No menu items!

பங்காருஅடிகளாரை ஜெயலலிதா நம்பவில்லை – எழுத்தாளர் இந்துமதி பேட்டி

பங்காருஅடிகளாரை ஜெயலலிதா நம்பவில்லை – எழுத்தாளர் இந்துமதி பேட்டி

எழுத்தாளர் இந்துமதி ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சமீபத்தில் மறைந்த பங்காரு அடிகளார் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அது இங்கே…

முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

பங்காரு அடிகளாரின் தீவிர பக்தை நீங்கள். அவருடனான முதல் சந்திப்பு ஞாபகம் உள்ளதா?

பங்காரு அடிகளார் அப்போது மிகப் பிரபலமாகி இருக்கவில்லை. பங்காரு அடிகளாரை பேட்டி எடுக்க நான் சென்றேன். அவருடனான என் முதல் சந்திப்பு அதுதான். அவருடைய முதல் பத்திரிகை பேட்டியும் அதுதான். இதற்காக நானும் புகைப்படக் கலைஞர் சுபா சுந்தரமும் மேல்மருவத்தூர் சென்றிருந்தோம்.

நானே தனியாக காரை ஓட்டிக்கொண்டு சென்றேன். சுபா சுந்தரம் தனியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். எனவே, நான் முதலில் சென்று சேர்ந்துவிட்டேன். அங்கே சென்று பார்த்தால் பொட்டல் காடு. சுற்றிலும் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. யாருமே இல்லை. தப்பான இடத்துக்கு தனியாக வந்து மாட்டிக்கொண்டோமோ என்று பயந்துவிட்டேன்.

சிறிது நேரத்தில் சுபா சுந்தரம் வந்தார். ‘என்ன சுபா இப்படியிருக்கிறது’ என்று கேட்டேன். ‘பார்க்கலாம்’ என்றார். அப்போது மேல் சட்டை இல்லாமல், தோளில் துண்டைப் போட்டுக்கொண்டு ஒருவர் வந்தார். அவரிடம் பங்காரு அடிகளாரை பார்க்க வந்துள்ளோம் என்றேன். ‘நான்தான்மா… வாங்க’ என அழைத்து சென்றார்.

ஒரு சின்ன ஓட்டு வீடு. ஒரே ஒரு நாற்காலி… ஒரு கால் ஆடிக்கொண்டிருந்தது. என்னை அதில் உட்கார சொன்னார். கீழே கொறடு மாதிரி இருந்ததில் அவர் உட்கார்ந்தார். எங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னார். அந்த பேட்டி குங்குமம் இதழில் வெளிவந்தது.

அந்த இதழிலேயே பங்காரு அடிகளார் பற்றி சைக்கியாட்ரிஸ்ட் விஜயகுமாரிடம் கருத்து வாங்கி அதனையும் வெளியிட்டு இருந்தோம். ‘இதெல்லாம் ஹம்பக்’ என்று அவர் சொல்லியிருந்தார்.

பங்காரு அடிகளார் பேட்டியும் விஜயகுமார் பேட்டியும் ஒரே இதழில் அடுத்தடுத்து வெளியாகி இருந்தது. இதழ் வெளியான நாளில் இருந்து எனக்கு தொடர்ந்து தொலைப்பேசி அழைப்புகள். ‘உன் காலை உடைத்துவிடுவோம், கையை உடைத்துவிடுவோம்’ என மிரட்டுகிறார்கள்.

இதனால் மீண்டும் நான் போனேன். பங்காரு அடிகளார் ஒரு வேப்பிலையை கிள்ளி என் கையில் போட்டார். அது சுருட்டாக மாறிவிட்டது. ‘மகளே சுருட்டு பிடிப்பவன் கடைசி பப் வரைக்கும் கிழே போடமாட்டான். அதுபோல் உன்  உயிர் உள்ளவரைக்கும் நீ இங்கே வரவேண்டும்’ என்று சொன்னார். அதன்பின்னர் தொடர்ந்து போகத் தொடங்கினேன்.

அப்போது ஜெயலலிதா எனக்கு மிக நெருக்கமான தோழியாக இருந்தார். தமிழ்நாடு முதலமைச்சராக எம்.ஜி.ஆர். இருந்த நேரம். வேப்பிலை சுருட்டாக மாறியதை ஜெயலலிதாவிடம் சொன்னேன். ‘காலடியில் மறைத்து வைத்து, எடுத்து கொடுத்திருப்பான்… அதைப் போய் நீயும் நம்புகிறாயே. பூசணிக்காய் வரவைத்து தருவானா’ என்று கிண்டலாக சொன்னார். ஒருமையில்தான் பேசினார்.

ஆச்சரியம்… அடுத்தமுறை போகும்போது பங்காரு அடிகளார் அதைக் கேட்டார். ‘அன்று உன் தோழி உன்னிடம் என்ன சொன்னார். பூசணிக் காய் வரவைத்து தருவானா என்று கேட்டார் அல்லவா. எதற்காக மகளே அவளுக்கு பூசணிக்காய், தேவலோக தெய்வீக பதவிகள் எல்லாம் அவளுக்காக காத்துக் கொண்டிருக்கிற போது’ என்றார்.

ஜெயலலிதாவிடம் சொன்னேன். ‘இந்துமதி அவரைப் பார்க்க போலாமா’ என்றார் உடனே. எம்.ஜி.ஆருக்கு தகவல் சென்றது. லோக்கல் அதிமுக எம்.எல்.ஏ.க்கு உத்தரவு சென்றது. கோவிலில் சொல்லி எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டார்கள்.

ஆனால், அன்று அதிகாலை 5 மணிக்கு போன் செய்த ஜெயலலிதா, அழுதுகொண்டே நான் வரவில்லை என்று சொன்னார். இது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்குள்ளும் சகஜம். ‘என்னாச்சு’ என்று கேட்டேன். ‘நான் அப்புறம் சொல்றேன். நீ போய்ட்டு வா’ என்றார். நான் போனேன்.

பங்காரு அடிகளார் சொன்னதுபோல் பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு தேவலோக தெய்வீக பதவிகள் வந்ததா இல்லையா?

இதுபோல் பங்காரு அடிகளார் சொன்ன ஒவ்வொரு விஷயமும் அதன்பின்னர் நடந்தது. மரகதம் சந்திரசேகரை அழைத்துக்கொண்டு சென்றேன். ‘மகளே நீ செடியில் இருந்து உதிர்ந்த மலர். மீண்டும் செடியில் போய் ஒட்டிக்கொண்டு மலரப் போகிறாய்’ என்று சொன்னார். அடுத்த நாளே மரகதம் சந்திரசேகர் மத்திய அமைச்சரானார்.

கண்ணதாசன் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக போயிருந்தபோது, அவர்கள் வீட்டில் இருந்து மேல்மருவத்தூர் சென்று கேட்டுவரச் சொன்னார்கள். நான் போய் கேட்டேன். ‘மகளே அவன் உடைந்துபோன மண்பாண்டம். திரும்பி வரமாட்டான்’ என்று சொன்னார். நான் கண்ணதாசன் வீட்டில் போய், ‘அடிகளார் சரியாக சொல்லலீங்க’ என்று சொன்னேன். அடிகளார் சொன்னதுபோலவே அமெரிக்காவில் இருந்து கண்ணதாசன் திரும்பி வரவில்லை.

உன் உயிர் உள்ளவரைக்கும் நீ வரவேண்டும் என்று உங்களிடம் அடிகளார் சொல்லியிருந்தார். அதன்படி தொடர்ந்து போய்க்கொண்டு இருக்கிறீர்களா?

இல்லை. அக்காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு நடிகை ஒருவரை பேட்டி எடுப்பதற்காக சந்தித்தேன். அப்போது, ‘நீ ஏன் அடிக்கடி பங்காரு அடிகளாரை பார்க்கப் போகிறாய்? போகாதே. புரிஞ்சிக்கோ. நான் சொன்னா கேள்’ என அழுத்தமாக சொன்னார். காரணத்தையும் அவர் சொன்னார். அதை இப்போது இங்கே சொல்ல முடியாது. அன்றோடு மேல்மருவத்தூர் போவதை நிறுத்திக்கொண்டேன்.

பங்காரு அடிகளார் மேல் நிறைய விமர்சனங்களும் இருக்கிறது. குறிப்பாக ஆன்மீகத்தைப் பயன்படுத்தி நிறைய சம்பாதித்து சொத்து சேர்த்துள்ளார் என்று. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் முதலில் போனபோது பொட்டல் காடாக இருந்த ஒரு இடம் இப்போது எப்படி மாறியிருக்கிறது என்று பாருங்கள். கல்லூரி, பல்கலைக்கழகம் என எவ்வளவு அந்த இடத்தில் வந்துள்ளது. எத்தனை பேரின் வாழ்வாதாரம் அதனை நம்பி உள்ளது. அதனைப் பாருங்கள். மேலும், கோயிலுக்குள் கருவறை வரை பெண்களை அனுமதித்தது, தீட்டான நாட்களிலும் கோயிலுக்குள் வரலாம் என்று சொன்னது அவரது முக்கியமான பங்களிப்புகள்.

விமர்சனம் யார் மேல்தான் இல்லை. ஒருவர் எவ்வளவு பிரபலமடைகிறாரோ அதே அளவு விமர்சனங்களும் இருக்கும். காய்ச்ச மரம்தான் கல்லடிப்படும் என்று சொல்வார்களே அதுதான். இது உலக இயல்பு.

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...