எழுத்தாளர் இந்துமதி ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மறைந்த அரசியல் தலைவர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜானகி அம்மையார், ஜெயலலிதா ஆகியோருடனான தனது நட்புகள் பற்றி பகிர்ந்துகொண்டார். அது இங்கே…
முந்தைய பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
நீங்க கலைஞரிடமும் நட்பாக இருந்திருக்கிறீர்கள், ஜெயலலிதாவுடனும் நட்பாக இருந்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டு அரசியலில் இருவரும் எதிரும் புதிருமானவர்கள். இந்நிலையில், இருவருடனும் ஒரே சமயத்தில் உங்களால் எப்படி நட்பாக இருக்க முடிந்தது?
ஜெயலலிதாவுடனான நட்பு எங்கே இருந்து தொடங்கியது என்று எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. மைசூர் யுனிவர்சிட்டியில் ஒரே சமயத்தில் கரஸ்பாண்டன்ஸில் ஜெயலலிதாவும் நானும் படித்தோம். அது ஞாபகம் உள்ளது. அவர் பொலிட்டிக்கல் சயின்ஸ் எடுத்திருந்தார், நான் சைக்காலஜி எடுத்திருந்தேன். ஆனால், இருவருமே முடிக்கவில்லை. அதற்கும் முன்னால் சென்றால் எம்.ஜி.ஆர். நடத்திய ‘தாய்’ பத்திரிகை காலகட்டம். அதற்கும் முன்னால் இருந்தேகூட எனக்கு ஜெயலலிதாவை தெரியும். அவங்க சோமன்பாபு உடன் இருந்த காலமும் தெரியும்.
அவங்க போயஸ் கார்டன் வீட்டுக்கு அனேகமாக தினமும் செல்வேன். ஆபிஸ் போகும்போது வீட்டில் இருந்து கிளம்பி ஜெயலலிதா வீட்டுக்கு போய் அவங்களை பார்த்துவிட்டு ஆபிஸ் போவேன். அதுபோல் ஆபிஸில் இருந்து வரும்போது அவங்க வீடு போய் அரை மணி நேரமாவது இருந்துவிட்டுதான் வருவேன்.
ஜெயலலிதா எனக்காக வாசலில் காத்திருப்பாங்க. அவ்வளவு அழகா இருப்பாங்க. பிங்க் புடவை கட்டியிருந்தால் அவங்க உடலெல்லாம் பிங்காக தெரியும், லைட் மஞ்சள் என்றால் அதேமாதிரி மஞ்சளாக ஜொலிப்பாங்க. நீண்ட கூந்தல். “வா இந்து” என ஆசையாக, சந்தோஷமாக வரவேற்பாங்க. அவங்க திராட்சை தோட்டத்தில் விளைந்த பழங்களை கொடுப்பாங்க. கொக்கோ கொடுப்பாங்க, புத்தகங்கள் அன்பளிப்பா கொடுப்பாங்க.
படித்த புத்தகங்கள், செய்த பயணங்கள், அரசியல் நிகழ்வுகள் என நிறைய பேசியிருக்கிறோம். உள்ளார்ந்த விஷயம் எல்லாம் சொல்வாங்க. அவங்க கோபங்கள் தெரியும், வருத்தங்கள் தெரியும், சிரமங்கள் தெரியும்.
‘தாய்’ பத்திரிகை ஆசிரியராக வரும்படி என்னை எம்.ஜி.ஆர். அழைத்தார். அரசியல்வாதிகள் நடத்தும் பத்திரிகை எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும். எனவே, அதற்கு நான் தகுதியான ஆள் கிடையாதுங்க என்று மறுத்துவிட்டேன். பிறகு அந்த பத்திரிகை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வெளியிடும்படி சொன்னார். மறுத்துவிட்டேன். சரி, இன்னொருவர் வெளியிடுவார் நீங்க வாங்கிங்க என்றார். அதற்கும் மறுத்துவிட்டேன். அதன்பிறகு, ஜெயலலலிதா சொன்னதால், அந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினேன்.
அதன்பிறகு ஜெயலலிதாவுக்கும் எனக்கும் ஒரு பத்திரிகை தொடங்குகிறேன் என்றார் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வெளியீட்டாளர், நான் ஆசிரியர். இடம் பார்த்து, மிஷின் எல்லாம் வந்து இறங்கிவிட்டது. அதற்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்து, ‘காவேரி தந்த கலைச்செல்வி’ நடன நாடக குழுவை ஜெயலலிதா தொடங்கினாங்க. அதன்பிறகு அரசியலுக்கு சென்றுவிட்டார்.
அதன்பிற்கும் அவருடன் நட்பு தொடர்ந்ததா?
நட்பு தொடர்ந்தது. ஆனால், நேர் சந்திப்புகள் இல்லை, தொலைப்பேசி வழியாக மட்டுமே இருந்தது. இவங்க (சசிகலா) வந்த பின்னர் நாங்க ஒவ்வொருவராக போவதை நிறுத்திக்கொண்டோம்.
அதே காலகட்டத்தில் கலைஞருடனும் உங்களுக்கு நல்ல நட்பு இருந்தது. அது தொடர்பாக ஜெயலலிதா என்ன சொன்னார்?
கத்தி மீது நடக்கிற மாதிரியான விஷயம் அது. கலைஞருடனான நட்பு பற்றி நான் ஜெயலலிதாவுடன் பேசவே மாட்டேன்.
கலைஞரை நள்ளிரவில் கைது செய்த போது நீங்கள் அவரை சென்று சந்தித்திருக்கிறீர்கள். அன்றே ஜெயலலிதாவையும் சந்தித்திருக்கிறீர்கள். அன்று என்ன நடந்தது?
அப்போலோ சென்று கலைஞரை பார்த்தேன். “பாரும்மா… பாரும்மா…” என்று காட்டினார். கையெல்லாம் கன்னிப் போய் இருந்தது. “கனியைப் போய் பாரும்மா, கனியை பந்தாடி போட்டாங்கம்மா” என்றார். எல்லாவற்றையுவிட முரசொலி மாறனையும் மிக மோசமாக நடத்தியிருந்தார்கள்.
கலைஞரை பார்த்துவிட்டு நேராக ஜெயலலிதா வீட்டுக்குத்தான் போனேன். “நீ எங்கே இருந்து வர்றேன்னு தெரியும்” என்றார். “ஆமாங்க, அங்கே இருந்துதான் வர்றேன். நீங்க செய்தது நியாயமா?” என்றேன். “இந்துமதி…” என்று கோபமானார். “என்ன சொல்லப் போறீங்கன்னு தெரியும். நான் கிளம்புறேன். ஆனா, நீங்க செய்தது தப்பு” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.
அதன்பிறகு சந்தித்தீர்களா?
அதற்கு பிறகு ஜெயலலிதாவுடன் நேர் சந்திப்புகள் என்பது கிடையாது. அவ்வப்போது போனில் பேசிக்கொண்டதுதான்.”