No menu items!

இது நியாயமா? – Oscar Winner‘The Elephant Whisperers’ இயக்குநர் மீது புகார்

இது நியாயமா? – Oscar Winner‘The Elephant Whisperers’ இயக்குநர் மீது புகார்

ஆஸ்கர் விருது பெற்ற ‘The Elephant Whisperers’ ஆவணப்படம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அப்படத்தின் இயக்குநர் கார்த்திகி, பண விஷயத்தில் தங்களை ஏமாற்றி விட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்திருக்கிறார்கள், அந்த ஆவணப்படத்தின் உயிர்நாடியாக இருந்த பொம்மன் – பெள்ளி பழங்குடியின தம்பதியினர்.

நடந்தது என்ன?

இந்தியாவில் இருந்து முதல் ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது வென்ற ‘The Elephant Whisperers’, முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. 

வனத்தில் தாயை இழந்து தவித்த இரண்டு யானைக் குட்டிகளையும், அவற்றை தாயுள்ளத்துடன் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வளர்த்த பழங்குடி பாகன் தம்பதியினரான பொம்மன், பெள்ளி ஆகியோர் வாழ்க்கையும் காட்சிப்படுத்தியிருந்தது, ‘The Elephant Whisperers’. இதற்காக ஊட்டியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதன் மூலம் அவருக்கு உலக அளவில் கவனம் கிடைத்தது.

‘The Elephant Whisperers’ ஆவணப்படத்தால் பொம்மன், பெள்ளி பழங்குடி தம்பதியும் பிரபலமானார்கள். இந்திய பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கிரிக்கெட் வீரர் தோனி உட்பட பிரபலங்கள் பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், அதனால் பொருளாதார ரீதியாக அவர்களுக்கு எந்த பலனும் இல்லை. மேலும், இந்த ஆவணப்படத்தால் தாங்கள் நஷ்டம்தான் அடைந்துள்ளோம் என கசந்து போய் ஒரு பேட்டி அளித்திருக்கிறார்கள், பொம்மன்-பெள்ளி தம்பதியினர்.

அதில், ஆவணப்படத்தின் உயிர்நாடியாக இருந்த தங்களை பண விஷயத்தில் இயக்குநர் கார்த்திகி ஏமாற்றி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் பெள்ளி.

ஒரு யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெள்ளி, “ஃபாரஸ்ட் அதிகாரிகள் கிட்ட அனுமதி வாங்கிட்டோம். உங்களையும் ரகு பொம்மியையும்‌ படம் எடுக்கப்போறோம்ன்னு சொல்லி கார்த்திகி பொண்ணு வந்தது. சீக்கிரமே நாங்க நல்லா பழகிட்டோம். பெத்த மகள் மாதிரி நினைச்சுத்தான் கார்த்திகியோட பழகினோம். ரெண்டு வருஷமா வீடியோ எடுத்தாங்க. கல்யாணம் பன்னுற மாதிரி வீடியோ எடுக்கனும். அதில் ஊர் மக்களுக்கு சாப்பாடு போடுவது, கோயில் செலவு போன்றவற்றுக்கு உங்கள் பணத்தைக் கொடுங்க. அப்புறமா திருப்பிக் கொடுக்கிறேன்னு கார்த்திகி சொன்னாங்க. என்னோட மகள் இறந்தப்ப வந்த பணத்தை பேத்தி படிப்புக்காக போஸ்ட் ஆபீஸ்ல சேத்து வச்சிருந்தோம். அந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து செலவு செஞ்சோம். இப்போ வரை அந்தப்‌ பணத்தை கார்த்திகி திரும்ப கொடுக்கலை.

வாங்கிய பணத்தையே கொடுக்காதவங்க, எங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறேன், கார் வாங்கிக் கொடுக்கிறேன். பேங்க்ல பணம்‌ போட்டிருக்கேன்னு எல்லார்கிட்டயும் சொல்லிருக்காங்க. பேங்க்ல வந்து பாருங்க வெறும் 60, 70 ரூபாய் தான் எங்க அக்கவுண்ட்ல இருக்கு.

கார்த்தகிக்கு போன் பண்ணி கேட்டாலும் சரியான பதில் இல்லை. எங்களுக்கு மனசு வெறுத்துப் போச்சு. எதுவும் தெரியாமல் எதார்த்தமா இருந்து ஏமாந்துட்டோம். படிக்காத பழங்குடிகதானேன்னு எங்களை ஏமாத்தா நினைச்சா ஏமாத்திட்டுப்‌ போகட்டும். எங்க பேரக் குழந்தைகளை எப்படியோ படிக்க வச்சிக்கிறோம். கார்த்திகி நல்லா இருந்தா போதும்” என்று கூறியுள்ளார்.

இதுவரை தமிழ்நாடு அரசு சார்பில் அறிவித்த ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே  பொம்மன்-பெள்ளிக்கு கிடைத்துள்ளது. மும்பையில் நடைபெற்ற ஆஸ்கர் பாராட்டு விழாவில் கலந்துகொள்ள இருவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், திரும்ப வரும் வழியில்  அவர்கள் வழிச்செலவுக்கும் விமான நிலையத்தில் இருந்து ஊர் போய் சேர்வதற்கும் கூட ஆவணப்படம் எடுத்தவர்கள் பணம் கொடுக்கவில்லையாம். “சரி, போகட்டும். கார்த்தகி திரும்ப தருவதாக ஒப்புக்கொண்டு, ஆவணப்படத்துக்காக தாங்கள் செலவழித்த பணத்தையாவது தரவேண்டும்” என்பதுதான் இப்போது பொம்மன் – பெள்ளி கோரிக்கையாக இருக்கிறது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விமர்சகர் கார்த்திக் வேலு, “பொதுவாக ஆவணப்படங்களுக்கு ஊதியம் அளிப்பதில்லைதான். ஆனால், அதில் கலந்துகொள்வோருக்கு பயணம், இன்னெபிற செலவுகளுக்கு என்று பொதுவாக உதவித் தொகை அளிக்கப்படும். மேலும், பொம்மன் – பெள்ளி தம்பதியினரின் இருப்பு இல்லையென்றால் இந்த ஆவணப்படம் இல்லை. அவர்களை நீக்கிவிட்டால் இயக்குநரின் தனித்த திறமை மட்டுமே என்று இதில்  ஆஸ்கர் விருது அளவுக்கு ஏதும் இல்லை. யானைகளுடனான அவர்களின் உறவும் காட்டில் அவர்களின் வாழ்க்கை முறையுமே இந்த ஆவணப்படத்தின் ஈர்ப்புக்கு முதன்மை காரணம்.

கார்த்திகிக்கு இந்த ஆவணப்படம் அளித்திருக்கும் வெளிச்சம் மிகப்பெரிது. சர்வதேச அளவில் பல திரையிடல்கள் கிட்டியிருக்கிறது. படம் நெட்பிளிக்ஸில் திரையிடப்பட்டிருக்கிறது. அதன் மூலம் சிறிதேனும் வருமானம் வந்திருக்கும். அதில் ஒரு சிறுபங்கை இவர்களின் பேத்தியின் படிப்புக்கும் ஒரு சிறு வீடு கட்டுவதற்கும் உதவியிருக்கலாம். 

ஒருவேளை, ஆவணப்படம் மூலம் உண்மையிலேயே வருமானம் கிட்டவில்லை என்றால்கூட பொதுவில் இதை சொல்லி ஒரு கோரிக்கை வைத்திருந்தால் கூட உலகெங்கும் இருந்து உதவும் நோக்கம் கொண்டவர்கள் உதவியிருப்பார்கள்.

நிலமை இப்படியிருக்க, ஆவணப்படம் எடுக்கும் வரை ஒட்டி உறவாடிவிட்டு, அதன்பிறகு அவர்கள் யாரோ தான் யாரோ என்று கார்த்திகி நடந்துகொள்வது அழகல்ல. தான் உண்டு தன் யானை உண்டு என்று வாழ்ந்து வந்தவர்களுக்கு இந்த விவகாரம் நிம்மதியை குலைத்துப் போட்டிருக்கிறது” என்கிறார்.

பண மோசடி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் பெள்ளி தெரிவித்துள்ளார்.

பெள்ளியின் இந்த குற்றச்சாட்டு குறித்து ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...