடுகள், பல்லவர் காலச் செப்பேடுகள் உட்பட பல வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.

கவிஞர் அ. வெண்ணிலாவுடன் இணைந்து எழுதிய ‘கம்பலை முதல்’, ‘ஆனந்தரங்கப்பிள்ளை தினப்படி சேதிக்குறிப்பு’ (12 தொகுதிகள்), ‘வந்தவாசிப் போர் – 250’ உட்பட 19 நூல்களை மு. ராஜேந்திரன் எழுதியுள்ளார். இதில் ‘வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு’ என்ற தன் வரலாற்று நூல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, 2018இல் சாகித்ய அகாடமி விருது இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. அறுநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தங்கள் மூதாதையரின் கதையில் தொடங்கி மூன்று தலைமுறையின் தொடர் வாழ்வினை ‘வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு’நூலில் எழுதியிருந்தார்.

‘வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு’மட்டுமல்லாமல், 1801ஆம் ஆண்டு தென் தமிழ்நாட்டில் நடந்த காளையார் கோயில் போரை மையமாக வைத்து இவர் எழுதிய ‘1801’ என்ற வரலாற்று நாவலும் 2018 சாகித்ய அகாடமி விருது இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து 2019 ஆண்டும் ‘1801’ நாவல் சாகித்ய அகாடமி விருதுக்கான இறுதிப் பட்டியலில் இருந்தது. ‘1801’ நாவல் இந்த ஆண்டும் சாகித்ய அகாடமியின் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று முறை ‘1801’ நாவல் இறுதிப்பட்டியல் வரை சென்றும் ‘காலா பாணி’ நாவல்தான் இறுதியில் மு. ராஜேந்திரனுக்கு விருதை பெற்றுகொடுத்துள்ளது. 1801 புரட்சியின் அடுத்த கட்டத்தைச் சொல்லுகிற நாவல்தான் இந்த ‘காலா பாணி’.

இந்தியாவில் ஐரோப்பிய ஆட்சியில் மன்னர்களை நாடு கடத்துதல் முதன்முதலில் காளையார் கோயில் போரில்தான் தொடங்கியது. அப்போது சிவகங்கையின் அரசராக இருந்த வேங்கை பெரிய உடையணத் தேவரையும் அவருடன் போராளிகள் 71 பேரையும், தங்களின் வெற்றிக்குப் பிறகு பினாங்குக்கு நாடு கடத்தினார்கள். தமிழ்நாட்டின் மிக முக்கியமான இப்போராட்டத்தினை மையமாகக் கொண்டு ‘காலா பாணி’ நாவலை மு. ராஜேந்திரன் எழுதியுள்ளார். அகநி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

சர்ச்சை என்ன?

சாகித்ய அகாடமி விருதுக்காக மு. ராஜேந்திரனுக்கு பல எழுத்தாளர்கள் வாழ்த்துகள் தெரிவித்துவரும் நிலையில், இன்னொரு பக்கம், ‘காலா பாணி’ நாவல் விருதுக்கு தகுதியானது அல்ல என்றும் தனது அதிகார பலத்தால் மு. ராஜேந்திரன் விருதை வாங்கிவிட்டார் என்றும் பல எழுத்தாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள கவிஞர் பெருந்தேவி, “நூலின் உள்ளடக்கத்தை விடுங்கள். பொதுவாக புனைவோ புனைவற்ற எழுத்தோ அட்டைப் படத்தில் டாக்டர், முனைவர் என்று போட்டுக்கொள்வது ரசக்குறைவு. இது கூட இருக்கட்டும். ‘இ.ஆ.ப.’ போன்ற ஆட்சிப் பணித் தகுதியைப் பெயருக்குப் பின் போட்டுக்கொள்வது இன்னும் மோசம். புத்தக அட்டைப் படத்தில் அதிகாரம் எதற்காகப் பறைசாற்றப்பட வேண்டும்?

முன்னொரு காலத்தில் இலக்கிய உலகத்தில் சற்றேனும் உயரிய மதிப்பீடுகள் இருந்தன, அவற்றைக் கொண்டவர்கள் இருந்தார்கள். பின்னர் நடப்பரசியல் உலகத்தின் எல்லாத் தந்திரங்களும் மதிப்பீடுகளின் வீழ்ச்சிகளும் வலைப்பின்னல்களும் இந்த உலகத்துடன் இரண்டறக் கலந்துவிட்டன. எழுத்தாளர்களின் அதிகாரமும் அரசு இயந்திரங்களின் அதிகாரமும் கலந்துவிட்ட காலம் இது” என்று கூறியுள்ளார்.

பேராசிரியரும் எழுத்தாளருமான கால சுப்பிரமணியம், “சாகித்ய அகாடமியில் சிற்பியின் பதவிக் காலம் முடிந்து ஓரிரு மாதங்களுக்கு முன்பே மாலன் செயலுக்கு வந்துவிட்டார். சில மாதங்களுக்கு முன் மாலன் ‘வாங்கிய’ மொழிபெயர்ப்பு விருதுக் கமிட்டியில் சிவசங்கரி இருந்தார். இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது இந்துமதிக்கோ சிவசங்கரிக்கோதான் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், மேனாள் ஆட்சிப் பணித் துறையிலிருந்தவர்கள் இதையும் மீறி உள்ளே நுழையக்கூடியவர்கள் போலிருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிப்பதுபோல் இளம் எழுத்தாளர் சரவணன் சந்திரன் எழுதியுள்ள பதிவில், “முன்பெல்லாம் அது வெறும் சாகித்ய அகாடமி விருதுப் போட்டியாக மட்டுமே இருந்தது. இப்போது கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டைப் பெறுகிற போட்டியாக மாறிவிட்டது. பெரிய கைகள் முட்டி மோதத்தான் செய்யும்” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் அடிப்படை தகுதியாக சாகித்ய அகாடமி விருது பெற்றவராக இருக்க வேண்டும் என இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...